குறுங்கதை 100 கடிகாரத் திருடன்

அந்தப் பிக்பாக்கெட் திருடன் முதன்முறையாகக் காந்தியை ஒரு ரயில் நிலையத்தில் தான் பார்த்தான். ஆயிரக்கணக்கில் மனிதர்கள். ஒரே தள்ளுமுள்ளு. ரயிலை விட்டு காந்தியை இறங்கவிடவில்லை. எங்கிருந்து இவ்வளவு பேர் திரண்டு வந்திருந்தார்கள். எதற்காக இந்த மனிதரை இப்படி வணங்குகிறார்கள் என்று அவனுக்குப் புரியவேயில்லை.

ஆனால்  சட்டையில்லாத உடலுடன் அந்தக் கிழவர் புன்சிரிப்புடன் நிற்பதைப் பார்க்கையில் மனதில் ஏதோவொரு ஈர்ப்பு உருவானது. கூட்டத்தோடு சேர்ந்து அவனும் காந்தியைப் பார்த்துக் கையசைத்தான். காந்தி இரண்டு நிமிடங்கள் பிளாட்பாரத்தில் நின்று பேசிவிட்டு மறுபடியும் ரயிலேறிக் கொண்டுவிட்டார். காந்தியின் ரயில் போனபிறகும் கூட்டம் கலைந்து போகவில்லை. அவரைப் பற்றியே வியந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு அந்தத் திருடன் காந்தி பேசிய இரண்டு மூன்று கூட்டங்களைக் கேட்டான். ஏனோ அவரது தோற்றமும் பேச்சும் அவனுக்குத் தனது தந்தையை நினைவுபடுத்தியது. அவரும் இப்படிதான் மென்மையான குரலில் பேசுவார்.

காந்தியை தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்

ஆனால் இத்தனை ஆயிரம் மனிதர்களைத் தாண்டி அவரை எப்படி அணுகுவது. என்ன பேசுவது என்று அவனுக்குப் புரியவில்லை. அதை விடவும் தன்னைப் போன்ற பிக்பாக்கெட் ஒருவனின் வீட்டிற்கு வர அவர் எப்படிச் சம்மதிப்பார் என்றும் கவலையாக இருந்தது.

அதன் காரணமாகவே அவரது பொருள் ஏதாவது ஒன்றைத் திருடி விடலாம் என்று முடிவு செய்தான்

காந்தியிடம் திருடுவதற்கு என்ன இருக்கிறது. அவரது சிரிப்பைத் திருடவே முடியாது.

அப்போது ஒரு நாள்  ரயிலை விட்டு இறங்கிய காந்தி ஒரு கடிகாரத்தைத் தனது இடுப்பில் கட்டி தொங்க விட்டிருப்பதைக் கண்டான். அதைத் திருடுவதற்காகவே கூட்டத்திற்குள் இடித்துக் கொண்டு சென்றான். காந்தியை நெருங்க நெருங்க வாட்சைத் திருடுவதை விடவும் அவரை ஒருமுறை தொட்டால் போதும் என்ற மனநிலை உருவானது.  கூட்டம் அவனை உள்ளே விடவில்லை. மனிதர்களின் கால்களுக்குள் நுழைந்து அவன் காந்தியை நெருங்கியிருந்தான்.

காந்தியின் இடுப்பில் தொங்கிய கடிகாரம் அவன் கண்ணில் பட்டது. மறுநிமிசம் அவனது கைகள் அந்தக் கடிகாரத்தைப் பறித்து எடுத்துக் கொண்டன. கூட்டத்தோடு காந்தி ரயில் நிலையத்திலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருந்தார்

வீடு திரும்பிய திருடன் தன் வீட்டிற்குக் காந்தி வந்திருப்பதாக நம்பினான். அந்தக் கடிகாரத்தைக் கண்ணில் தொட்டு வணங்கினான். அவனுக்குக் கடிகாரத்தில் மணி பார்க்கத் தெரியாது. அவன் தலைமுறையில் எவரும் கைக்கடிகாரம் கட்டியவர்கள் இல்லை. சூரியன் தான் அவனது கடிகாரம்.

அவன் தனது மனைவி பிள்ளைகளிடம் அது காந்தியின் கடிகாரம் என்று சொல்லி மகிழ்ந்தான். அவர்கள் அதை நம்பவில்லை. இரவெல்லாம் அந்தப் பாக்கெட் கடிகாரத்தை அணைத்தபடியே உறங்கினான்.

ஐந்து ஷில்லாங் கொடுத்து வாங்கிய தனது பாக்கெட் கடிகாரம் திருடு போனது காந்தியை வருத்தப்படுத்தியது. பொம்மையைத் தொலைத்த சிறுமியைப் போல வாடிப்போனார். வேறு கடிகாரம் வாங்கிக் கொள்வோம் என ஆலோசனை சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடிகாரம் திருடப்பட்டது என்பது மக்கள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை பறிபோனதன் அடையாளம் என்பதாகவே காந்தி உணர்ந்தார்.

தன்னிடம் கடிகாரத்தைத் திருடிய  திருடனைப் பற்றியே அவரும் அன்றிரவு நினைத்துக் கொண்டிருந்தார்.

காந்தியின் கடிகாரம் திருடு போனதைப் பற்றிப் பேப்பரில் கூடச் செய்தி வெளியானது.

சில நாட்களுக்குப் பிறகு திருடன் தானே பாக்கெட் வாட்சை காந்தியைத் திருப்பிக் கொடுப்பதற்காகச் சபர்மதி ஆசிரமம் சென்றான். உள்ளே  பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்த தொண்டர்களில் ஒருவனிடம் அந்தக் கடிகாரத்தைக் காந்தி வசம் ஒப்படைக்கும்படி தந்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டான்.

பிரார்த்தனைக்குப் பிறகு காந்தி எழுந்து கொண்டபோது அந்தக் கடிகாரத்தை அவரிடம் கொண்டு போய் ஒப்படைத்தார்கள். காந்தி அதைக் கையில் வாங்கியதும் முகம் மலர சிரித்தார். பின்பு அந்தக் கடிகாரம் ஓடுகிறதா எனச் சந்தேகமாகப் பார்த்தார். கடிகாரம் நன்றாக ஒடிக் கொண்டிருந்தது. இன்னும் சந்தோஷமாக நன்றி நன்றி என்று இரண்டு முறை சொன்னார்.

கடிகாரத்தைக் கொண்டுவந்தவனைத் தேடினார்கள்.

நன்றியில் ஒன்று தனக்கானது என்று உணர்ந்தவன் போல திருடன் மிகுந்த சந்தோஷத்துடன்  கூடத்தை விட்டு வெளியேறிப் போய்க் கொண்டிருந்தான்.

••

0Shares
0