குறுங்கதை 44 வழிப்போக்கன்

தொலைவில் காணும் போது அந்த ஊர் மிகச்சிறியதாகவே தெரிந்தது. ஆண்டுக்கணக்கில் இலக்கற்று நடந்து திரிந்த அந்த மனிதன்  சோர்ந்து போயிருந்தான். பசியும் தாகமும் வாட்டின.

அந்த ஊரினுள் வந்தவுடன் ஒருவர் கூட அவன் யார் எந்த ஊர் என எதையும் விசாரிக்கவில்லை. மாறாக எங்கள் வீட்டிற்குச் சாப்பிட வாருங்கள் எனப் பலரும் அழைத்தார்கள். ஒரு வீட்டில் சாப்பிடுவதற்கு ஒத்துக் கொண்டான். அந்த வீட்டிலிருந்தவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு வீடு திரும்பிய மகனை வரவேற்பது போல ஆசையாக உணவளித்தார்கள்.

சாப்பிட்டு முடித்த பிறகு தான் பார்த்தான். அந்த வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்குப் போவதற்கு உள்ளாகவே வழியிருந்தது. “இது என்ன புதிதாக இருக்கிறதே“ எனக்கேட்டான்.

“இந்த ஊரில் எல்லா வீடுகளும் உள்ளுக்குள் இணைக்கப்பட்டிருக்கின்றன. எந்த வீட்டிலிருந்தும் எந்த வீட்டிற்கும் போய்வரலாம். நாங்கள் தனித்தனியே வசிக்கிறோம். ஆனால் உள்ளுக்குள் ஒன்றாக ஒரே பெரிய வீடு போலவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். “

வழிப்போக்கன் ஆச்சரியமாக இருக்கிறதே என்றபடியே “அடுத்தவரைப் பற்றிப் பயம் கிடையாதா“ எனக்கேட்டான்.

“இந்த ஊரில் எவரும் அடுத்த மனிதனைச் சந்தேகிக்கவே மாட்டோம். வலது கை இடது கையைச் சந்தேகிக்குமா என்ன“ எனக்கேட்டார்கள்.

வியப்போடு அந்த வழிப்போக்கன் கேட்டான்

“வெளியாட்களையும் நம்புவீர்களா“

“தொலைவிலிருந்து தானே வெளிச்சம் வருகிறது. தொலைவிலிருந்து தானே மழை வருகிறது. தொலைவிலிருந்து வரும் காற்றும் பறவைகளும் மகிழ்ச்சியைத் தானே தருகின்றன. தொலைவிலிருந்து தான் நன்மைகள் வருகின்றன என நாங்கள் நம்புகிறோம். அதனால் தான் வெளியாட்களையும் நம்புகிறோம்.“

வியப்பாக இருக்கிறது என இரண்டாம் முறையாகச் சொல்லிக்கொண்டான்

ஊரைச் சுற்றிப் பார்க்க வந்த போது சிறுவர்கள் வட்ட வட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான்.

“இது என்ன புதிதாக இருக்கிறதே“ எனக்கேட்டான்

“ஊரிலுள்ள எல்லாச் சிறுவர்களும் ஒன்றாகத்தான் சாப்பிடுவார்கள். எல்லோர் வீட்டிலிருந்தும் சமைக்கப்பட்ட உணவு ஒன்றாக வைக்கபட்டுவிடும். இருப்பதை அனைவரும் பகிர்ந்து சாப்பிடுவார்கள்“

“நல்ல பழக்கம்“ என்றான் வழிப்போக்கன்

“இங்கே திருமணம் என்பது எளிமையானது. ஒரு கைப்பிடி செம்மண்ணை மணமகன் கொண்டு வருவான். ஒரு குவளை தண்ணீரை மணமகள் கொண்டுவருவாள். அந்த மண்ணில் தண்ணீரைக் கலக்கச் செய்வார்கள். மண்ணோடு நீர் கலப்பது தான் திருமணம்“

வியப்பாக இருக்கிறது என மூன்றாம் முறையாகச் சொன்னான்

அந்த ஊர்வாசிகள் சொன்னார்கள்

“இந்த ஊரில் பழைய பாதையொன்று இருக்கிறது. அது பல நூறு வருஷங்களாக உள்ள பாதை. எந்தப் பேச்சுவார்த்தையும் நல்ல நிகழ்வுகளும் அந்தப் பாதையில் வைத்துப் பேசியே முடிவு செய்யப்படும். அந்தப் பாதை அறியாத ஒரு ரகசியமும் ஊருக்குக் கிடையாது. பழைய பாதை தான் ஊரின் அடையாளம். பாதை ஒரு போதும் பொய் சொல்லாது “

அந்த வழிப்போக்கன் சொன்னான்

“கடலின் ஆழத்தில் முத்து விளைவது போல உலகம் அறியாத சிற்றூரில் நல்ல மனிதர்கள் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுகிறீர்கள். கடவுளுக்கு நன்றி சொல்வேன். அதிசயம் என்பது மனிதர்களே தான். “

மிகுந்த மகிழ்ச்சியோடு அவன் தனது பயணத்தைத் தொடரத்துவங்கினான்.

••

ஏப்ரல் .9. 20

0Shares
0