குறுங்கதை 121 புத்தனின் நினைவு

நீண்ட காலத்தின் பிறகு கபிலவஸ்து திரும்பும் புத்தரை வரவேற்க நகரே விழாக் கோலம் பூண்டிருந்தது.

அரண்மனையில் யசோதா காத்துக் கொண்டிருந்தாள். தந்தையின் முகம் காண ராகுலனும் ஆசையுடனிருந்தான். ஞானம் பெற்ற புத்தருக்குக் கடந்த காலத்தின் நினைவுகளிருக்காது. அவரை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றார்கள். இயற்கைக்கு மட்டும் தான் கடந்த கால நினைவுகள் கிடையாது.

கௌதம புத்தர் தனது சீடர்களுடன் வருகை புரிந்தார். மக்கள் மலர் தூவி வரவேற்பு செய்தார்கள். வணிகர்கள் பொற்குவியல்களை அவரது காலடியில் கொட்டினார்கள். புத்தன் மலர்களைப் போலவே பொற்குவியல்களையும் பார்வையால் கடந்து போனார். மலரின் அநித்யம் தானே பொற்குவியலுக்கும்.

தந்தையிடம் என்ன கேட்க வேண்டும் என ராகுலினுக்கு அவனது அன்னை யசோதா சொல்லியனுப்பியிருந்தாள். தந்தையிடம் அவற்றை யாசிக்க ராகுலன் காத்துக் கொண்டிருந்தான்.

புத்தரோ தனது அரண்மனையின் அருகில் வந்த போது தெரிந்த முகங்களை, பால்யத்திலிருந்து தன்னை அறிந்த பெண்களை, மனைவி யசோதாவை, மகன் ராகுலனைப் பார்த்தார். மனதில் சலனமேயில்லை. ஆனால் அவர்களை தாண்டி அவரது கண்கள் வேறு எதையோ தேடின.

புத்தரின் மனதில் அவரது ஆசைக்குத்திரை காந்தகாவின் நினைவு எழுந்தது. எத்தனை அழகான குதிரை. எவ்வளவு நேசித்தோம். அந்தக் குதிரையின் நினைவில் புத்தரின் கண்கள் வெற்றிடத்தினை துழாவின.

ராகுலன் தந்தையிடம் எதையோ யாசித்தான். புத்தரும் பதில் சொன்னார். ஆனால் மனதில் குதிரையின் நினைவு மட்டுமே மேலோங்கியிருந்தது.

புத்தரின் மனதில் மனைவியில்லை. மகனில்லை. அறிந்த மனிதர் எவர் மீதும் நாட்டமில்லை. ஆனால் தன்னைச் சுமந்த காந்தகன் எனும் அக்குதிரையின் மீளாநினைவுகள் ஒரு வானவில் போல மனதில் எழுந்து நின்றது.

ஒரு நிமிஷம் புத்தன் சித்தார்த்தன் ஆகினான்

அரண்மனையினுள் புத்தனின் கண்கள் எதையோ தேடுவதை அறிந்து கொண்ட சீடன் ஒருவன் மெல்லிய குரலில் கேட்டான்.

“தாங்கள் யாரையேனும் தேடுகிறீர்களா ததாகதரே“

இல்லையென தலையசைத்தார் புத்தர்.

அரண்மனையை துறந்து வெளியேறிய தனது பிரிவைத் தாளமுடியாமல் குதிரை அந்த இடத்திலே இறந்து போனது.  நிகரற்ற நேசமது என்பதை புத்தர் உணர்ந்திருந்தார்

நினைவின் அலை பட்டு ஈரமாகாத ஒருவன் கூட இந்த உலகில் கிடையாது. எல்லோரையும் பின்னுக்கு இழுக்கும் அழுத்தமான ஒரு நினைவு இருக்கத்தானே செய்கிறது

மழையில் நனைந்த வஸ்திரம் போலானது அவரது மனது.

நல்லவேளை யாரும் தனது மனத்தடுமாற்றத்தை அறியவில்லை என நினைத்துக் கொண்டபடியே

புத்தர் சீடர்களுடன் வெளியேறி நடக்க ஆரம்பித்தார்

•••

29.7.20

0Shares
0