குறுங்கதை 102 கவிதையின் வரவேற்பரை

கவிதையின் வரவேற்பரை‌ மிகவும் சிறியது. அதில் எப்போதும் சிலர் காத்துக் கொண்டிருந்தார்கள். எதற்காக. யாரைக் காண எனத் தெரியவில்லை.‌ஆனால் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.

ஒருவன் சொன்னான் கவிதையில் தோன்றும் சூரியனும் நிலவும் மறைவதேயில்லை. அதைக் காணவே காத்திருக்கிறேன். மற்றவன் சொன்னான் கவிதையினுள் பால்யத்தின் வெண் கடல் இருக்கிறது அதை தேடி போகவே வந்திருக்கிறேன். அடுத்தவன் சொன்னான் கவிதையின் வழியே ரகசிய உலகிற்கு போகமுடியும் என்கிறார்களே அதற்கு தான் காத்திருக்கிறேன். நான்காம் ஆள் சொன்னான் கவிதையினுள் பெண் பறக்கும் உடல் கொண்டு விடுகிறாள். அவளோடு சேர்ந்து பறக்க விரும்புகிறேன். வேறு ஒருவன் சொன்னான் கவிதையில் நித்தியத்தின் ரயில் ஓடுகிறது. அதில் ஏறி கொள்ள காத்திருக்கிறேன். கவிதையில் சிறிய பொருட்கள் பாடத் துவங்குகின்றன. அதைக் கேட்க விரும்புகிறேன் என்றான் இன்னொருவன். கடைசி ஆள் சொன்னான் கவிதையில் வெட்டவெளியில் மலர்கள் அரும்பு கின்றன. இறந்தவரின் எலும்புகள் நீதி கேட்கின்றன. நிசப்தத்தின் வாள் உயருகிறது. கண்ணீர் துளிகள் கேள்வி கேட்கின்றன. கவிதையில் வாழ காத்திருக்கிறேன். வரவேற்பரையில் இருந்தவர்கள் அவரவர் கதவை தள்ளி கடந்து போய் கொண்டிருக்கிறார்கள். யாரோ.எப்போதும் அந்த வரவேற்பரையில் காத்திருக்கவே செய்கிறார்கள்.
0Shares
0