அந்தப் பகுதியின் பெரிய பல்பொருள் அங்காடி ராணி ஸ்டோர்ஸ். இரண்டு தளங்கள் கொண்டது
சிவராமன் அந்தக் கடைக்குப் போகும் போதும் கடை உரிமையாளர் அமர்ந்திருக்குமிடத்தில் அவரது தலைக்கு மேலுள்ள சுவர்க்கடிகாரம் ஓடாமல் இருப்பதைக் கவனிப்பார். அது பழைய சாவி கொடுக்கும் கடிகாரம்.
ஏன் அதற்குச் சாவி கொடுத்து ஓட வைத்தால் என்ன. ஏன் இந்த அசிரத்தை என நினைத்தபடியே வாங்க வேண்டிய பலசரக்குச் சாமான்களை வாங்குவார். பணம் கொடுக்கும் போது உரிமையாளரிடம் கடிகாரம் ஓடவில்லை என்று சொல்லுவார்.
அவர் அதைக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டதாகவே இருக்காது. ஆனாலும் சிவராமன் ஒவ்வொரு முறையும் கடிகாரம் ஓடவில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே செய்வார்.
அது உரிமையாளரை எரிச்சல் படுத்துகிறது என அறிந்த போதும் அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை
ஒரு நாள் கடை உரிமையாளர் கோவித்துக் கொண்டு “ஆமா கடிகாரம் ஓடலை. அது எங்களுக்குத் தெரியாதா உம்ம ஜோலியை மட்டும் பாரு வோய்“ என்று திட்டினார்
இனி அந்தக் கடைக்குப் போகவே கூடாது என சிவராமன் நினைத்துக் கொண்டார். ஆனால் அவசியமான பொருட்களை வாங்க அங்கே போகவேண்டிய சூழலே இருந்தது.
கடைக்குள் நுழையும் போதே கடிகாரத்தைப் பற்றிச் சொல்லக்கூடாது என்று மனதில் நினைத்துக் கொள்வார்.
சிவராமனை பார்த்த மாத்திரம் கடை உரிமையாளர் முகம் மாறிவிடும். சிவரானால் தனது மனதைக் கட்டுப்படுத்த முடியாது. எப்போதும் போல வாங்கிய பொருளுக்குப் பணம் கொடுத்துவிட்டு கடிகாரம் ஓடவில்லை என்று சுட்டிக்காட்டுவார்
கடை உரிமையாளர் முகம் சிவந்துவிடும்.
தன்னைத் தவிர வேறு எவரும் கடிகாரத்தைச் சுட்டிக்காட்டுவதில்லை. எவ்வளவு சொல்லியும் உரிமையாளர் கடிகாரத்திற்குச் சாவி கொடுப்பதுமில்லை. பின் ஏன் அதை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறோம். சிவராமனுக்குப் புரியவேயில்லை
கடிகாரம் ஒடாமல் இருந்தால் தான் கடை நன்றாக ஓடும் என நினைக்கிறாரோ என்னவோ.
ஒவ்வொரு கடையிலும் விளக்கமுடியாத, விசித்திரமான நம்பிக்கையோ, நிகழ்வோ, பழக்கமோ இருக்கிறது. அது எல்லோர் கண்ணிலும் படுவதில்லை.
பின்பு ஒரு நாள் ராணி ஸ்டோர்ஸ் போன போது உரிமையாளரைக் காணவில்லை. உடல்நலமில்லை இனி அவர் வரமாட்டார். எனக் கடைப் பணியாளர்கள் பேசிக் கொண்டார்கள்.
மீசையில்லாத அவரது இருபத்தைந்து வயது மகன் கல்லாவில் அமர்ந்திருந்தான். பருத்த உடம்பு. பொருத்தமில்லாத தலை. அதே ஓடாத கடிகாரம் தலைக்கு மேல்.
மகனிடம் பில் பணத்தைக் கொடுத்துவிட்டு சில்லறை வாங்கிக் கொண்டார் . கூடுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை
எல்லோரிடமும் குறைகளைச் சொல்லிவிட முடியுமா என்ன.
ஏனோ உடல்நலமற்ற கடை உரிமையாளரை நினைத்து வருத்தமாக இருந்தது.
கடிகாரம் ஓடவில்லை எனத் தனக்குத்தானே சொல்லியபடியே வீட்டினை நோக்கி நடக்க ஆரம்பித்தார் சிவராமன்.
••
23.7.20