குறுங்கதைகள் – இயக்குநர் வசந்தபாலன்

இணையத்தில் நான் எழுதி வரும் குறுங்கதைகள் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது வாசிப்பு அனுபவத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

அவருக்கு என் மனம் நிரம்பிய நன்றி

••

எஸ் ராவின் 100 குறுங்கதைகள் குறித்து

வசந்தபாலன்

இந்த பெருந்தொற்று காலத்தின் அருமருந்தாக ஜெயமோகன் எழுதிய 69 சிறுகதைகளையும், எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகளையும் கூறுவேன். தமிழ் இலக்கிய உலகில் கிழக்கு மேற்கும் ஆங்காரமாய் எழுந்து நிற்கும் யானைகள் இவர்கள். கொரோனோ பற்றிய செய்திகள் ஈக்களைப் போல சுற்றிக் கொண்டிருக்கும் என் அதிகாலையை, இந்த இரண்டு ஜாம்பவான்களின் கதைகளின் வழியாகவே திறப்பேன்.

ஜெயமோகன் தன் வாழ்க்கை,தன் நிலம்,பணிபுரிந்த தொலைபேசி அலுவலகம்,யானை,தத்துவம்,வரலாறு என பல வண்ணங்களைத் தொட்டு சிறுகதைகளில் வர்ணஜாலங்கள் காட்டினார். உடல் தீ பற்றியெறியும் சிறுகதைகள் அவை.

எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 100 குறுங்கதைகள் அதிலிருந்து முற்றிலும் வேறு சுவையுடையவை.வேறு மணம் கொண்டவை.

வேறு வடிவம் கொண்டவை.ஈசாப் நீதிக்கதைகள் போன்று தோற்றம் தரக்கூடிய எளிய கதைகள். எந்த உணர்ச்சிப்பெருக்குமின்றி,எந்த அலங்கார வார்த்தைகளுமின்றி உயர்ந்த தத்துவத்தை, நீதியை கட்டமைக்கின்றன.

அம்மாவின் புத்தகம் போன்ற கதைகள் வாழ்க்கைப்பற்றிய எளிய கேள்விகளை கேட்கின்றன.சிலசமயம் பதிலை கூறுகின்றன.சில சமயம் பதிலை மறைத்து வைத்து கொண்டு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகின்றன.

கர்னலின் நாற்காலி போன்ற குறுங்கதைகளுக்குள் பெரும் காப்பியமே ஒளிந்திருக்கின்றது.

பறவைகளின் தையற்காரன் போன்று மாய யதார்த்தவாதம் பேசும் கதைகள் ஒரு கனவைப்போல நம்மை வாழ அழைக்கின்றன.

காதலுற்ற சிற்பங்கள் போன்ற குறுங்கதை தவறவிடக்கூடாத மின்மினிப்பூச்சியின் ஒளியாய் தெரிகிறது.

வழி தவறி வீட்டிற்குள் வந்த வண்ணத்துப்பூச்சி நம்மை மனிதமலர் என எண்ணி வந்தமருமே அந்த தருணத்தை சிரிக்கும் நட்சத்திரம் போன்ற சில கதைகள் வழங்குகின்றன.

நூறு வயதைக் கடந்து வாழும் ஒரு கதைசொல்லி குழந்தைகளை அமர வைத்து சொல்லும் அழியாக்கதைகளாக இந்த குறுங்கதைகளைப் பார்க்கிறேன்.

அரசனின் தூண்டில் என்ற குறுங்கதையில் வருகிற மன்னன் எல்லையற்ற அதிகாரங்கள் உடையவன்,அவன் ஒரு சர்வாதிகாரியும் கூட. அவன் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வீசுகிறான். மீன்கள் சிக்கவில்லை. பகலிரவாய் தூண்டில் வீசியவண்ணம் இருக்கிறான். மன்னன் என்பதால் அவன் வீசிய தூண்டிலில் மீன்கள் சிக்கிக்கொள்ள வேண்டுமா என்ன ? அவனுடைய அதிகாரத்தை எளிய மீன்கள் கேலிக்குரியதாக்குகின்றன.ஆணவத்தை தகர்க்கின்றன.மனிதர்கள் மீது வேண்டுமானால் உங்கள் அதிகாரத்தை காட்டி பரிபாலனம் செய்துக் கொள்ளலாம்.ஆனால் இயற்கை மீது யாரும் அதிகாரம் செலுத்த இயலாது. இயற்கை உங்களை அடிபணியவைக்கும்,கதற வைக்கும். கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் உலகை ஒரு ஆட்டு ஆட்டுகிறதே.  தப்பிக்கமுடிகிறதா என்ற எளிய கேள்வியை இந்த கதை கேட்கிறது.

இன்னொரு கதையில் தண்ணீர் குடிக்க வந்த புலி தன்னைப் பார்த்து பயப்படாமல் துள்ளிக் குதித்தாடும் சிவப்பு கெண்டை மீனைப் பார்த்து காதலிக்கத் துவங்கிவிட்டது. மனிதன் இயற்கையை வேட்டையாடத் துடிக்கிறான்.மனிதனைத்தவிர மற்ற அனைத்தும் இயற்கையை ஆராதித்து, அதனுடனேயே இயைந்து வாழ ஆசைப்படுகிறது என்பதைத் தான் புலி கெண்டை மீன் மீது கொண்ட காதல் கதை சொல்ல வருகிறது.

தன் கவலைகளுக்காக பிரார்த்திக்கும் ரோபோ ஒன்றை ஒருவன் கண்டுபிடிக்கிறான். தன் சுகங்களுக்காக இறைவனின் சன்னதியில் சென்று வேண்டுவதற்கு பயிற்சி தருகிறான். அதன் செயல்பாடுகளில்  திருப்தி தராமல் வெறுப்புற்று அந்த ரோபோவை கழட்டி எறிகிறான். அதன் பிறகு அவன் ஒரு பெண் திருமணம் செய்து கொள்கிறான் என்கிற கதை ஹைக்கூப்போல இந்தியப்பெண் பற்றிய வாழ்க்கைச் சித்திரத்தை வரைகிறது.

இன்னொரு கதை இப்படி துவங்குகிறது வெளியூர் செல்லும் நேரங்களில் அவன் தன் மனைவியை ஒரு சூட்கேஸ் போல உருமாற்றி எடுத்துச்சென்று விடுவான் இந்த ஒரு வரி போதும் இந்திய ஆண்களின் ஆணாதிக்க மனநிலையை மீது இருமி வைரஸ் பரவ விட. இப்படி நறுக் தெறித்தாற் போல கச்சிதமான கதைகள்.

எஸ் ரா சிறுகதைகளின் கருவை கண்டடைவதை கண்டு நான் வியந்திருக்கிறேன்.வரலாற்று மனிதர்கள் தவற விடும் இடைவெளிகளை கச்சிதமாக எடுத்து கதைகளாக்கிவிடுவார்.அப்படி இந்த 100 சிறுகதைகளில் பல அற்புதமான கதைகள் உள்ளன.

உலகின் உயர்ந்த இலக்கியமாக கொண்டாடப்படும் டால்ஸ்டாயின் அன்னகரீனாவில் அன்னாகரீனா பொம்மை வாங்கினாள் என்ற இடத்தை அபகரித்து ஒரு கதை எழுதியிருக்கிறார். தன்னைப்பிரிந்து வாழும் மகனுக்கு “உண்மையில் அன்னா தன்னையே ஒரு பொம்மையாக்கி மகனிடம் தரவே விரும்பினாள்” என்று எழுதுகிறார் எஸ்.ரா. அதுவும் அந்த என்ன பொம்மையாம் ?

“கடைப்பையன் பொம்மையை இயக்கி காட்டினான். பொம்மையின் இதயப்பகுதியிலிருந்த சிறிய கதவு திறந்து சிவப்புக்குருவி வெளியே எட்டி சப்தமிட்டது.எல்லோர் இதயத்திற்கும் இப்படியொரு சிறு குருவி இருக்கத்தானே செய்கிறது.” என்கிறார் எஸ்.ரா.

என் இதயத்தைத் தொட்டு பார்த்து கொண்டேன். சாலையில் கை ஏந்தும் எத்தனையோ புலம் சார் தொழிலாளர்களை கண்டும் காணாதது போல தானே முகம் மூடி முகக்கவசத்துடன் கடக்கிறேன். எனக்குள் குருவியும் இல்லை, இதயமும் இல்லை என்று அந்த கதையில் வாழும் குருவி என்னை வெட்கிச் கூனி குறுகச் செய்தது.

இந்த தொகுப்பில் ஒரு துளிக்கண்ணீர் என்றொரு கதை தான் என்னை உலுக்கியது. இந்த கதையைப் படித்த பிறகு தான் உலகில் கண்ணீரை விட எடையுடையது எதுவுமில்லை என்று தெரிய வந்தது.அலுவலக நண்பன் ஒருவன் நாதனை தன் வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட அழைக்கிறான். நாதன் அவ்வீட்டிற்கு சாப்பிட செல்லும் வேளையில் கணவன் மனைவியிடையே சின்ன சண்டை நிகழும் சப்தம்,  சமையற்கட்டில் இடுக்கின் வழியாக கசிகிறது. நாதனுக்கு அந்த பெண் சோறு பறிமாறும் போது அவளை அறியாமல் ஒரு துளிக்கண்ணீர் சாப்பாட்டில் விழுந்து விடுகிறது.அதை நாதன் கவனித்து விடுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படி சாப்பிடுவது என்று தெரியாமல் தடுமாறுகிறான். துளிக்கண்ணீர் விழுந்த உணவை எப்படி சாப்பிடுவது இந்த வரி என்னை கொந்தளிக்க வைத்தது. அந்த துளிக்கண்ணீர் அவனை தூங்கவிடவில்லை. வேலை மாற்றலாகிக் கொண்டு ஓடக்கூடிய துயரத்தை அளித்துவிட்டது. துளிக்கண்ணீர் விழுந்து உணவு என்ற சொற்றொடர் பல்வேறு வினாக்களை இந்திய சமூகம் நோக்கி எழுப்புகிறது. இத்தனை வருடங்களாக நாதன் பெண்ணின் கண்ணீரை காணாதவனா ?

நம் சமையலறைகள் பெண்ணின் கண்ணீரால் தானே நிரம்பி வழிகிறது. கண்ணீரின் ருசி கலக்காத எந்த உணவும் இல்லை என்பது நாதனுக்கு தெரியுமா? தெரியாதா? இந்த ஒட்டு மொத்த ஆண்களும் அது தெரியாமல் தான் வக்கணையாக குறை கூறியபடி சாப்பிடுகிறார்களா என்று அடுத்தடுத்த கேள்விகளை அந்த குறுங்கதை எனக்குள் எழுப்பியவண்ணம் இருக்கிறது.

கானலை அருந்தும் யானையாக இந்த கதைகளை அமுதென எண்ணி உண்டு கிறங்கி மயங்கி கிடக்கிறேன். இந்த குறுங்கதைக்குள் ஒளிந்திருக்கும் பெருங்கதைகளை கண்டறிவதில் தான் இந்த கதையின் வெற்றி இருக்கிறது. சூத்திரங்கள் போல் குறுங்கதைக்குள் பல திறப்புகளை உண்டாக்கிய எஸ்ரா வாசகன் திறந்து கொள்வான் என்று விட்டு வைத்திருக்கிறார். வழியும் கண்ணீரை அவசரமாக துடைத்து விட்டு செல்வதும் அதை உள்ளங்கையில் ஏந்தியவண்ணம் மனதிற்குள் நுழைவதும் நம் வாசிப்புத் தவம்.

அன்பு எஸ்.ரா !  சலனமில்லாத நதி போல சென்று கொண்டிருக்கிறீர்கள்.

உங்களின் நதியில் நீர் அருந்தும் சிறுபறவை நான்.

இந்த கதைகளின் வழியாக இந்த சிறு பறவைக்கான பல வானங்களை பரிசளித்துள்ளீர்கள்.

நன்றி எஸ்.ரா.

•••

10.6.20

0Shares
0