குறுங்கதை 118 கல்லின் குழந்தைகள்

ஒரு பாறாங்கல் தன்னை விட்டுப் பிரிந்து போன தனது குழந்தைகளைத் தேடிக் கொண்டிருந்தது.

கல்லின் குழந்தைகளுக்கு என்ன அடையாளம் எனக்கேட்டது ஒரு புறா.

“என்னைப் போலதானிருக்கும். ஆனால் எங்கேயிருக்கிறார்கள் எனத் தெரியாது. மண்ணில் புதையுண்டு போயிருக்கலாம். கட்டிடம் கட்டும் பணியினுள் கலந்துவிட்டிருக்கலாம்.  அல்லது எவரோ கோபத்தில் அதை வீசி எறிந்து ஆயுதமாக்கியிருக்கலாம்“ என்றது பாறாங்கல்

“அப்படியானால் உன் பிள்ளைகளைக் கண்டுபிடிப்பது கடினம்“ என்றது புறா.

பாறாங்கல் தன் பிள்ளைகளை தேடி வீதி வீதியாக அலைந்தது. கண்ணில்பட்ட கற்கள் யாவும் தன் பிள்ளைகளைப் போலத் தெரிந்த போதும் அவை அடுத்தவரின் பிள்ளைகள் என்றது கல்.

“ஒரு கல்லுக்கும் இன்னொரு கல்லுக்கும் என்ன வித்தியாசம் “எனக்கேட்டது ஒரு எறும்பு.

“உருவத்தை வைத்து மதிப்பிடாதே. ஒவ்வொரு கல்லும் ஒரு வகை நிசப்தம். அதைக் கல்லின் தாயான என்னால் கண்டறிய முடியும் “என்றது பாறாங்கல்

உன் பூர்வீகம் எதுவெனக் கல்லிடம் கேட்டது ஒரு காகம்

“தொலைதூரத்து மலை. அங்கிருந்து என் பாட்டன் பூட்டன் புறப்பட்டார்கள். நான் என் பூர்வீக இடத்தை கண்டதில்லை. ஆனால் எனக்கும் பிறப்பிடமிருக்கிறது“ என்றது கல்.

“உன் பிள்ளைகளை எதற்குத் தேடுகிறாய்“

“என் பிள்ளைகள் பிடிவாதமானவர்கள். பசியற்றவர்கள்.  ஆனால் அவர்களை யாரோ தனது வீம்பிற்காகப் பயன்படுத்திக் கொண்டு கெட்டவராக்கி விடுகிறார்கள்.  என் குழந்தைகளை நான் மலராகவே கருதுகிறேன். “ என்றது பாறாங்கல்

இதைக் கேட்ட ஈ சொன்னது

“ஒரு போது ஒரு கல் மலராக முடியாது“

அதைக்கேட்ட கல் சொன்னது

“தோற்றத்தை மட்டுமே நிஜம் என நம்பும் உங்களுக்குப் புரிய வைக்க முடியாது. நான் கல்லின் தாய். எனக்கு என் பிள்ளைகளைத் தெரியும்“

பாவம் அந்த தாய் முடிவில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறாள்.

கல்லின் பிள்ளைகள் என்ன ஆனார்கள்.

எங்கே போனார்கள் என யாருக்கும் தெரியாது.

ஒரு கல்லின் விதியை யாரால் அறிந்து சொல்ல முடியும்

••

0Shares
0