குறுங்கதை 101 அவனது விளையாட்டு

அந்தச் சிறுவனுக்குப் பந்து அல்லது பொம்மைகளை வைத்து விளையாடுவதில் விருப்பமில்லை. அவன் காணும் பொருட்களுக்குப் புதிய பெயர்களை வைத்து விளையாடும் வழக்கம் கொண்டிருந்தான். குறிப்பாக அவன் வீட்டினைக் கடந்து தினமும் வாத்துக்கூட்டம் செல்வதைக் காணுவான். அந்தக் கூட்டத்தில் விடுபட்டது போலத் தனியே இரண்டு வாத்துகள் செல்வது வழக்கம்.

அந்த வாத்துகளுக்குக் கினா டினா என அவனாக ஒரு புதுப்பெயர் வைத்தான். தன் பெயர் பற்றி எதுவுமறியாத வாத்து எப்போதும் போல மெதுவாக நடந்து போனது. அந்த வாத்துகளுக்கு மட்டுமில்லை. தன் வீட்டிலிருந்த ஆட்டுக்குட்டியை கீட்டுக்குட்டி என்று அழைத்தான்.

டம்ளர் தட்டு கண்ணாடி சீப்புச் செருப்பு என எல்லாவற்றுக்கும் புதிய பெயர்கள் வைத்தான். பெயர்களை வைக்க ஆரம்பித்தவுடன் உலகம் புதிதாக உருமாறுவதைக் கண்டான்.

உதாரணத்திற்கு இதுவரை சுந்தர் என்ற பெயரில் அவனுக்கு ஒரு நண்பன் கூடக் கிடையாது. ஆனால் இப்போது சுந்தர் என்ற பெயரில் அவனுக்கு ஒரு டம்ளர் நண்பனாக மாறியது. இது போலவே சைக்கிள் என்பதற்குப் பறக்கும் தட்டு என்று பெயர் மாற்றியவுடன் விந்தையான பொருளைப் போலத் தோன்றியது. உண்மையில் எல்லாப் பெயர்களும் எல்லாப் பொருட்களுக்கும் பொருந்துவதாகவே இருந்தன.

இந்த விளையாட்டின் அடுத்த கட்டமாக அப்பாவை அம்மா என்றும் அம்மாவை அப்பா என்றும் தாத்தாவைப் பாட்டி என்றும் பாட்டியைத் தாத்தா என்று மனதிற்குள் அழைக்க ஆரம்பித்தான். பாட்டி சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வேடிக்கையாக இருந்தது. பஸ் டிரைவராக இருந்த அப்பாவை அம்மா என மாற்றியதும் அம்மா பஸ் ஒட்டுகிறாள் என்பது புதியதாக இருந்தது. அத்தோடு இதுவரை அப்படி எந்த அம்மாவும் பஸ் ஒட்டியதில்லை என்ற நினைப்பும் வந்து போனது

புதிய பெயர்களை அந்தப் பொருட்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இறக்கையை உதிர்க்கும் பறவையைப் போல அந்தப் பெயர்களை உதிர்த்துவிட்டுப் பொருட்கள் பழைய பெயருக்கே திரும்பிவிடுவது அந்தச் சிறுவனுக்குப் புதிராக இருந்தது.

போலியோ பாதித்த கால்களுடன் வீட்டிலே தனித்துவிடப்பட்ட அந்தச் சிறுவனுக்கு கற்பனையைத் தவிர வேறு என்ன விளையாட்டுப் பொருள் கிடைக்கக் கூடும். சொல்லுங்கள்

•••

0Shares
0