குறுங்கதைகளின் வழியே

இந்த ஊரடங்கு காலத்தில் 125 குறுங்கதைகள் எழுதியிருக்கிறேன்.

குறுங்கதை எழுதுவது பெரிய நாவல் எழுதுவதை விடவும் மிகச் சவாலானது

குறுங்கதை எனும் வடிவம் இல்லாத நாடேயில்லை. அதை மிக அதிகமாக மதம் பயன்படுத்தியிருக்கிறது. கதை சொல்லாத ஞானியே இல்லை.

நாட்டுப்புறக்கதைகளில் குறுங்கதை வடிவமே பிரதானமாக உள்ளது. எழுத்து மரபு உருவானபிறகு தான் குறுங்கதைகள் நீட்சியடைந்தன.

நவீன இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதை வடிவத்தைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மெய் தேடல், தத்துவம் மிகைபுனைவு. மயா யதார்த்தம், கனவுத்தன்மை, புதிர்தன்மை, அறிவியல் குறுங்கதைகள். பாலியல் குறுங்கதைகள். பயணக்கதைகள், யதார்த்தக் கதைகள் எனப் பல்வேறு விதமாகக் குறுங்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

நான் குறுங்கதை வடிவத்தைக் கவிதைக்கும் கதைக்கும் இடைப்பட்ட ஒன்றாகக் கருதுகிறேன். கவிதை தத்துவத்தை கையாளுவதைப் போலவே குறுங்கதைகளில் தத்துவம் கையாளப்படுகிறது. குறியீடுகள். உருவகங்கள். கவிதை போலவே செயல்படுகின்றன.

நகுலன் வீட்டில் யாருமில்லை என்ற குறுங்கதைகளின் தொகுப்பினை பத்து ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டிருக்கிறேன். அதன் அடுத்த கட்ட நகர்வே இந்தக் கதைகள்.

குறுங்கதை வடிவத்தையும் அதன் கருப்பொருளையும் பல்வேறு நிலைகளில் கலைத்தும் சிதறியும் சிதறடித்தும் ஒன்றுசேர்த்தும் சுழலவைத்தும் மாறுபட்ட குறுங்கதைகளை எழுதியிருக்கிறேன்.

இந்தச் சவாலை அன்றாடம் எதிர் கொள்வது எழுத்துப்பணிக்கு முக்கியமானது. சிறியதே அழகு என்பது குறுங்கதைகளுக்கு மிகப்பொருத்தமான வார்த்தை.

குறுங்கதைகளை பற்றிப் பலரும் புதுப்புது விளக்கங்கள். வியாக்கியானங்கள் கொடுத்து வருகிறார்கள். அவை எனக்கு முக்கியமில்லை. தனக்குத் தெரிந்த கதை சொல்லும் கலையைக் கொண்டு ஒரு சிறுவன் விதவிதமாக கதைகளைச் சொல்லிப் பார்க்கிறான். அதைப் போன்றது தான் என் எழுத்தும்.

எனது இணையதளத்தில் வெளியான இந்தக் கதைகள் அன்றாடம் மூவாயிரம் முதல் பதினைந்தாயிரம் பேர்களால் படிக்கப்பட்டது. இதனை பற்றிக் குறைந்தபட்சம் இருபது மெயில்கள் வருவதுண்டு. இயக்குநர் வசந்தபாலன் நூறு குறுங்கதைகள் குறித்து அழகான விமர்சனம் ஒன்றை எழுதியிருக்கிறார். சிலர் அன்றாடம் இக்கதைகளைப் படித்து என்னோடு தொலைபேசியில் பேசுவது வழக்கம்.

இந்தக் கதைகள் நிறைய இளைஞர்களால் படிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியானது. ஒரு சிலர் விருப்பமான கதையை குறும்படமாக இயக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். விரைவில் ஐந்தாறு குறும்படங்கள் வெளியாகக் கூடும்

125 கதைகளை எழுதி முடிப்பதற்குள் சிறுகதைகள் எழுதுவதற்கான மனநிலை கூடிவிட்டது.

எனக்கு மிகவும் நெருக்கமாக இருப்பது சிறுகதையே. சிறுகதைகளின் வழியே தான் என் எழுத்து வாழ்க்கையை துவக்கினேன். தாவரங்களின் உரையாடல் என்ற எனது சிறுகதை உருவாக்கிய அலை இன்று வரை தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது

புதிய சிறுகதைகளை எழுத ஆரம்பித்தபிறகு குறுங்கதைகளிலிருந்து மெல்ல விடுபட்டேன்.

இந்தக் குறுங்கதைகள் தொகுக்கப்பட்டு தேசாந்திரி பதிப்பகத்தால் தனி நூலாக வெளியிடப்படும்

இக்கதைகளை வாசித்து உற்சாகம் அளித்த கவிஞர் தேவதச்சன். ஆசான் எஸ்ஏபி, மனைவி சந்திரபிரபா, சுபாஷினி, உஷா, ஹரிபிரசாத், சண்முகம், ஆடிட்டர் சந்திரசேகர், கவிஞர் ஷங்கர ராம சுப்ரமணியன், தயாஜி, ஸ்ரீதர்  உள்ளிட்ட பல்வேறு நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

••

30.7.20

0Shares
0