அந்தச் சிறுமிக்கு நான்கு வயதிருக்கும். உணவகத்தில் தன் மேசைக்கு எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் இலையில் உள்ள உணவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சாப்பிடுறே தேவி“ எனக்கேட்டார் அவளது அப்பா
“பெரிய தோசை“ என இரண்டு கைகளையும் அகல விரித்துக் காட்டினாள் சிறுமி
“உன்னாலே பெரிய தோசையை சாப்பிட முடியாது. இட்லி வாங்கிக்கோ“ என்றாள் அம்மா
“இல்லை. நான் வானம் அளவுக்குப் பெரிய தோசைன்னாலும் சாப்பிட்ருவேன்“ என்றாள் சிறுமி
அதைக்கேட்டுச் சிரித்தபடியே சர்வர் “அப்போ ஒரு பேப்பர் ரோஸ்ட் சொல்லிருவோம். அது இந்த மேஜை நீளம் இருக்கும்“ என்றார்
“அதெல்லாம் வேண்டாம்“ எனத் தேவியின் அம்மா அப்பா இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
சிறுமி கோவித்துக் கொண்டு ஆள் இல்லாத பக்கத்து மேசையில் தனியே உட்கார்ந்து கொண்டாள்..
“அவளை அப்படியே விட்ருங்க. பிடிவாதம் ஜாஸ்தி“ எனத்திட்டினாள் சிறுமியின் அம்மா
சிறுமி அம்மா பக்கம் திரும்பவேயில்லை. தண்ணீர் டம்ளரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்
சிறுமியின் அப்பா அவளை அருகில் அழைத்து “சரி பேப்பர் ரோஸ்ட் வாங்கித் தர்றேன்“ என்றார்.
தேவி மறுபடியும் அவர்கள் மேசைக்கு வந்து உட்கார்ந்தாள்.
சர்வர் தோசை கொண்டுவரும் நேரம் வரை மற்றவர்கள் சாப்பிடுவதைக் கவனமாகப் பார்த்தபடியே இருந்தாள் தேவி
நீளமான தோசையைக் கொண்டுவந்து மேசையில் வைத்தார் சர்வர்
தேவியின் முகத்தில் சந்தோஷம் பரவியது
“கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து சாப்பிடு“ என்றார் அவளது அப்பா
கண்களை விரித்தபடி தோசையை பார்த்தாள் தேவி
“என்ன பாக்குறே சாப்பிடு“ .எனக் கோபமாகச் சொன்னாள் அவளது அம்மா
“தோசையைப் பிய்க்காமல் எப்படிப்பா சாப்பிடுறது“ எனக்கேட்டாள் தேவி
“பிய்க்காமல் எப்படிச் சாப்பிட முடியும்“ என முறைத்தாள் தேவியின் அம்மா
“தோசையைப் பிய்க்காமல் எப்படிப்பா சாப்பிடுறது என மறுபடியும் கேட்டாள் தேவி
“பிய்க்காமல் சாப்பிட முடியாதுடா. சின்னதுண்டா பிய்த்துக்கோ“ என்றார் அப்பா
“உனக்குத் தெரியலை. அந்தச் சர்வர் அங்கிள் கிட்ட கேளு“ எனத் தேவி தோசை கொண்டுவந்த சர்வரை கையைக் காட்டினாள்
“அறிவில்லாமல் பேசாதடி. தோசையைப் பிய்க்காமல் எப்படிச் சாப்பிடுறது. ஏன்டி இம்சை பண்ணுறே“ என அம்மா கோபமாகத் திட்டினாள்
தேவிக்குத் தோசையைப் பிய்க்காமல் எப்படிச் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. அப்பா அம்மா சர்வர் எவருக்கும் தெரியவில்லை. இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியாமல் எப்படி இருக்கிறார்கள் என்பது போல அவர்களை முறைத்து பார்த்தாள்
ஆத்திரத்தில் அம்மாவே தோசையை பிய்த்துத் தேவி வாயில் ஊட்டிவிட்டாள். அவளுக்குத் தோசை பிடிக்கவேயில்லை. அப்பாவும் தேவியைக் கோவித்துக் கொண்டார். தேவி சப்தமாக அழுதாள். “வாயை மூடு“ என அம்மா தேவியின் முதுகில் ஓங்கி அடித்தாள். தேவி தோசையைத் தரையில் வீசி எறிந்தபடியே அழுது கொண்டிருந்தாள்.
சிறுவர்களின் பிரச்சனைகள் விநோதமானவை. அவற்றைப் பெரியவர்களால் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது
••
30.7.20