குறுங்கதை- 5 எவரது கண்ணீர்

திருமண வீட்டில் அந்த முதியவரைக் கண்டேன். திருமண மேடையைப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எண்பது வயதைத் தாண்டிய தோற்றம். கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. வீங்கிய பாதங்கள். பட்டு வேஷ்டியைத் தளர்வாகக் கட்டியிருந்தார். வேஷ்டி விலகி தொடை தெரிந்தது. சிறுவர்கள் அணிவது போலக் காலர் இல்லாத  சட்டை. மணமகளின் தாத்தா என்றார்கள். அவரது கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவர் பேசும் போது கிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வருவது போலத் தெளிவற்றுக் கேட்டது. வீட்டில் படுக்கையிலே கிடப்பவர் போலும். ஒருபக்க முகமே வெளிறிப்போயிருந்தது.

திருமண மண்டபத்திற்கு வந்த போதிலிருந்து அவரது கண்களிலிருந்து தானே கண்ணீர் கசிந்து கொண்டேயிருந்தது. அவராகத் துடைத்துக் கொள்ளவில்லை. யாராவது உறவினர்கள் வந்து கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துவிட்டுப் போனார்கள்.

ஏன் இப்படி அழுது கொண்டேயிருக்கிறார். வயதானவர்கள் கண்ணீர் விடும் போது கண்ணீரின் கனம் கூடி விடுகிறது. நானாக அவர் அருகில் போய் உட்கார்ந்து கொண்டு தெரிந்தவர் போலப் பேச ஆரம்பித்தேன். அவருக்கு நான் கேட்டதோ, பேசுவதோ எதுவும் புரிந்தது போலத் தெரியவில்லை.

கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது என்று அவரது கன்னத்தைச் சுட்டிக்காட்டினேன். அவர் மெல்லிய குரலில் அது “என் கண்ணீரில்லை“ என்றார். தன் கண்ணிலிருந்து வரும் கண்ணீரை அறியாத மனிதனும் இருக்கக்கூடுமோ.

பட்டுப்பாவாடை அணிந்த ஒரு சிறுமி அருகில் வந்து “தாத்தா ஏன் அழுறே“ எனக்கேட்டாள். “நான் எங்க அழறேன்“ என்று அவளிடமும் சொன்னார். அவள் கன்னத்தில் வழியும் கண்ணீரை விரலில் தொட்டு அப்போ இது யாரு கண்ணீர் எனக்கேட்டாள்.

“யாருதுனு தெரியலை. கண்ணீரை வச்சி அது யாருதுனு எப்படி அடையாளம் தெரிஞ்சிகிடுறது“ என அவர் கேட்டார்.

“போ.. தாத்தா. நீ அழுறது கூட உனக்குத் தெரியலை“ என்றாள் அச்சிறுமி.  அவர் யாரிடமோ சொல்வது போலச் சொன்னார்.

“இந்த உடம்புல கைகாலு நான் சொன்னபடி கேட்க மாட்டேங்குது. தலை ஒரு பக்கமா இழுத்துகிட்டு போகுது. எழுந்து நிக்கமுடியலை. நடக்க முடியலை. அப்படித் தான் கண்ணும், அது இஷ்டத்துக்கு நடக்குது போல.. எதை நினைச்சி அழுதோ யாருக்குத் தெரியும் “என்றார்.

அச்சிறுமி தனது வெள்ளை நிற கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கலைந்து போன அவரது தலையையும் சரி செய்துவிட்டாள். அது அவருக்குப் பிடித்திருந்தது போலும். லேசாக முகத்தில் சிரிப்பு வந்து போனது. தாலி கட்டி முடிந்தவுடன் மணமகனும் மணமகளும் அவரிடம் ஆசி வாங்கினார்கள். அப்போது மணமகளின் கைகளில் அவளது கண்ணீர் விழுந்தது.

“ஏன் தாத்தா அழுறே“ என அவளும் கேட்டாள். தெரியலை. “உங்கம்மா கல்யாணத்துல அழுதேன். இப்போ உன் கல்யாணத்துல அழுறேன். எதுக்குனு தெரியலை. ஆனா.. அழுகை தானா வருது.. நாளைக்கு மண்ணுக்குள்ளே போயிட்டா அழ முடியாதுல்ல.“என்றார்

மணமகள் முகத்தில் மெல்லிய வேதனை படர ஆரம்பித்தது. அப்படிப் பேசாதே தாத்தா.. என அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

பிறகு ஒரு ரோஜாவின் இதழ் ஒன்றை எடுத்து அவரது கண்ணீரைத் துடைத்தாள். அது அவருக்குப் பிடித்திருந்தது போலும். அப்போதும் அவர் முகத்தில் மெல்லிய சிரிப்பு ஒடி மறைந்தது.

••

0Shares
0