மேற்குமலையின் அடர்ந்த வனத்தை நெடுங்காடு என்றார்கள். அந்த நெடுங்காட்டினை அடுத்த கிராமம் ஒன்றில் ஆதன் என்ற தையற்காரன் வசித்து வந்தான். இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் தானே ஊசிகள் செய்து தனது கையால் அவன் தையல்வேலைகள் செய்துவந்தான். கிராமவாசிகளுக்கான உடைகளைத் தைத்துக் கொடுப்பதல்ல அவனது வேலை. அவன் பறவைகளின் தையற்காரன். பறவை தனது உதிர்ந்த இறகினை கவ்விக் கொண்டு வந்து அவனிடம் தந்து தனது ரெக்கையோடு சேர்த்துத் தைத்துவிடச் சொல்வது வழக்கம். தனது விசேச ஊசிகளைக் கொண்டு கச்சிதமாக அதைப் பொருத்தி விடுவான். இதனால் அவனைத் தேடி பறவைகள் காட்டிலிருந்து வந்தபடியேயிருந்தன. சில நேரம் பறவைகளின் கூட்டம் அவன் வீட்டுக் கூரை முழுவதும் அமர்ந்தபடியே சபதமிட்டுக் கொண்டிருப்பதை ஊர்மக்கள் கண்டிருக்கிறார்கள். பறவைகள் அவனுக்காகக் காட்டிலிருந்து ருசி மிக்கப் பழங்களைக் கொண்டு வந்து தந்தன.
நெடுங்காட்டில் பச்சைக் குக்குறுவான், கருங்காடை, கொண்டலாத்தி, மஞ்சள் சிட்டு, கொண்டைக்குருவி, கல்குருவி எனப் பல்லாயிரம் பறவைகள் வசித்தன. அதில் சில மனிதர்கள் கண்ணில் படவே படாதவை. ஓசனிச்சிட்டு என்ற பின்னோக்கி பறக்கும் பறவை கூட அங்கேயிருந்தது. மற்ற பறவைகளின் குரலினைக் காப்பியடித்து அப்படியே பாடும் திறமை கொண்ட ஸ்டார்லிங்ஸ் பறவை கூட அக்காட்டிலிருந்தது.
ஆதனைக் கண்டு பறவைகள் ஒரு போதும் பயன்கொண்டதேயில்லை. மரத்தின் கிளையில் வந்து அமர்வதைப் போலவே அவன் தோளில், தலையில் பறவைகள் வந்து அமர்வது வழக்கம். அவன் யாரிடம் பறவைகள் மொழியைக் கற்றுக் கொண்டான் எனத் தெரியவில்லை. பறவைகளுடன் தானும் ஒரு பறவை போலவே ஆதன் உரையாடுவான்.
ஒரு நாள் ஆதனைத் தேடி ஆயிரம் கண் பறவை வந்திருந்தது. இத்தனை ஆண்டுகளாக அதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த போதும், ஆதன் அப்போது தான் முதன்முறையாகப் பார்க்கிறான். இளமஞ்சள் நிறத்தில் கொக்கினை விடச் சற்றே பெரிய உடல். விசிறி போல வால். உடல் முழுவதும் சிவப்பும் நீலமும் கலந்த கண்கள். மயில் தோகையை விடவும் மாறுபட்ட கண்கள். ஈயின் கண் அளவில் யாரோ தேர்ந்த சித்திரக்காரன் இறக்கை முழுவதும் வரைந்துவிட்டது போன்ற அழகு. ஆயிரம் கண் பறவை தனது உதிர்ந்த இறகை இணைக்கச் சொன்னது.
விசித்திரமாக இருக்கிறது இந்தக் கண்கள் என்றான் ஆதன், மின்னல்வெட்டும் போது இந்தக் கண்கள் திறந்து கொள்ளும். அப்போது பார்க்க வேண்டும் இதன் அழகை என்று பெருமையாகச் சொன்னது ஆயிரம் கண்பறவை.
ஆதன் அந்த இறகைச் சேர்த்துத் தைக்கும் ஊசி தன்வசமில்லை. அதைச் செய்து முடிக்க இரண்டு நாள் ஆகும். அதுவரை இறகு என்னிடம் இருக்கட்டும் என்றான்.
ஆயிரம் கண் பறவை அதற்குச் சம்மதித்துப் பறந்து போனது. உண்மையில் ஆதன் அந்தக் கண்கள் மின்னல் வெளிச்சத்தில் எப்படித் திறந்து கொள்கின்றன என்பதைக் காண விரும்பினான். அதற்காகவே ஊசியில்லை என்று பொய் சொன்னான்.
நாம் விரும்பும் போது மின்னல் தோன்றுமா என்ன.
அவன் மின்னலுக்காகக் காத்திருக்கத் துவங்கினான். ஆயிரம் கண் பறவை ஒவ்வொரு முறை வரும்போதும், இன்னும் ஊசி தயார் ஆகவில்லை என்று சொல்லி அதை அனுப்பியபடியே இருந்தான்.
ஆதன் தன்னை ஏமாற்றுகிறான் என்று சந்தேகம் கொண்டு அந்தப் பறவை தனது இறகைத் திருப்பிக் கொடு என்றது. எங்கோ கைமறந்து வைத்துவிட்டேன். தேடித் தருகிறேன் என்று பொய் சொன்னான். இதைக் கேட்ட ஆயிரம் கண் பறவை நீ என்னை மோசம் செய்கிறாய். பறவையின் இறகு பறவைகளுக்கு மட்டுமே சொந்தமானது. அதை மனிதர்கள் தனதாக்கிக் கொள்ள முடியாது. நீ அப்படி ஆசைப்பட்டதால் இனி உன் திறமை அழிந்து போகும் என்று சபித்துப் போனது.
ஆதன் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆயிரம் கண் பறவையின் சாபம் பலிப்பது போல அவனது விசேச திறமை அவனைவிட்டுப் போனது. அவனால் பறவைகளின் இறகைப் பொருத்தித் தைக்க முடியவில்லை. அவனைத் தேடி பறவைகள் வருவது நின்று போனது.
அவனிடம் ஒரேயொரு இறகு மட்டுமே மிச்சமிருந்தது
அது ஆயிரம் கண் பறவையுடையது.
ஒரு மழைநாளில் மின்னல் வெட்டும் போது ஆதன் அந்த இறகைக் கையில் எடுத்து வானை நோக்கிக் காட்டினான்.
ஆச்சரியம், சித்திரம் போல இருந்த கண்கள் சட்டெனத் திறந்து கொண்டன. விளக்கின் சுடர் போல அந்தக் கண்களில் நீல வெளிச்சம் மினுங்கியது. அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அவனைச் சூழ்ந்து கொண்டது. பின்பு மெல்ல அந்த வெளிச்சம் வீடு முழுவதையும் நிரப்பியது. வான் உயரத்திற்கான பேரலை போல நீலவெளிச்சம் அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டது. அந்த வெளிச்சம் வடியும் போது ஆதன் மயங்கியிருந்தான். அவன் கண்பார்வை பறி போயிருந்தது. அதன்பிறகான நாட்களில் அவன் பிரம்மை பிடித்தவன் போல அமர்ந்திருந்தான். எவரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனைப் போலப் பின்னொரு பறவைகளின் தையற்காரன் தோன்றவேயில்லை. ஆயிரம் கண் பறவையை அதன்பின்னர் ஒருவரும் நேரில் காணவுமில்லை.
••
30.01.20