ஜெயகாந்தன் ஒரு சொற்பொழிவில் இப்படிக் குறிப்பிடுகிறார்,
கும்பல் என்பது கூடிக் கலைவது; கூட்டம் என்பது கூடி வாழ்வது. கும்பல் என்பது கூடி அழிப்பது, கூட்டம் என்பது கூடி உருவாக்குவது. வன்முறையையும் காலித்தனத்தையும் கும்பல் கைக்கொள்ளும்; ஆனால், சந்திக்காது. கூட்டம் என்பது அடக்குமுறையையும், சர்வாதிகாரத்தையும் நெஞ்சுறுதியோடு சாத்வீகத்தாலும், சத்யாக்கிரகத்தாலும் சந்திக்கும்.
கும்பலுக்கு எல்லாமே ஒரு வேடிக்கை. மரணம் உட்பட. கூட்டம் இனிது கூடும்.; இனிது நிறைவேறும். கும்பல் எதற்கு என்று தெரியாமல் கூடும்; எப்படி என்று தெரியாது கலையும்.
கும்பல் என்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளூம் இருக்கிற அறியாமையின், பைத்தியக்காரத்தனத்தின் மொத்த உருவம்; அது ஒவ்வொரு மனிதனிலும் இருக்கின்ற மிருகங்கள் வெளிவந்து ஊளையிட்டு உறுமித் திரிகிற வேட்டைக் காடு.
கும்பல் ஒரு பலமல்ல; அது பலவீனங்களின் தொகுப்பு. கோழை அங்கேதான் கொலை வெறியனாகிறான்; பேடி அங்கேதான் காமப்பிசாசாகிறான்
••
ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலை மறுமுறை வாசித்துக் கொண்டிருக்கிறேன், இவ்வளவு துணிச்சல், பிடிவாதம், செய்ய விரும்பியதை செய்து காட்டும் திறன், வெளிப்படையான பேச்சு, வேறு எந்த எழுத்தாளருக்கும் கிடையாது, ஜேகே நம் காலத்தின் நாயகன்.
••