குறுங்கதை 108 பாடும் சுவர்கள்

சாமர்கண்டிற்குப் போகும் வழியில் இருந்த  மலையில் பாதி கட்டிமுடிக்கபடாத சுற்றுசுவர் ஒன்றிருந்தது. சீனப்பெருஞ்சுவர் போல கட்ட வேண்டும் என ஆசைப்பட்ட மன்னர் பணி துவங்கிய சில வாரங்களிலே இறந்துவிட்டதால் அந்தச் சுவர்கள் முடிக்கபடவில்லை என்றார்கள். பதினாறு அடி உயரத்தில் பத்தடி அகலத்தில் அமைக்கபட்டிருந்த அந்த சுவர் மலைப்பாம்பு ஒன்று படுத்துக்கிடப்பது போலிருந்தது.

அந்தச் சுவருக்கு ஒரு விசித்திரமிருந்தது. அது சிறுவர்களைக் கண்டால் பாடத்துவங்கியது. பாடும் சுவரைக் காணுவதற்காக யாத்ரீகர்கள் வருகை அதிகமிருந்தது. பெரும்பான்மைப் பயணிகள் தங்களுடன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

சிறார்கள் அந்தச் சுவரில் காதை வைத்துக் கேட்கும் போது துயரமான பாடல் ஒன்று ஒலிப்பது வழக்கம். சுவரின் குரல் தன் தாயின் குரல் போலவே ஒலிக்கிறது என்றார்கள் சிறுவர்கள். அது எப்படி என்று எவருக்கும் புரியவில்லை.

பாடும் சுவரில் காதை வைத்துக் கேட்டால் நோயுற்ற குழந்தைகள் நலமாகிவிடுகிறார்கள். துர்கனவுகளால் பீடிக்கபட்ட சிறார்கள் குணமாகிவிடுகிறார்கள் என்று மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்.

பாடும் அந்தச் சுவரின் குரல் ஏன் துயரமாகயிருக்கிறது என்பதற்கு ஒரு கதை உலவத் துவங்கியது. அது சுவர் கட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது கைக்குழந்தையுடன் சமீரா என்ற இளம்பெண் வேலை செய்து கொண்டிருந்தாள். அவளைக் கணவன் கைவிட்டு வேறு ஒருத்தியை மணந்து கொண்டிருந்தான். போக்கிடம் இல்லாத சமீரா கூலி வேலை செய்து பிழைத்து வந்தாள்.

சுவர் கட்டும் பணியில் எதிர்பாராமல் விபத்து நடந்தபடியே இருந்தது. சுவரைக் கட்டி முடிக்க வேண்டும் என்றால் இளம்பெண் ஒருத்தியை களப்பலியாக்க வேண்டும் என்றான் நிர்வாகி. அதன்படியே அநாதையான சமீராவைப் பலி கொடுப்பதென முடிவு செய்தார்கள்.

அவள்  தன் குழந்தையை விட்டுப் பிரிய முடியாது என கண்ணீர் வடித்தாள். ஒவ்வொரு நாளும் உன் குழந்தையை உன்னிடத்தில் கொண்டு வருவோம். நீ அவனுக்குப் பாட்டுபாடி ஆறுதல் சொல்லலாம். உன் மகனை வளர்த்து  பெரியவனாக்கி அரசாங்க உத்தியோகம் தருகிறோம் என்று அவளுக்கு வாக்குறுதி தந்தார்கள்.

அவள் எவ்வளவோ மறுத்தும் விடவில்லை. ஒரு இரவில் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கையில் அவளை இழுத்துப் போய் சுவரில் வைத்து தலையை துண்டித்தார்கள். அவளது ரத்தம் பட்டபின்பு சுவர் கட்டும் பணியில் விபத்து நடக்கவில்லை.

ஆனால் அவர்கள் வாக்குறுதி தந்தது போல அவளது குழந்தையை சுவரின் அருகில் கொண்டு வரவில்லை. அநாதையாக பிள்ளையாக கைவிட்டார்கள். தன் குழந்தையைக் காணாத ஏக்கம் கொண்ட சமீரா சுவரில் எந்தக் குழந்தை காதை வைத்தாலும் அது தன்னுடைய பிள்ளை என நினைத்து பாடுகிறாள் என்றார்கள்.

நிஜமான நிகழ்ச்சியா அல்லது கற்பனையா எனத் தெரியவில்லை. ஆனால் தன் பிள்ளைகளை நேசிக்கும்  எல்லா தாயின் குரலும் ஒன்று போலதானிருக்கும் என்பதும் உண்மையே

எல்லா பிரம்மாண்டங்களின் பின்புலத்திலும் யாரோ ஒரு பெண்ணின் துயருற்ற இதயம் வடிக்கும் கண்ணீர் கசிந்து கொண்டுதானிருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் நிஜம்.

••

0Shares
0