குறுங்கதை 125 கவலைகளின் குளியலறை

அந்த நகரில் கவலைகளின் குளியலறை ஒன்றிருந்தது. அது ஒரு பொதுக்குளியலறை. நாள் முழுவதும் மக்கள் அங்கே குளிக்கக் காத்திருந்தார்கள்

உண்மையில் அது ஒரு நீரூற்று.

அந்த நீரூற்று பொங்கி வழிந்து தாரையாகச் செல்லும் வழியினைத் தடுத்து பதினாறு குளியலறைகளை உருவாக்கியிருந்தார்கள்.

ஆண்களுக்கு எட்டு. பெண்களுக்கு எட்டு.

கவலைகளின் குளியலறையில் மரத்தால் செய்யப்பட்ட தொட்டி ஒன்றிருந்தது. அந்த தொட்டியினுள் இறங்கிக் குளிக்க வேண்டும். குளித்து வெளியேறும் போது கவலைகள் அத்தனையும் மனதிலிருந்து நீங்கிவிடும். துவைத்த உடையைப் போலப் புதிதாக மாறிவிடுவார்கள்.

ஆகவே கவலைகளின் குளியலறையின் முன்பாக எப்போதும் ஆட்கள் காத்துக்கிடந்தார்கள்.  ஒரு நபருக்கு ஐந்து நிமிஷம் மட்டுமே அனுமதி.

பெரியவர்கள் காரணமற்ற கவலைகளைத் தங்கள் மீது ஏற்றிவிடுவதாக இளைஞர்கள் வருத்தப்பட்டார்கள். இளைஞர்களின் எதிர்காலம் குறித்துத் தான் அதிகம் கவலைப்படுவதாக பெற்றோர்கள் சொன்னார்கள்.

பாடபுத்தகங்கள் குறித்தும் ஆசிரியர்களின் மிரட்டல் குறித்தும் கவலை கொள்வதாகச் சிறுவர்கள் வேதனைப்பட்டார்கள். காதலிப்பவர்களோ ஏன் நேரம் இவ்வளவு வேகமாகப் போய்விடுகிறது எனக்கவலை கொண்டார்கள்.

குடிகாரன் மதுபோத்தல் தீர்ந்துவிடுமோ எனக்கவலை கொண்டான். வயதானவர்கள் மரணத்தைக் கண்டும், விவசாயிகள் வானத்தைக் கண்டும் கவலை கொண்டனர்

அடுத்த வேளை சோறு கிடைக்குமா எனப் பிச்சைக்காரன் கவலை கொண்டான்.

ரோகிகள் நோய் குறித்து கவலை கொண்டார்கள். வட்டிக்கடைக்காரன் பணம் வசூல் செய்வது பற்றி கவலை கொண்டான்.  கவிஞன் சரியான சொல் கிடைக்காமல் கவலையுற்றான்.  சோம்பேறி ஒரு நாள் ஏன் இவ்வளவு நீளமாக இருக்கிறது எனக் கவலை கொண்டான்.  பயணி இரவு தங்குமிடம் கிடைக்குமா என்பதை நினைத்து கவலையுற்றான். இப்படி ஒராயிரம் கவலைகள்.

புல்லை விட வேகமாக வளர்ந்துவிடும் கவலைகளால் மக்கள் அவதிப்பட்டார்கள்..

கவலையுற்றவர்களின் முகங்கள் ஒன்று போலவேயிருந்தன. அவர்கள் பேச்சில் கவலையின் எதிரொலிப்பினை கேட்க முடிந்தது

கவலைகளின் சுமையிலிருந்து விடுபடுவதற்காகவே அவர்கள் குளியலறையை நோக்கி வந்தார்கள்.

அந்தக் குளியலறையில் பலரும் தன்னைக் குழந்தையைப் போலவே உணர்ந்தார்கள்.

தண்ணீரால் எவ்வளவு பெரிய கவலையையும் போக்கிவிட முடிகிறதே என வியப்படைந்தார்கள்.

மனிதனின் எல்லாத் துயரங்களுக்கும் இயற்கை தீர்வு வைத்திருப்பதை உணர்ந்தார்கள்.

மனிதர்களின் வயதை விடவும் அவரது கவலைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடுவது ஏன் என்று தான் ஒருவருக்கும் புரியவேயில்லை

•••

குறுங்கதைகள் நிறைவுற்றன.

இன்னொரு சமயம் புதிய குறுங்கதைகளுடன் சந்திப்போம்

•••

0Shares
0