குறுங்கதை 116 விளையாட்டுச்சிறுவன்.

கள்ளன் போலீஸ் விளையாட்டின் போது வாசு ஒளிந்து கொள்வதற்காக மர ஸ்டூலில் ஏறி தானியங்கள் சேமித்து வைக்கும் குலுக்கையினுள்  குதித்துவிட்டான்.  அவனைத் துரத்தி வந்த சிறுவர்கள் வீட்டின் வெளியே தேடிக் கொண்டிருந்தார்கள்.

ஒன்பதடி உயரமுள்ள அந்தக் குலுக்கையினுள் தானியமில்லை. ஆனால் இருள் நிரம்பியிருந்தது. நிச்சயம் தன்னை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என வாசுவிற்குச் சந்தோஷமாக இருந்தது.

குலுக்கையினுள் நெல் போட்டு வைத்திருந்த வாசம் நாசியில் ஏறியது. அடர்ந்த மணம். காலடியில் எலிப்புழுக்கைகளும் மக்கிப்போன நெல்மணிகளும் தென்பட்டன. அவன் வெளியே கேட்கும் சப்தங்களை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். ஒரு சிறுமி குலுக்கை இருந்த அறைக்குள் வரும் சப்தம் கேட்டது. அவளால் எட்டிப்பார்க்க முடியவில்லை.

தானியக் குலுக்கை இருந்த அறையின் இருள் அவளைப் பயமுறுத்தியது. சிறுமி அவசரமாக வெளியே ஒடினாள்.

வாசு இனி தன்னை யாரும் பிடிக்கவே முடியாது என மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். சில நிமிஷங்களின் பின்பு தன்னைக் கைவிட்டு அவர்கள் ஆட்டத்தைத் தொடர்வதைக் கண்ட வாசு ஆத்திரமாகி நான் இருக்கேன் என்று கத்தினான். அது வெளியே கேட்கவேயில்லை.

குலுக்கையிலிருந்து எப்படி வெளியே போவது எனத் தெரியவில்லை. எக்கி எக்கிப் பார்த்தபோதும் மிக உயரமாகவே இருந்தது. பயத்தில் நான் இங்கே ஒளிந்து இருக்கிறேன் என்று கத்தினான். அந்தக் குரலை இருள் விழுங்கிக் கொண்டுவிட்டது போலிருந்தது.

ஒரு வேளை தன்னை யாரும் காப்பாற்றாவிட்டால் என்னவாகும் என நினைத்தபோது அடிவயிற்றில் மூத்திரம் முட்டுவது போலிருந்தது. பயமும் குழப்பமுமாக அவன் கத்தினான். யாரும் அதைக் கேட்கவேயில்லை

திடீரென அந்தத் தானியக்குலுக்கை ஒரு அரக்கன் போலவும் தான் அவனிடம் மாட்டிக் கொண்டுவிட்டதைப் போலவும் உணர்ந்தான்.

குலுக்கையின் சுவர்களைக் கையால் குத்தி உடைக்க முயன்றான். கை வலித்தது தான் மிச்சம்

இனி கள்ளன்  போலீஸ் விளையாடவே கூடாது என மனதிற்குள் முடிவு செய்து கொண்டான்.

குலுக்கையின் வாய் ஒரு குகையைப் போலத் தோன்றியது. வெளியேற வழி தெரியாமல் வாசு அழுதான். அவன் அழுகையை இருள் பொருட்படுத்தவேயில்லை.

நீண்ட நேரம் அழுது சோர்ந்து குலுக்கையினுள் சுருண்டு படுத்து உறங்கிவிட்டான்.

இரவில் அவனது சுந்தர் மாமா டார்ச் அடித்துக் குலுக்கையிலிருந்த அவனைக் கண்டுபிடித்து வெளியே தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தது அவனுக்குத் தெரியாது

விடிந்து கண்விழித்தபோது அவன் கட்டிலிலிருந்தான். எப்படி வெளியே வந்தோம் எனப் புதிராக இருந்தது.

கோபத்துடன் நடந்து குலுக்கை இருந்த அறைக்குப் போனான். அதன் வயிற்றில் ஒரு குத்து குத்தி உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று வீரமாகச் சொன்னான்.

தானியக்குலுக்கையின் வாய் ஏதோ சொல்வது போல அவனுக்குத் தோன்றியது.

அதை வாசு பொருட்படுத்தவில்லை

**

23.7.20

0Shares
0