குறுங்கதை – 4 பெயரற்ற காற்று

அந்தக் காற்றுக்குப் பெயரில்லை. எந்தத் திசையிலிருந்து அக்காற்று துவங்கியது என்றும் தெரியாது. ஆனால் அக்காற்று வீச ஆரம்பித்தவுடன் நகரில் வசித்த எல்லோரது தலைமயிர்களும் தன் கருமை நிறமிழந்து முற்றிலும் வெண்ணிறமாகின. ஆம். பிறந்த குழந்தை உள்ளிட்ட அனைவரது தலைமயிர்களும் ஒரு நிமிஷத்தில் நரைத்துப் போயின.
நரையென்பது வயதாகி வருவது தானே. எப்படிப் பள்ளிச்சிறுவர்களுக்கு, இளைஞர்களுக்கு, இளம்பெண்களுக்கு ஒரு நிமிஷத்தில் தலை நரைத்துப் போனது எனக் குழம்பிப் போனார்கள்.
காற்றால் தான் தலை வெண்ணிறமாகிறது என்பதை அவர்கள் கண்டறிந்த போதும் அவர்களால் காற்றைத் தடுக்க இயலவில்லை. அக்காற்று தெற்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்த போது வழியிலிருந்த ஊர்கள் யாவும் அதன் பாதிப்பிற்குள்ளாக்கின.
அந்தத் தேசத்தில் கறுத்த தலைமயிர்கள் கொண்ட ஒரு மனிதனைக் காண முடியவில்லை. புகைப்படங்களிலிருந்த மனிதர்களின் தலைமுடி நிறம் கூட வெண்மையாகிப்போனது தான் விந்தை.
இதுவரை கேசத்தின் நிறத்தைக் கொண்டே வயதை அறிந்து வந்த காரணத்தால் இப்போது யார் இளைஞன், யார் முதியவர் எனக் கண்டறிவது குழப்பமானது. யாரை எப்படி நடத்துவது என்ற தடுமாற்றம் உருவானது.
தலைமயிர் தானே வெண்மையாகிப் போனால் போகட்டும் என ஒருவரும் நினைக்கவில்லை. செயற்கை மை பூசி தலையைக் கருமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் சில நிமிடங்கள் கூட அந்தக் கருமை நீடிக்கவில்லை. காற்றின் வேகத்தில் தலை தானே வெண்ணிறமானது.
என்ன குழப்பமது. மனிதர்களுடன் ஏன் இப்படி காற்று   விளையாடுகிறது என்று புலம்பினார்கள். எல்லோரது தலையும் வெண்மையானதால்  நிறைய மாற்றங்கள் உருவாகின.
தலைநரைத்த இளையோர், முதியவர்களைப் போல நடந்து கொள்ள ஆரம்பித்தார்கள். சில நேரம் சிறார்கள் முதியவர்களைத் தங்களின் தோழர்கள் போல விளையாட அழைத்தார்கள். தலைதான் நரைத்துவிட்டதே இனி என்ன ஆசைகள் எனப் பலரும் [புலன் ஒடுங்கிப்போக ஆரம்பித்தார்கள். ஷாப்பிங் மால்களில் கூட்டம் குறைய ஆரம்பித்தது
தலை நரைப்பது என்பது ஆணிற்கு அதிகாரத்தைக் கூடுதலாக்கித் தருகிறது. பெண்ணிற்கோ உடலைக் கடந்த பெரும் சுதந்திரத்தைத் தருகிறது. ஆகவே இந்த மாற்றத்தைப் பெண்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார்கள். வெண்ணிறக் கூந்தலில் அழகிய மலர்கள் சூடி சந்தோசப்பட்டுக் கொண்டார்கள்
ஆண்களால் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வதைச் சகிக்க முடியாத விஷயமாகக் கருதினார்கள். கறுத்த தலைமயிர் இருந்த காலத்தைப் பற்றி ஏக்கத்துடன் பேசிக் கொண்டார்கள்.
ஆயிரமாயிரம் வருஷங்களாக நரைத்த தலைமயிரை முதுமையின் அடையாளமாகக் கொண்டிருந்த சமூகம் மெல்ல வயதற்றவர்களாகத் தன்னை உணரத் துவங்கியது.
வீட்டின் தனியறைகளில் ஒடுங்கிக் கிடந்த முதியவர்கள் இந்த மாற்றத்தின் பின்பு பொதுவெளியில் மகிழ்ச்சியாக ஓடியாடித் திரிவதையும் ,அவர்கள் உலகை ஆசையாக அரவணைத்துக் கொள்வதையும் காண முடிந்தது.
காற்றுக்கு வயதாவதில்லை. அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறது என்றாள் ஒரு பெண். சரி தான் என்று சொன்னாள் இன்னொருத்தி. அது அவளது அங்கீகாரம் மட்டுமில்லை.
••

31/1/20

0Shares
0