இரட்டை குழந்தைகளின் தோற்றம் ஒன்றாக இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் இரட்டையர்கள் இருவரும் ஒரே புத்தகத்தைத் தான் வாசிப்பார்கள் என்பதோ, இருவரும் ஒன்று போலத் தான் எழுதுவார்கள் என்பதும் வியப்பான செய்தியாகவே இருந்தது.
அப்படியான இரட்டையர்கள் இருவர் காசியாபாத்தில் இருந்தார்கள். அவர்களின் தந்தை பீங்கான் பாத்திரங்கள் செய்கிறவராக இருந்தார்.
இரட்டையர்கள் பள்ளியில் சேர்ந்த நாட்களில் தான் இந்த வியப்பான விஷயத்தை ஆசிரியர்கள் கண்டறிந்தார்கள். இருவரும் ஒன்று போலவே படித்தார்கள். ஒன்று போலவே பரீட்சைக்கு விடை எழுதினார்கள். ஒரே மதிப்பெண் பெற்றார்கள். இது எப்படிச் சாத்தியம் எனப் பலருக்கும் புரியவில்லை.
அந்த இரட்டையர்கள் எதையும் வேகமாகக் கற்றுக் கொண்டார்கள். பள்ளிப்படிப்பு முடிவதற்கு அவர்களுக்கு ஆறு மொழிகள் பேசவும் எழுதவும் தெரிந்ததிருந்தன. அவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள். ஒரே படுக்கையில் உறங்கினார்கள். ஒன்று போலவே உடை அணிந்தார்கள். அவர்கள் இருவரின் மௌனமும் கூட ஒன்று போலவே இருந்தது.
இருவருக்கும் ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகமிருந்தது. ஒரே ஓவியத்தை ஒருவன் வலதுபுறத்திலிருந்தும் மற்றவன் இடது புறத்திலிருந்தும் வரைய ஆரம்பிப்பான். அவர்கள் ஓவியம் வரைந்து முடிக்கும் போது சிறிய வித்தியாசம் கூட இல்லாமல் ஒரே ஒவியமாகிவிடும்.
இளைஞர்களாக இருந்த நாட்களில் இருவரும் ஒரே புத்தகத்தைத் தான் கடையில் வாங்குவார்கள். வாசிக்க ஆரம்பித்து முடிப்பதும் ஒன்று போலவே இருக்கும். ஒருவன் 120 பக்கத்தில் வாசிப்பை நிறுத்தினால் மற்றவனும் அதே பக்கத்தில் வாசிப்பை நிறுத்தியிருப்பான். புத்தகம் எப்படியிருந்தது என்பது பற்றிய இருவரது அபிப்ராயமும் ஒன்று போலவே இருந்தது.
அவர்கள் இருவரும் ஒரு பெண்ணைக் காதலித்தார்கள். அவள் ஒரு நடனமங்கை. அவளது அழகைப் பற்றி இருவரும் ஒன்று போலவே வியந்து பேசினார்கள். எழுதினார்கள்.
அவளோ இருவரில் ஒருவனைத் தேர்வு செய்தாள்.
மற்றவன் தனக்கும் அவனுக்கும் ஒரு வேறுபாடும் இல்லையே எனக் கேட்டபோது, அது உங்களுக்குத் தெரியாது. என்னால் கண்டறிய முடிகிறது என்றாள்.
தோற்றவனுக்கு என்ன வேறுபாடு என்று தெரியவில்லை.
பெண்ணை அடைந்தவனுக்கும் எதனால் தன்னைத் தேர்வு செய்தாள் என்பதும் புரியவில்லை.
அந்தப் பெண் இரட்டையர்களில் ஒருவனைத் திருமணம் செய்து கொண்டாள். மற்றவன் இதனால் கோபம் கொண்டு விலகிப் போனான்.
அதன்பிறகு இருவருக்குமான இடைவெளி விரியத் துவங்கியது. ரசனைகள் மாற ஆரம்பித்தன. ஒருவன் படித்த புத்தகத்தை மற்றவன் படிப்பதேயில்லை. இருவரும் வேறுவேறு ஊர்களில் வசிக்க ஆரம்பித்தார்கள். தோற்றவன் தாடி வைத்துக் கொண்டான். குடிக்க ஆரம்பித்தான். ஊர் ஊராகச் சுற்றியலைந்தான்.
நடுத்தர வயதை அடைந்த போது இருவரும் தற்செயலாக ஒருமுறை சந்தித்துக் கொண்டார்கள்.
பெண்ணை அடைய முடியாதவன் அப்போதும் ஆதங்கமாகக் கேட்டான்
“என்னை விட உன்னிடம் என்ன சிறப்பு இருக்கிறது. எதனால் அவள் உன்னைத் தேர்வு செய்தாள்“
அவன் சொன்னான்
“நம்மால் அறியமுடியாத ஏதோ ஒரு வேறுபாடு பெண்களுக்குத் தெரிகிறது. என்ன வேறுபாடு கண்டுபிடித்தாள் என்று அவள் சொல்லவேயில்லை. எவ்வளவு முறை கேட்டாலும் அவள் சொல்லவேயில்லை “என்கிறான்
இரட்டையர்கள் இருவருக்கும் அந்தப் பெண் எப்படி முடிவு செய்தாள் என்பது கடைசி வரை தெரியவேயில்லை
••