குறுங்கதை 104 சதி

தன்னைக் கொல்ல தனது பிள்ளைகளே சதி செய்கிறார்கள் என்பதை டெல்லி சுல்தான் அறிந்திருந்தார். ஆகவே பிள்ளைகள் எவரும் தன்னை நேரில் சந்திக்க வருவதைத் தடுத்து நிறுத்தியிருந்தார். அரண்மனையில் இருந்த பணியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். விஸ்வாசமான பாதுகாவலர்கள் மட்டுமே உடனிருந்தார்கள். தனது மனைவியர் மீதும் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆகவே அவர்களைக் கோடைகால அரண்மனைக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

உணவில் விஷம் கலந்துவிடக்கூடுமோ எனப்பயந்து பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். மூன்று மருத்துவர்கள் அவரது உடல்நிலையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து வந்தார்கள். இரவில் அரண்மனை முழுவதும் விளக்குகள் எரிய வேண்டும் என கட்டளையிட்டார்.

தாயற்ற அவரை வளர்ப்பு தாய் ஹசீனா ஆசையோடு வளர்ந்து வந்தார். முதுமையில் பார்வையின்மை ஏற்பட்டதால் அவள் அறையிலே முடங்கி கிடந்தாள். அவள் ஒருத்தி தான் அன்றாடம் சுல்தானைக் காண அனுமதிக்கபட்டவள். அவள் சுல்தானுக்காக பிரார்த்தனை செய்து தினமும் ஒரு ரோஜா மலரை கடவுளின் அருள்கொடையாக உண்ணும்படி சொல்லுவாள். அதை பெற்றுக் கொண்டு அவளுக்கு நன்றி சொல்லியபடியே ரோஜா இதழை வாயில்ட்டு சுவைப்பார்.

டெல்லி சுல்தானுக்கு வயது எழுபது கடந்திருந்தது. அவரும் தந்தையைக் கொன்றே அரியணையைக் கைப்பற்றினார். ஆகவே அவருக்கு சதிவேலைகளின் அத்தனை சாத்தியங்களும் தெரியும். ஆகவே தன்னை கொல்ல முயல்பவர்களின் சதியை அவர் எளிதாக முறியடித்தார்

ஒரு நாள் குளியல் தொட்டியில் விஷம் கலந்த வாசனைதைலம் கலக்கபட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை செய்ய வைத்தவன் மூத்தமகன். அதை அறிந்த டெல்லி சுல்தான் தைலம் கலந்த பணிப்பெண்ணை சிரச்சேதம் செய்ததோடு ரகசியமாக ஒரு கொலையாளியை அனுப்பி மூத்தமகனைக் கொலை செய்ய வைத்தார்.

இன்னொரு நாள்  இளைய மகன்கள் இருவரும் ரகசியமாக அரண்மனைக்குள் புகுந்து உறங்கும் அவரை கொல்ல திட்டம் தீட்டியது தெரிய வந்தது. இரவோடு இரவாக ரகசியச் சுரங்கம் வழியாக தப்பிப் போனார். அப்போதும் அவர் தாதி ஹசீனாவை உடன் அழைத்துக் கொண்டு தான் சென்றார்.

ஏரி ஒன்றின் நடுவே இருந்த ரகசிய இடம் ஒன்றில் அவர்கள் அடைக்கலமானார்கள். அப்போதும் மருத்துவர்கள் அவருடன் இருந்தார்கள். அன்றாடம் உடற்பரிசோதனை நடைபெற்றது. தன்னைக் கொல்லத்துடிக்கும் பிள்ளைகளைக் கொல்வதற்காக அவரும் சதி செய்தார். சுல்தான் அனுப்பிய ஆட்கள் இளைய மகன்களையும் கொன்றார்கள்.

இனி எதிர்ப்பில்லை என உணரும் வரை நாற்பத்தியெட்டு நாட்கள் சுல்தான் உயிர்தப்புவதற்காக ஒளிந்தும் மறைந்தும் திரிந்தார். நாற்பத்தி ஒன்பதாம் நாள் காலை ஹசீனா அவரது அறைக்கு வந்து பிரார்த்தனை செய்த ரோஜா மலரைக் கொடுத்தபோது உன் கையாலே என் வாயில் போட்டுவிடு இனி எனக்கு எதிரியில்லை என்றார் சுல்தான்.

நடுங்கும் கைகளுடன் பார்வையற்ற அவள் சுல்தானின் முகத்தை தேடினாள். அவர் ஹசீனாவின் கைகளைப் பற்றி அவரது உதட்டில் வைத்தார். ரோஜா இதழ்களை அவள் ஊட்டிவிட்டாள். அதை சுவைத்த மறுநிமிஷம் சுல்தான் மயங்கி விழுந்தார்

பார்வையற்ற ஹசீனா சொன்னாள்

“நாற்பத்தியெட்டு நாட்கள் விஷம் தடவிய ரோஜா மலர்களைக் கொடுத்து உங்களை கொல்ல முயல்வதே எனது சதித் திட்டம். பதினாலு வயதில் அரண்மனை பணிக்காக அழைத்து வரப்பட்டேன். பலராலும் வல்லுறவு செய்யப்பட்டேன். மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டது. அரண்மனையிலிருந்து தப்பி போக முயன்றபோது பிடிபட்டு இருட்டறையில் அடைக்கபட்டு சித்ரவதை செய்யப்பட்டேன்.  தனிமை, வலி, வேதனை, சொந்த ஊருக்கு போக வழியில்லை. பெற்றோர்கள் முகத்தைக் காண முடியவேயில்லை. எனது கனவுகள் ஆசைகள் அழிக்கபட்டன. அதற்காக வஞ்சம் தீர்க்கவே உங்களை வளர்க்கும் தாதிப்பணியை ஏற்றுக்  கொண்டேன். நான் காட்டிய அன்பு என் வஞ்சத்திற்கான அடித்தளம். தானியங்களை வீசிப் புறாவை வசீகரிப்பது போன்றது. எனதுஅநீதிக்கு காரணம் அதிகாரம். சர்வ வல்லமை  கொண்ட ஆட்சி அதிகாரம். அதன் பக்கத்தில் இருந்தபடியே அதை அழிக்க காத்துக் கொண்டிருந்தேன். உங்களை கொல்ல நடந்த சதி யாவும் என் தூண்டுதலில் உருவானதே. அதன் இறுதி அம்பு தான் இந்த விஷம் தோய்ந்த ரோஜா. இனி இந்த ராஜ்ஜியம் தலையில்லாத உடல் போலாகிவிடும். சிதறி அழிந்து போய்விடும். ஆயுதம் கொண்டு சாதிக்க முடியாததை அன்பின் வழி சாத்தியமாக்கினேன். என் அன்பு உங்கள் அழிவிற்கான ஆயுதம்.“

அவள் சொன்னதைக் கேட்க சுல்தான் உயிரோடு இல்லை. அவர் இறந்து கிடந்தார். சுல்தானின் உடலைத் தாண்டி அவள் தட்டுத்தடுமாறி வெளியேறிப் போய் கொண்டிருந்தாள்

***

0Shares
0