குரலின் ஈரம்.

ஷெரீப் எஸ். எல்முசா (Sharif Elmusa ) அமெரிக்காவில் வாழும் பாலஸ்தீனக் கவிஞர். பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைகள் அரபு அமெரிக்கன் கவிதைகளுக்கான இதழில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது மகளின் பெயர் கர்மா. I am Palestinian by birth, American by citizenship, Egyptian at heart. எனத் தன்னைப் பற்றிச் சொல்கிறார் எல்முசா.

Flawed Landscape என்ற அவரது கவிதைத் தொகுப்பினை வாசித்தேன்.. மூன்று பகுதிகளாக உள்ள தொகுப்பிது.

இதில் ஒரு கவிதை குட்டி இளவரசனைப் பற்றியது. ஆகாய ஆகாயத்திலிருந்து குண்டு போடும் விமானப்படை குண்டு வீச்சாளரிடம் சில கேள்விகள் என்பதாக இந்தக் கவிதை வெளிப்படுகிறது.

பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் மீது ஏன் குண்டு போடுகிறீர்கள் என்ற கேள்விக்கு விமானப்படை குண்டு வீச்சாளர் தான் குழந்தைகளைக் குறிவைத்து குண்டு போடவில்லை என்கிறார்.

தேன்கூட்டில் வசிக்கும் தேனீக்களைப் போல நகரெங்கும் குழந்தைகள் வசிக்கிறார்கள். அவர் மீது தானே உங்கள் குண்டு விழுகிறது எனப் பதில் கேள்வி கேட்கப்படுகிறது.

நான் குறிவைப்பது “கட்டிடத்தில் மறைந்திருந்த அரக்கர்களை” கொல்ல என்கிறான் விமானப்படை குண்டுவீச்சாளர்.

குண்டு வீச்சாளரின் தர்க்கத்தை ஏற்கமுடியாத குட்டி இளவரசன், பெரியவர்கள் சொல்லும் காரணங்கள் அபத்தமானவை என்று சொல்வதாகக் கவிதை நிறைவு பெறுகிறது.

இன்னொரு கவிதையில் அகதிகள் முகாமிற்குப் பெயரில்லை என்ற வரி இடம்பெறுகிறது. அதைக் கடந்து செல்ல முடியாமல் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருந்தேன். போரும் போரின் விளைவாக அழிந்த ஊர்களின் நினைவுகளுமே அவரது கவிதைகளில் பிரதானமாக வெளிப்படுகின்றன.

காஸா என்பது திறந்த வெளிச்சிறைச்சாலை. அது ஒரு மாபெரும் கூண்டு என நீளும் கவிதையில் சீனக்கவிஞன் தொலைதூர நிலவையும் குரங்கினையும் பார்த்துக் கொண்டிருப்பது போலக் காஸாவின் அகதிகள் முகாமை பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதுகிறார்.

என் தந்தையின் கண்ணுக்குள்

ஒரு நீர்த்தேக்கம் இருந்தது

அதை அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை

ஆனால் நான் அவரது குரலின் வழியே

கண்ணீர் சொட்டுவதைக் கேட்டேன்

சரியாக மூடப்படாத குழாயிலிருந்து சொட்டும்

நீர்த்துளியினை போல

முப்பது ஆண்டுகளாக

நான் அவற்றைக் கேட்டேன்.

என ஒரு கவிதையை எழுதியிருக்கிறார். குரலின் வழியே கண்ணீர் சொட்டுகிறது என்ற வரி அற்புதமானது. மிக அழகாக எழுதியிருக்கிறார்.

சொந்த ஊர் என்பது நம் பெயர்களைச் சரியாக உச்சரிக்கக் கூடிய இடம் என்றொரு மேற்கோளை ஒரு கவிதையின் முகப்பில் எழுதியிருக்கிறார். எவ்வளவு உண்மை.

” நீங்கள் தனிமையில் இருக்கும்போது

சூரியனுடன் நண்பராகிறீர்கள் ” என இத்தாலியிருந்த நீட்சே ஒரு நண்பருக்கு எழுதினார் என ஒரு கவிதை துவங்குகிறது

பொருட்கள் எப்படி இடம் மாறிப் போகின்றன என்பதைக் குறித்த கவிதையில், சிறிய மூடிகள், கரண்டிகள் ஏன் தன்னை மறைத்துக் கொள்வது போல இடம் மாறிப் போகின்றன என்ற கேள்வியை எழுப்புகிறார். முதுகில்லாத சின்னஞ்சிறு பொருட்கள் ஏன் ஒளிந்து கொள்கின்றன என்ற கேள்வி முக்கியமானது. இது தனது அகதி வாழ்வின் துயரைப் போன்றதே என்றும் உணருகிறார்.

குறைபாடுள்ள நிலப்பரப்பு என்பது பாலஸ்தீனத்தின் அடையாளம். ஒரு பக்கம் பாலஸ்தீனத்தின் யுத்தம், அழிவு என்ற சூழல் நிலவுகிறது. இன்னொரு பக்கம் அடுத்த வேளை உணவிற்கு என்ன சாப்பிடலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சுகவாசிகளின் வாழ்க்கை. இந்த இரண்டு நிலைகளுக்கும் நடுவில் எல்முசாவின் கவிதை ஒலிக்கிறது.

ஆலிவ் மற்றும் பேரீச்சம்பழம் கடந்தகால வாழ்வின் அடையாளமாக மாறுகின்றன. தன் தந்தையின் நினைவில் இருந்த பத்து ஆலீவ் மரங்களைப் பற்றி ஒரு கவிதையில் எழுதியிருக்கிறார்.

நாடு கடந்தவர்கள் காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டு தளங்களிலும் பாதிக்கப்படுகிறார்கள். ஜப்பானிய ஹைக்கூ கவிதை ஒன்றில்  கியோத்தோ நகரில் இருக்கும் ஒருவன் கியோத்தோவை நினைத்து ஏங்குகிறான். அவன் ஏங்குவது பால்யத்தில் அவன் கண்ட ஊரை. உடல்ரீதியாக அவன் கியோத்தோவில் இருக்கிறான். ஆனால் மனம் வேறு காலத்தில் வாழுகிறது. இது போன்றது தான் அகதியின் வாழ்க்கை. அவன் புகலிடத்தில் பிழைப்பிற்காக வாழுகிறான். அவன் மனதோ சொந்த தேசத்தை, சொந்த ஊரையே சுற்றிக் கொண்டிருக்கிறது.

கடந்தகாலத்தை நினைவுகொள்ளுவது ஒரு சுகம். தற்கால நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க இந்த நினைவுகொள்ளுதல் தேவைப்படுகிறது. அதை தன் கவிதைகளில் காணமுடிகிறது என்றும் எல்முசா, பாலைவனத்தைப் பற்றி ஒருவன் அறிந்து கொள்வதற்குப் பாலைநிலம் முழுக்க அலைந்து திரிய வேண்டியதில்லை. அதைப்பற்றி வாசித்தாலும் போதுமானது. சொற்களின் வழியே சூரியன் ஒளிர்வதைக் காணமுடியும். மணலின் நாட்டியத்தை அறிய முடியும். கவிதையும் அது போன்றது தான் என்கிறார்.

போரில் அழிந்து போன கிராமங்களின் சரித்திரத்தைத் தொகுத்து எழுதும் பணியில் தற்போது ஈடுபட்டிருக்கும் எல்முசா நினைவின் பாடல்களையே ஒலித்துக் கொண்டிருக்கிறார்

••

0Shares
0