இரண்டு சர்க்கஸ் நிறுவனங்களுக்குள் போட்டி இருந்தது. இதில் ஜாய் சர்க்கஸில் வேலை செய்த ரிங்கோ என்ற கோமாளியின் வேடிக்கைகளைக் காண்பதற்காக மக்கள் திரண்டு வந்தார்கள்.
ரோமன் சர்க்கஸில் வேலை செய்த கோமாளி தனாவிற்கு ரிங்கோவை விடத் தான் சிறந்தவன் எனக் காட்ட வேண்டும் என ஆசையிருந்தது. இதற்காக ஒவ்வொரு ஷோவிலும் புதிய வேடிக்கைகளை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
தன்னை விடத் திறமையற்றவனாக இருந்த போதும் எப்படி ரிங்கோ ஜெயிக்கிறான் எனத் தனாவிற்குப் புரியவேயில்லை.
தன்னை ரிங்கோ சிரிக்க வைத்துவிட்டால் தான் சர்க்கஸை விட்டு விலகி விடுவதாகப் பகிரங்கப் போட்டி ஒன்றை அறிவித்தான் தனா. ஆனால் அதை ரிங்கோ ஏற்றுக் கொள்ளவில்லை.
“ ஒரு கோமாளியால் இன்னொரு கோமாளியைச் சிரிக்க வைக்க முடியாது“ என்றான்.
ஆனால் தனா அதை மறுத்துத் தன்னால் எந்தக் கோமாளியையும் சிரிக்க வைக்க முடியும் என்றான். இந்தப் போட்டி நடைபெறவில்லை.
ஆனால் எந்த ஊருக்கு ரோமன் சர்க்கஸ் போனாலும் அங்கே வரும் பார்வையாளர்கள் கோமாளி ரிங்கோ போலத் தங்களைச் சிரிக்க வைக்கவில்லை என்றே தனா மீது குற்றம் சாட்டினார்கள். இதனால் ரிங்கோவை கடுமையான வெறுத்தான் தனா.
கருணையற்ற காலம் சர்க்கஸ் நிறுவனங்களில் இருந்த விலங்குகளைத் தடை செய்தது. சினிமாவும் தொலைக்காட்சியும் புதிய பொழுதுபோக்குகளும் சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்குக் கூட்டம் வராமல் செய்தது. இரண்டு கோமாளிகளும் வேலையற்றுப் போனார்கள்.
ஒரு நாள் ஜாய் சர்க்கஸ் நிறுவனம் மூடப்பட்டது. ரிங்கோ தனது சொந்த ஊருக்குத் திரும்பிப் போனான்.
சில மாதங்களில் ரோமன் சர்க்கஸ் மூடப்பட்டது. தனா சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு சிறியதாகப் பழக்கடை ஒன்றைத் துவக்கினான்.
எப்போதாவது சில இரவுகளில் அவன் ரிங்கோவை பற்றி நினைத்துக் கொள்வதுண்டு. அன்றாட வாழ்க்கையின் நெருக்கடிகள் தனாவின் ஆளுமையை மாற்றியது. தான் ஒரு காலத்தில் கோமாளியாக இருந்தோம் என்பதையே அவன் மறந்து போனான்.
பின்பு ஒரு நாள் அவன் திருத்தணி கோவிலுக்குப் போன போது சாலையோரம் இருந்த பரோட்டா கடையில் ரிங்கோ பரோட்டா மாஸ்டராக வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்டான்.
ரிங்கோவும் ஆள் உருக்குலைந்து போயிருந்தான். நரைத்த தலை. ஒடுங்கிப் போன முகம். கண்களில் ஆழ்ந்த துயரம்.
தனா அவனிடம் “நீ ரிங்கோ தானே“ எனக்கேட்டபோது“ இல்லை நான் சாத்தப்பன்“ என்றான்.
அது தான் அவனது உண்மைப் பெயர்.
தனா தன்னைத் தெரியவில்லையா. ரோமன் சர்க்கஸில் வேலை செய்த தனா என அறிமுகம் செய்து கொண்டான்
அதைக் கேட்ட ரிங்கோ வெறுப்பான குரலில் சொன்னான்
“அதெல்லாம் போன பிறவியில் நடந்த கதை. இப்போ என்ன வேணும்“
“நான் உன்னைப் போட்டிக்கு அழைத்தேன். நினைவு இருக்கிறதா “எனக்கேட்டான் தனா
ரிங்கோ சொன்னான்
“ஒரு கோமாளியால் இன்னொரு கோமாளியைச் சிரிக்க வைக்கமுடியாது. ஆனால் ஒரு கோமாளியால் இன்னொரு கோமாளியின் மனதைப் புரிந்து கொள்ள முடியும்“.
அதைக் கேட்டவுடன் தனா அமைதியாகத் தலைகவிழ்ந்து கொண்டான்.
இருவரும் ஒரு வார்த்தை பேசாமல் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டார்கள்.
யாரும் அவர்களைக் கவனிக்கவில்லை என அறிந்தபிறகு இருவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்
••
29.7.20