அந்தத் தேசத்தில் முதன்முறையாக மக்கள் எவ்வளவு கனவு காணுகிறார்கள். என்ன கனவு காணுகிறார்கள் என்பதைப் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக வந்து விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் அந்த நாட்களில் சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை தங்கள் கனவுகள் குறித்த கணக்கை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று ஊடகங்களில் அறிவிப்பு வெளியானது.
கனவுகளை ஏன் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என ஒருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எத்தனை கனவு கண்டோம் என்று எப்படி நினைவு வைத்திருப்பது. சென்ற வாரம் கண்ட கனவு இன்று நினைவில்லையே என மக்கள் ஆதங்கப்பட்டார்கள்.
சிலர் ஒரே கனவைத் தான் திரும்பத் திரும்பக் கண்டுவருகிறேன். அதை எப்படிப் பதிவு செய்ய வேண்டும் எனக் குழப்பமாக உள்ளதாகச் சொன்னார்கள். வேறு சிலரோ தனது கனவுகள் குறித்துப் பேசவே பயமாக இருக்கிறது. அத்தனையும் துர்கனவுகள். அவற்றைக் கணக்கெடுப்பது இயலாத காரியம் என்றார்கள்.
சிறுவர்களோ விடிந்து எழுந்தவுடன் என்ன கனவு கண்டோம் என மறந்துவிடுகிறது. ஆகவே உறங்கும் போது கணக்கெடுக்க வாருங்கள் என்றார்கள்.
ஒரு இளம்பெண் சொன்னாள். என் கனவுகளைச் சொல்லவே மாட்டேன். அவை ரகசியமானவை. அரசியல்வாதி ஒருவர் பகல்கனவுகளையும் இதில் சேர்க்க வேண்டுமா எனக்கேட்டார். இல்லத்தரசி ஒருத்தி கேட்டாள். கனவில் சுட்ட இட்லிகளை எண்ணிச் சொல்ல வேண்டுமா.
முதியவர் ஒருவர் கனவுகளைத் தான் கணக்கு வைக்கவில்லை. இதற்கென ஒரு கனவு இயந்திரத்தை உருவாக்கித் தந்தால் அதைத் தான் உறங்கும் போது தலையில் பொருத்திக் கொண்டுவிடுவேன். தானே அது கனவின் எண்ணிக்கையைப் பதிவு செய்யும் தானே என்றார்
இப்படி ஆளுக்கு ஒருவிதமாகக் கனவுகளைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால் கணக்கெடுப்பு என்று வந்தபிறகு பொதுமக்களின் அபிப்ராயங்களுக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது. ஒரு படிவத்துடன் வீடு வீடாக ஆட்கள் ஏறி விசாரிக்கத் துவங்கினார்கள்.
அந்தப் படிவத்தைப் பார்த்த பிறகு தான் கனவு குறித்து இவ்வளவு இருக்கிறதா எனத் தோன்றியது.
முதன்முறையாகக் கண்ட கனவு எது. எந்தக் கனவு உங்களைத் தொந்தரவு செய்கிறது. எந்தக் கனவை விரும்புகிறீர்கள். நீங்கள் யார் கனவில் வந்திருக்கிறீர்கள். உங்கள் கனவில் அடிக்கடி வருபவர் யார். கனவில் உங்களைச் சந்தோஷப்படுத்தும் விஷயம் எது, என அந்தப் படிவத்தில் முப்பது கேள்விகள் இருந்தன.
பெரும்பான்மையினருக்குச் சரியான பதில் தெரியவில்லை. களப்பணியாளரே தனக்குத் தெரிந்த எண்ணையோ, தகவலையோ பூர்த்தி செய்து கொண்டார். சிலர் கனவுகளின் எண்ணிக்கையை மிக அதிகமாகச் சொல்வதில் ஆனந்தம் கொண்டார்கள்.
இந்தக் கணக்கெடுப்பு ஆண்டு முழுவதும் நடந்து முடிந்தது. புத்தாண்டு பிறக்கும்போது அரசு புதியதொரு கனவு வரியை அறிமுகப்படுத்தியது. அத்துடன் இதுவரை அவர்கள் கண்ட கனவுகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதற்குச் சிறப்புச் சலுகைகள் உண்டு எனவும் அறிவித்தார்கள்.
கனவுகளுக்கு எதற்கு வரி எனச் சிலர் முணுமுணுத்த போதும் சிறப்புச் சலுகை எவ்வளவு தருவார்கள் என்பதிலே அதிகம் கவனம் கொண்டார்கள்.
வயது வாரியாக கனவுத் தொகையைக் கணக்கிட்டு அதில் சிறப்புச் சலுகையை அரசு விரைவில் அறிவிக்கும் என்று ஊடகங்கள் தெரிவித்தன.
அந்த நாளுக்காக மக்கள் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
**
24/7/20