குறுங்கதை.123 சிறியதொரு கிரகம்.

அந்தக் கிரகத்தை ஒரு புத்தகம் ஆட்சி செய்து வந்தது. அதை எழுதியவர் யார் என்றோ. எப்படி அந்தப் புத்தகம் ஆட்சிக்கு வந்தது என்றோ யாராலும் கண்டறிய முடியவில்லை. ஆனால் அந்தப் புத்தகத்தின் சொற்கள் பல்வேறு ரூபங்களில் அக் கிரகத்தினை நிர்வகிக்கத் துவங்கின.

புத்தகத்தை மீறி யாராலும் நடந்து கொள்ள முடியாது. மீறுபவர்களுக்கான தண்டனைகளையும் புத்தகமே முடிவு செய்தது.

அந்தப் புத்தகத்தின் ஒரே பலவீனம். அது பாராட்டிற்கு ஏங்கியது. எவ்வளவு பாராட்டிலும் போதாது என ஆசைப்பட்டது. புத்தகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்களோடு அது தாராளமாக நடந்து கொண்டது.

சிலர் புத்தகத்தின் உத்தரவுகளைக் கேள்வி கேட்டார்கள். அவர்களைப் புத்தகம் அடையாளமற்றுச் செய்தது. புத்தகம் தானே எனச் சிலர் ஏளனமாக நினைத்தார்கள். அவர்களைப் புத்தகம் அடக்கி ஒடுக்கியது. ஆட்சியிலிருந்த புத்தகத்தை யாராலும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்தப் புத்தகத்திற்கு எதிராக எழுதப்பட்ட மற்ற புத்தகங்களை அது தடை செய்தது. அந்தக் கிரகத்தின் பிரஜைகள் இந்த ஒரேயொரு புத்தகத்தை மட்டுமே அறிந்திருந்தார்கள்.

அந்தப் புத்தகம் தன்னைத் தானே விரிவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. அதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனக் கிரகவாசிகள் பயந்தார்கள். சில புத்தகங்கள் ஏன் இப்படிச் சர்வாதிகாரிகள் போல நடந்து கொள்கின்றன என அவர்களுக்குப் புரியவேயில்லை.

அந்தக் கிரகவாசிகள் புத்தகத்திடம் எப்படி மன்றாடுவது என்றோ, கருணையை எதிர்பார்ப்பது என்றோ தெரியாமல் திண்டாடினார்கள்.

வயதில் மூத்த ஒரு கிரகவாசிகள் சொன்னான்.

“நாமில்லாமல் புத்தகம் தனியே வாழ முடியாது. அது அதிகாரம் செலுத்த நாம் தேவைப்படுகிறோம். உண்மையில் நாம் அதிகாரம் செய்யும் புத்தகத்தைக் கண்டு பயப்படுகிறோம். அது தான் நமது பலவீனம். தகுதியில்லாமல் மிகையாகப் புகழப்படும் புத்தகம் தானே வீழ்ச்சியைத் தேடிக் கொள்ளும். அது தான் புத்தகங்களின் விதி. பொறுத்திருங்கள். மிகையாகப் புகழ்ச்சி இந்தப் புத்தகத்தினைக் காலம் தானே வீழ்ச்சி அடையச் செய்யும்.“

கிரகவாசிகள் அவன் சொன்னதை நம்பவில்லை.

ஆனால் இறுதியில் அப்படியே நடந்தது

•••

30.7.20

0Shares
0