குறுங்கதை 105 அரைநாள் மனுஷி

தாமோதரன் இரும்புக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அன்றாடம் இரவு வீட்டின் கதவைப்பூட்டுவதும் காலையில் கதவைத் திறந்துவிடுவதும் அவரது வேலை. வேறு யாரும் கதவைப்பூட்டவோ திறக்கவோ செய்யக்கூடாது. எத்தனை மணி ஆனாலும் அவர் தான் வீட்டுக்கதவைப் பூட்டுவார். அது போலவே காலையில் அவர் எழுந்து கொள்ளும் வரை அவரது மனைவியோ பிள்ளைகளோ கதவைத் திறந்து வெளியே போக முடியாது.  நாலு மணிக்கு கண்விழித்தாலும் அமுதா அவர் எழுந்து கதவைத் திறக்கும் போது தான் வாசற்தெளிக்கப் போவாள்.

இரவு வேலைவிட்டு ஒன்பது மணிக்கு வீடு திரும்பி வரும்  போது வீட்டில் மனைவி கட்டாயம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தால் வீட்டில் மனைவி இல்லை என்றால் தாமோதரனுக்கு கோபம் பீறிட்டுவிடும். இதன் காரணமாகவே அமுதா எந்த வெளிவேலையாக இருந்தாலும் மாலை ஆறுமணிக்குள் செய்து முடித்துவிடுவாள்.

சில நாட்கள் பிள்ளைகள் சினிமாவிற்கு போக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார்கள். கணவரிடம் அனுமதி கேட்டு மாலை காட்சி சினிமாவிற்கு போய் வருவார்கள். ஒன்பது மணிக்குள் படம் விடாவிட்டால் பாதியிலே எழுந்து வந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் தியேட்டருக்கு வந்து அமுதா மற்றும் பிள்ளைகள் அவரசமாக வெளியே வரவும் என்று சிலைடு போடச் செய்துவிடுவார். அந்த அவமானத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

பொருட்காட்சி நடக்கும் நாட்களில் கூட பிள்ளைகள் தான் போய்வருவார்கள். அவள் வீட்டிலே தானிருப்பாள். இதனால் அவளது உலகம் மிகவும் சுருங்கிப் போனது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி  வேலைக்குப் போனார்கள். அப்படியும் அமுதா ஒரு சினிமாவிற்கோக திருமண நிச்சயதார்த்த வீட்டிற்கோ, பொருட்காட்சிக்கோ இரவில் போவதேயில்லை.

மூத்தமகளை அடுத்த வீதியிலே கட்டிக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் வீட்டிற்குப் போனாலும் மாலை ஆறு மணிக்குள் தன்னுடைய வீடு திரும்பி விடுவாள்.

ஒரு நாள் அவளது பேரன் ஊரில் சர்க்கஸ் வந்திருக்கிறது. போகலாம் ஆச்சி என்று அவளைக் கட்டாயப்படுத்தினான். அமுதா ஆதங்கமான குரலில் சொன்னாள்

“நீ போயிட்டு வாய்யா. எனக்கு ஒரு நாளுங்கிறது விடிகாலை ஆறுமணில இருந்து சாயங்காலம் ஆறுமணி வரை தான். அதுக்குள்ளே வெளியே போயிட்டு வந்தா உண்டு. சாயங்காலம் ஆறுமணிக்குப் பிறகு  வீட்டுப்படியைத் தாண்ட மாட்டேன். உங்க தாத்தாவுக்குப் பிடிக்காது. கோவிச்சிகிடுவார்,. வீதியிலே சாமி ஊர்வலமே வந்தாலும் வெளியே வரமாட்டேன். நான் ஒரு அரைநாள் மனுஷி. அப்படியே வாழ்ந்து பழகிட்டேன். வருஷம் ஒடிப்போயிருச்சி. இனி எங்கே போயி என்னத்தை பாக்கபோறன். சாகுற வரைக்கும் வீடு தான் உலகம்.

ஆச்சி இதை சொல்லும் போது ஏன் அழுகிறாள் என்று பேரனுக்குப் புரியவில்லை. அமுதா சேலையால் கண்ணீரைத் துடைத்தபடியே பேரன் சர்க்க்ஸ் பார்ப்பதற்காக சேலையில் முடிந்து வைத்திருந்த ரூபாயை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

•••

0Shares
0