குறுங்கதை 112 சொற்கள் இல்லாத புத்தகம்

சொற்கள் இல்லாத புத்தகம் ஒன்றை மியோ பௌத்த மடாலயத்தை சேர்ந்த துறவிகள் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அபூர்வமான புத்தகம். வெளியாட்கள் யாரும் அதைக் கண்டதில்லை என்று பத்திரிக்கையாளர் ஜேசன் மார்க் கேள்விபட்டதில் இருந்து அந்தப் புத்தகத்தை காண வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தான்.

நேபாளத்திலிருந்த மியோ மடாலயத்தில் வெளிநாட்டவர் எவரையும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த மடாலயத்தின் கதவுகள் ஆண்டுக்கு ஒரு முறை தான் திறக்கபடும். அன்று உள்ளுர்  பொதுமக்கள் வருகை தருவார்கள். மற்ற நாட்களில் புத்த துறவிகள் தவிர வேறு எவரும் உள்ளே அனுமதிக்கபட மாட்டார்கள் என்றார்கள்.

ஜேசன் மார்க் இதற்காகவே பௌத்த சமயத்தை ஏற்றுக் கொண்டு இளந் துறவியாக மாறினார். லிபோங் மடாலயத்தில் ஆறு ஆண்டுகள் பயின்றார். அங்கே இருந்த துறவிகள் எவருக்கும்  சொற்கள் இல்லாத புத்தகம் பற்றி தெரிந்திருக்கவில்லை.

பதினோறு வருஷங்கள் துறவியாக வாழ்ந்த பிறகு ஒரு முறை அவர் மியோ மடாலயத்திற்கு அழைக்கபட்டிருந்தார். தன் வாழ்நாளின் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளப்போகிறோம் என்பதால் ஜேசன் மார்க் மியா மடாலயத்தின் படிக்கட்டுகளில் ஏறும் போது உணர்ச்சிவசப்பட்டு போனார்.

ஒரு மழைக்காலம் அந்த மடாலயத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கிடைத்தது. ஒரு நாள் அவர் சொற்கள் இல்லாத புத்தகம் பற்றிய தகவலை மூத்த துறவி ஒருவரிடம் கேட்டு அறிந்தார்.

“அந்த நூலை படிப்பதற்கு ஒரு தனி அறை இருக்கிறது. அங்கே தான் படிக்கிறார்கள்“ என்றார் மூத்த துறவி.

ஜேசனின் கனவு பலிப்பது போல ஒரு நாள் அவர் சொற்கள் இல்லாத புத்தகத்தை வாசிக்கும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். சிறியதொரு அறை. அறையின் சுவரில் நிறைய துவாரங்கள். ஒவ்வொரு துறவியும் ஒரு துவாரம் வழியாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஜேசனும் அது  போல ஒரு துளை முன்னால் அமர்ந்தபடியே வெளியே என்ன தெரிகிறது எனப்பார்த்தான். பூந்தோட்டமும் அதன்பின்புலத்தில் தெரியும் வானமும் தூரத்து மேகங்களும் தெரிந்தன.

அந்த படிப்பறையின் பொறுப்பாளராக இருந்த துறவி ஜேசன் காதருகே வந்து சொன்னார்

“உலகம் தான் சொற்கள் இல்லாத புத்தகம். அதை இந்த துளை வழியாக நாம் படிக்கிறோம். சொற்கள் இல்லாத மலர்கள். சொற்கள் இல்லாத மரங்கள். சொற்கள் இல்லாத மேகம். சொற்கள் இல்லாத ஆகாசம். சொல் இல்லாத காற்று. நிலவு சூரியன் பனி இவற்றை உணரத்துவங்கினால் மெல்ல அந்த புத்தகம் உனக்குள் விரிய ஆரம்பிக்கும்“

ஜேசன் வியப்புடன் தலையாட்டினார்

துறவி சொன்னார்

“வாசிப்பின் ஆழ்ந்திருக்கையில் நீ தான் மலர்.  நீ தான் ஆகாசம். நீ தான் மேகம். அது உனக்கே புரியும்“

ஜேசன் பதில் சொல்லாமல் சொற்கள் அற்ற புத்தகத்தினை வாசிக்கத் துவங்கியிருந்தான்

••

0Shares
0