குறுங்கதை 113 பூக்களை வரையும் சிறுமி

அந்தச் சிறுமி தான் வரைந்த பூச்செடியை எப்படியாவது உயிருள்ளதாக்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்தாள். அதனால் ஒவியம் வரையப்பட்ட காகிதத்தை மண்ணில் புதைத்து வைத்தாள். தனது பூச்செடி அப்படியே உயிர்பெற்று எழுந்து வரும் என நம்பினாள்.

ஆனால் ஒவியச் செடி மண்ணில் முளைக்கவில்லை. அது அவளை வருத்தப்படுத்தியது. காகிதத்தில் வளரும் செடி ஏன் மண்ணில் முளைக்க மறுக்கிறது என வேதனைப்பட்டாள்.

அடுத்த நாள் முழுச்செடியை வரையாமல் மலர்களை மட்டும் வரைந்தாள். தான் வரைந்த மலர்களை வீட்டின் பின்புறமுள்ள செடியில் கொண்டு போய் ஒட்டி வைத்தாள். ஆனால் அந்தச் செடி வரைந்த மலர்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது. இது என்ன பிடிவாதம் என செடியைத் திட்டினாள்.

அதன்பிறகு அவள் ஈரமண்ணிலே குச்சி ஒன்றால் செடியை  வரைய ஆரம்பித்தாள். அப்போதும் அந்தச் செடி நிமிர்ந்து நிற்கவில்லை. மலர் வாசனை தரவில்லை.

தான் வரைந்த செடி தண்ணீர் குடிப்பதில்லை. அதனால் தான் மண்ணில் முளைக்க மறுக்கிறது என்று அவளாகவே கண்டுபிடித்தாள்.

ஒவியச்செடியை எப்படி தண்ணீர் குடிக்கச்  செய்வது என அவளுக்குப் புரியவில்லை. ஏதோ ஒரு ரகசியம் தனக்குத் தெரியாமல் இருக்கிறது என்பதை அந்த சிறுமி  உணர்ந்து கொண்டாள்.

பின்பு அவள் பூக்களை வரையவில்லை. பூச்செடிகளின் பக்கமும்  போகவில்லை.

பின்னொரு நாள் அவள் கண்டுகொண்டாள். ஒவியத்தில் இருந்த மலர்கள் வாடுவதில்லை. ஒவியத்தில் வரையப்பட்ட செடி ஒடிந்து போகாது. ஆடு தின்னாது. எந்தக் காற்றாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது.

இப்போது பெருமிதமாகப் தோட்டத்துப் பூச்செடியின் முன்னால் போய் சொன்னாள்

“உன்னால் செய்ய முடியாததை நான் செய்யக்கூடியவள். இதோ என் வாடாத மலர்கள். அழியாத செடி. மறையாத சூரியன்.“

அதன்பிறகு அவள் இயற்கையை தனது போட்டியாளராக நினைக்கவேயில்லை

••••

0Shares
0