குறுங்கதை 117 தொலைந்த பொருட்கள்.

சிறுவயதிலிருந்து தான் தொலைத்த பொருட்களை நினைவு கொண்டு ஒரு பட்டியலை உருவாக்கினான் பரந்தாமன்.

விளையாட்டுப் பொம்மைகள், சில்லறைக்காசுகள். பென்சில், பேனா, சட்டை, டிபன் பாக்ஸ், சைக்கிள், மணிப்பர்ஸ், குடை, ஸ்பூன், மருந்துப்பாட்டில், கடிதம், காசோலை, விபூதிபாக்கெட், மோதிரம், வீட்டுச்சாவி, பேங்க் பாஸ்புக், ரப்பர் செருப்பு, குடை, தூக்குவாளி, ரசீதுகள். துண்டு, சோப், சான்றிதழ் எனத் தொலைத்த பொருட்களின் பட்டியல் மிகப்பெரியதாக இருந்தது.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் போலவே இப்படி ஏராளமாகத் தொலைத்திருப்பானில்லையா,

தொலைந்து போன பொருட்கள் தனியொரு உலகில் வாழுகின்றன. அவை யாருக்கும் உரிமையானவையில்லை. அற்ப நேரம் அவை தனித்து வாழுகின்றன. பின்பு யாரோ அதைத் தனக்குக் கிடைத்த அதிர்ஷடமாக எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்.

பொருட்களைத் தொலைத்த வேதனையை விடவும் எப்போது, எங்கே தொலைத்தோம் என்ற நினைவு தான் துல்லியமாக இருக்கிறது

ஐந்து வயதில் காவேரி ஆற்றில் குளிக்கப்போய்விட்டுத் திரும்பும் வழியில் ஈரத்துண்டைப் படித்துறையில் தொலைத்துவிட்ட நினைவு அப்படியே இருக்கிறது. துண்டின் நிறமும் ஆற்றின் நீர்சுழிப்பும் மறக்கவேயில்லை

பதினாலு வயதில் கோவில் வாசலில் விட்டுவந்த செருப்பு எவ்வளவு நேரம் அங்கேயே இருந்திருக்கும்

அப்பாவின் பர்மாக்குடையை ரேஷன் கடையில் தானே மறந்து வைத்தோம். திரும்பிப் போன போவதற்கு அதை யார் எடுத்துப் போயிருப்பார்கள்

பேருந்து பயணத்தில் நிலாவை ரசித்தபடியே வந்த காரணம் தான் சர்பிடிகேட் இருந்த பைலை தொலைக்கக் காரணமா

சில்லறை கொடுத்துவிட்டு மணிபர்ஸை பேண்ட் பாக்கெட்டில் போடுவதற்குப் பதிலாகத் தரையில் நழுவ விட்ட போது மணி பர்ஸ் ஏன் சப்தம் போடவேயில்லை

மனைவியோடு திருச்செந்தூர் கோவிலுக்குப் போன போது தானே மோதிரம் தொலைந்து போனது. கோவில் முன்பாக மனைவி கோபத்தில் திட்டிய போது யாரோ சிரித்தார்களே. யாரது

ரயிலில் யாராவது கைக்கடிகாரத்தைக் கழட்டி ஓரமாக வைப்பார்களா. எப்படித் தொலைத்தேன் அதை

ஊட்டியின் காட்டுப்பங்களாவில் காயப்போட்டுத் திரும்ப எடுக்காமல் போன அந்த நீலநிறச்சட்டை எத்தனை நாள் காய்ந்து கொண்டிருக்கும்

இப்படி அவன் தொலைத்த பொருட்கள் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்

ஒவ்வொன்றும் அழகான நினைவுகளாக மட்டும் மிஞ்சியிருந்தன

பள்ளியோடு தொலைந்து போன அவனது நண்பர்களைப் பற்றியோ, கல்லூரி நாட்களில் காதலித்துத் தொலைத்த சரளாவைப் பற்றியோ, எந்தச் சந்தோஷமும் கிடைக்காமல் தொலைத்த தனது இளமைப்பருவ நாட்களைப் பற்றியோ, வீணை கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டு முடியாமல் போன கனவைத் தொலைத்ததைப் பற்றியோ அவன் கணக்கில் கொள்ளவேயில்லை.

அறிந்து தொலைப்பதும் அறியாமல் தொலைப்பதும் ஒன்றா என்ன.

••

23.7.20

0Shares
0