குறுங்கதை 114 புலியின் சல்யூட்

அந்த சர்க்கஸில் புலியைப் பழக்குவதற்கென ஒருவர் இருந்தார். அவரது பெயர் ரோனி. அது தான் உண்மைப்பெயரா எனத்தெரியாது. பொதுவாக சர்க்கஸ் கலைஞர்கள் வசீகரமான பெயர்களை வைத்துக் கொள்வது வழக்கம். ரோனி நீண்டகாலமாகவே சர்க்கஸில் இருந்தார். காட்டிலிருந்து பிடித்து கொண்டுவரப்படும் புலியைப் பழக்கி சர்க்கஸ் விளையாட்டுகளை செய்ய வைப்பது அவரது வேலை.

புலியை பழக்குவது எளிதானதில்லை. புலி பயமற்றது. புலியின் ஒரே பலவீனம் பசி. அதை வைத்துத் தான் ரோனி புலியை கட்டுபடுத்த ஆரம்பிப்பார். தொடர்ந்து பட்டினி போட்டால் புலி வெறி கொண்டுவிடும். வயிறு நிறைய உணவு கொடுத்தால் சொன்னபடி நடக்காது.

ஆகவே நீண்ட நேரம் புலி பசியோடு காத்திருக்கும்படி செய்வார். முடிவில் ஒரு துண்டு இறைச்சியை மட்டுமே வழங்குவார். நிறையத் துண்டு இறைச்சிகள் இரும்பு வாளி நிறைய இருப்பதை புலி கண்ணில் படும்படி வைப்பார். பசியில் கூண்டைத் தாண்டிக்கொண்டு அந்த இறைச்சிகளை எடுக்க புலி முயற்சிக்கும். அப்போது அதன் மீது சவுக்கடி விழும். பசியோடு புலி முடங்கிக் கொள்ளும்.

ஒருவரை ஒடுக்கி நம் வசப்படுத்த வேண்டும் என்றால்  அவரது உணவில் கைவைக்கவேண்டும் என்று ரோனிக்குத் தெரியும். அது போலவே எந்த உணவினை மறுக்கிறேமோ அதைக் கருணையோடு தருவது போல கொஞ்சமாக தர வேண்டும். அதுவும் ஒரு தந்திரம் என ரோனி அறிந்திருந்தார்.

பசி கொஞ்சம் கொஞ்சமாக புலியின் கோபத்தை ஒடுக்கும். ஆவேசத்தைக் கட்டுப்படுத்தும். புலியின் கண்களில் உணவின் மீதான வேட்கை மட்டுமே தென்படும். அந்த  நேரம் கூண்டின் கதவைத் திறந்து ரோனி இறைச்சித் துண்டுகளை வீசுவார்.

புலி ஆவேசமாக இறைச்சியைக் கடித்து தின்னும். உண்மையில் அது இறைச்சியில்லை. ரப்பர் துண்டுகள். புலியால் அதைத் தின்னமுடியாது வீசி எறியும். புலிக்கு எது உண்மையான இறைச்சி, எது ரப்பர் துண்டு என அறியாத குழப்பம் உருவாகும். அது தான் ரோனிக்குத் தேவை. புலியின் பலவீனத்தை ரோனி அதிகப்படுத்திக் கொண்டேயிருப்பார்.

பின்பு அவரது  தயவால் மட்டுமே தனக்கு உணவு கிடைக்கும் என்பதைப் புலி உணர ஆரம்பித்தவுடன் தனது சவுக்கைக் கொண்டு சர்க்கஸ் விளையாட்டுகளைப் பயிற்சி தர ஆரம்பிப்பார்.

வயிற்றுப்பசிக்காக எதையும் செய்வதற்கு மனிதர்கள் மட்டுமில்லை காட்டுப்புலியும் தயாராகும் என்பதே அவரது அனுபவம்.

நினைத்த பொழுதில் வேட்டையாடி உண்ட அதன் நினைவுகள் மெல்ல அழியத் துவங்கும். பசித்த பொழுதில் தனக்காக உணவைக் கொண்டு வந்து தருவார்கள் என்று புலி காத்திருக்கும். பின்பு பழக்கம் ரோனியைக் கண்டதும் புலியை ஒரு காலைத் தூக்கி சல்யூட் அடிக்க வைக்கும்.

அது தான் சர்க்கஸின் முதல்விளையாட்டு. பார்வையாளர்கள் ஆரவாரமாகப் புலியின் சல்யூட்டை ரசிக்கும் போது ரோனி தானும் வயிற்றுப்பாட்டிற்காக தான் இப்படி புலியின் முன்னால் நின்று கொண்டிருப்பதாக உணருவார்.

புலியின் விதி தான் ரோனிக்கும். ஒரே வித்தியாசம் ரோனி சவுக்கடி இல்லாமலே முதலாளி முன்னால் சல்யூட் அடிக்கப் பழகியிருந்தார் என்பதே.

•••

0Shares
0