குறுங்கதை 56 உலகம் கேட்கிறது.

வாழ்வில் முதன்முறையாக ஒரு ரேடியோ ஸ்டேஷன் முன்பு நிற்கிறோம் என்ற யோசனையோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். அவரது கையைப்பிடித்தபடியே நின்றிருந்தான் அவரது ஒன்பது வயது மகன் பாலு. அகில இந்திய வானொலி நிலையம் முன்பாக அவர்கள் நின்றிருந்தார்கள்.

1970களில் சில வீடுகளில் தான் ரேடியோ இருந்தது. ராகவன் பர்மாவில் வேலை செய்தவர் என்பதால் அங்கிருந்து வால்வு ரேடியோ ஒன்றை வாங்கி வந்திருந்தார். அந்த வானொலியில் லைட் எரிவதற்கே ஐந்து நிமிஷங்கள் ஆகும். அதன்பிறகு கரகரவெனச் சப்தம் கேட்கத்துவங்கி பத்து நிமிஷங்களுக்குப் பிறகு தான் ரேடியோ பாட ஆரம்பிக்கும்.

அந்நாட்களில் ரேடியோவிற்கு லைசன்ஸ் வாங்க வேண்டும். ராகவன் அதற்கான லைசன்ஸ் வாங்கியிருந்தார். அது பிரேம் போடப்பட்டுச் சுவரில் தொங்கியது. ரேடியோவில் செய்தி ஒலிபரப்பாகும் நேரம் ராகவன் வீட்டு முன்னால் பெரிய கூட்டம் திரண்டிருக்கும். ரேடியோ தான் வெளியுலகையும் அவர்கள் கிராமத்தையும் ஒன்றிணைத்தது. ரேடியோவில் எத்தனையோ தலைவர்கள் பேசி ராகவன் கேட்டிருக்கிறார். ஆனால் இதுவரை ஒருமுறை கூட ரேடியோ ஸ்டேஷனைப் பார்த்ததேயில்லை.

ராகவனின் வீட்டில் பல ஆண்டுகளாக அந்த ரேடியோ பாடிக்கொண்டேயிருந்தது. வீட்டுப்பெண்களுக்கு அது தான் உலகோடு இருந்த ஒரே துணை.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ராகவனின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. ராகவனின் மகன் படிக்கும் பள்ளியிலிருந்து பாலுவை ரேடியோவில் கதை சொல்வதற்குத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்ற செய்தி அதிலிருந்தது. அவரால் நம்ப முடியவில்லை. தங்கள் குடும்பத்தில் முதல் ஆள் ரேடியோவில் பேசப்போகிறான் என்று பெருமைப்பட்டார். ரேடியோவில் ஒரு மனிதன் குரல் ஒலிப்பது சாமானிய விஷயமா என்ன.

குறிப்பிட்ட நாளில் அப்பாவும் பையனும் புத்தாடைகள் அணிந்து கொண்டு அதிகாலையிலே கிளம்பியிருந்தார்கள்

பத்தரை மணிக்குத் தான் ரேடியோ ஸ்டேஷனில் குரல்பதிவு. ஆனால் ஏழு மணிக்கு முன்பாகவே அதன் வாசலுக்கு வந்துவிட்டார்கள். ரேடியோ கேட்டுக் கேட்டு மனதில் பதிந்து போயிருந்த சித்திரத்திற்கும் அந்த அலுவலகத்திற்கும் தொடர்பேயில்லை.

கையிலிருந்த கடிதத்தைக் காவலாளியிடம் காட்டிய போது உள்ளே போகும்படி அனுப்பினான். அரைவட்ட மேஜை ஒன்றிலிருந்த பெண்மணி அந்தக் கடிதத்தை வாங்கி ஒரு நோட்டில் பதிவுசெய்துவிட்டு இன்னும் நேரமிருக்கிறது என மரபெஞ்சில் காத்திருக்கச் சொன்னாள்.

பின்பு கண்ணாடி அறை ஒன்றினுள் பாலுவை அழைத்துக் கொண்டு சென்று மைக் முன்னால் நிற்கச்சொன்னார்கள். அடுத்த அறையில் ராகவன் உட்கார்ந்து கொண்டார். ஐந்து நிமிஷத்திற்குள் கதையை முடித்துவிட வேண்டும் என நிகழ்ச்சி தயாரிப்பாளர் பாலுவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்

“யாரிடம் சொல்லவேண்டும்“ எனக்கேட்டான் பாலு

“யாரும் இருக்கமாட்டார்கள். நீயாகச் சொல்லிக்கொண்டேயிரு. பதிவு செய்து கொள்வோம்“ என்றார் தயாரிப்பாளர்

பிரபலமான இசையமைப்பாளர்கள். பாடகர்கள். பேச்சாளர்கள் ரேடியோ ஸ்டேஷனுக்குள் தான் இருப்பார்கள் என்று நம்பி வந்த ராகவனுக்கு அங்கே யாருமில்லை என்பது ஏமாற்றமளித்தது.

பாலு கதை சொல்வதைக் கண்ணாடி வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ராகவன். அவன் தைரியமாகக் கதை சொல்லிக் கொண்டிருந்தான். ஐந்து நிமிஷத்தில் கதை முடிந்துவிட்டது. அவ்வளவு தானா எனப் பாலு ஏமாற்றமாகக் கேட்டான்

“அடுத்த வாரம் ஒலிபரப்பாகும். நேரம் தெரிவிக்கிறேன்“ என்றார் நிகழ்ச்சி தயாரிப்பாளர்

குறிப்பிட்ட நாளில் பாலு கதை சொல்வதை ஒலிபரப்பினார்கள். அன்று ரேடியோ கேட்க வீடு நிறையக் கூட்டம். ரேடியோவில் பாலு கதை சொல்வது ஒலிபரப்பாக ஆரம்பித்து.

வீட்டிற்குள்ளாகக் கேட்டுக் கொண்டிருந்த பாலுவின் குரலை ஊரும் உலகமும் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது ராகவனை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு குரல் வான்வெளிக்குச் சென்று அங்கிருந்து தன் வீடு தேடி வருகிறது என்பது எத்தனை வியப்பானது.

வானொலியில் ஒலிக்கும் போது பாலுவின் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.

பாலு கதை சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மாவின் கண்களில் தானே கண்ணீர் கசிந்தது. அவன் கதை சொல்லி முடித்தவுடன் பாட்டி ரொம்ப அதிர்ஷடசாலிடா பாலு என்று சொன்னாள்

ரேடியோ கேட்ட எல்லோரும் பாலுவைப் புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவரை ஒரு சாதனமாக மட்டுமே இருந்த ரேடியோ திடீரெனக் குடும்ப உறுப்பினர் போலாக மாறியது.

அன்றிரவு வீட்டோர் உறங்கிய பிறகு ராகவன் ரகசியமாக எழுந்து போய் ரேடியோ பெட்டியை முத்தமிட்டார்.

ஏன் அப்படிச் செய்தோம் என்று பிறகு கூச்சப்பட்டபோதும் ரேடியோவை முத்தமிட்டது அவருக்குச் சந்தோஷமாகவே இருந்தது.

••

0Shares
0