மலையடிவாரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மருதன் எப்போதும் வேங்கை மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான். மேகங்கள் கடந்து போவதை வேடிக்கை பார்ப்பது தான் அவனது பொழுதுபோக்கு. சில நேரங்களில் ஆடுகளுடன் பேசிக் கொண்டிருப்பான். மருதனுக்கென யாருமில்லை. இந்த ஆடுகளும் கூட அவனுக்குச் சொந்தமானவையில்லை. நல்லான் குடும்பத்துக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பவனாக இருந்தான். தான் எதற்காக வாழ்கிறோம். ஏன் தன்னை வாழ்க்கை இப்படியிருக்கிறது எனச் சில நேரம் சலித்துக் கொள்வான். ஆனால் இதிலிருந்து விடுபட அவனுக்கு வழிதெரியவில்லை
ஒரு நாள் மருதன் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மரத்தடியில் அமர்ந்திருந்த போது தொலைவில் ஒரு முயல் ஓடுவதைக் கண்டான். முயலை துரத்திப்பிடித்தால் சுட்டுச் சாப்பிடலாமே எனத் துரத்த ஆரம்பித்தான். உடைந்து கிடந்த பாறையைத் தாவி முயல் ஓடியது. ஆனால் மருதன் கல்லை வீசி முயலை வீழ்த்திவிட்டான். அடிபட்ட முயலை கையால் தூக்கும் போது அதன் காதுகள் இரண்டும் பச்சை நிறத்தில் இருப்பதைக் கண்டான்.
வெள்ளை முயலுக்கு எப்படிக் காதுகள் மட்டும் பச்சை நிறத்திலிருக்கின்றன என யோசித்த போது அந்த முயல் சொன்னது
“என்னை விட்டுவிட்டு, நான் சாதாரண முயல் இல்லை. நீ எதைக் கேட்டாலும் தருகிறேன்“
வியப்புடன் பார்த்தபடியே “நீ எப்படிப் பேசுகிறாய்“ எனக்கேட்டான்
“நான் பச்சைக் காதுள்ள முயல். என்னால் மனிதர்களுடன் பேச முடியும். உனக்கு என்ன தேவை எனக்கேள், தருகிறேன்“ என்றது
என்ன கேட்பது என மருதனுக்குத் தெரியவில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகு கேட்டான்
“இப்போது கிராமத்து மக்கள் எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்கள். அதில் நாள் முழுவதும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். எனக்கும் அப்படி ஒன்று வேண்டும். தனியாக இருந்து போரடிக்கிறது. தெரிந்தவர்களுடன் பேச வேண்டும். “
அவ்வளவு தானா என்றபடி மறுநிமிசம் அந்த முயல் அதி நவீன செல்போன் ஒன்றை அவனுக்குத் தந்தது. இதில் எப்படிப் பேசுவது எனக்கேட்டான். முயல் அவனுக்குச் செல்போனைப் பற்றிச் சொல்லி தந்தது.
மருதன் தனக்குத் தெரிந்தவர்களுடன், பால்ய வயது நண்பர்களுடன் செல்போனில் பேச ஆரம்பித்தான். ஒருவர் மூலம் மற்றவர் என யார் யாரிடமோ பேசினான். அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மதியம் சாப்பிடக் கூட மறந்து பேசிக் கொண்டேயிருந்தான். இடையிடை என்னை விட்டுவிடு என்று முயல் கெஞ்சியது.
நீண்ட நேரப் பேச்சிற்குப் பிறகு அவன் சொன்னான்
“உன்னை விடுவதாக இருந்தால் எனக்கு அன்லிமிடெட் இன்டர்நெட் மற்றும் அன்லிமிடெட் டவுன்லோடு வசதி தேவை. இணையத்தில் எவ்வளவோ விஷயங்கள் இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். அதை நான் அனுபவிக்க வேண்டும்“ என்றான். அரைநாளுக்குள் இப்படி இவ்வளவும் கற்றுக் கொண்டுவிட்டானே எனப் பயந்த முயல் அவன் கேட்டதை உடனே செய்து கொடுத்தது.
அவன் தனது அலைப்பேசி வழியாகவே சினிமா, பாட்டு, யூடியூப், விளையாட்டு போர்ன்வீடியோ, பேஸ்புக், மீம்ஸ். நகைச்சுவை, டிக்டாக் வீடியோ எனச் சுற்றியலைந்து கொண்டேயிருந்தான். மாலையாகியதையோ, இரவு வீடு திரும்ப வேண்டும் என்பதையோ மறந்து அவன் இணையத்திற்குள் சஞ்சரித்தபடியே இருந்தான். ஆடுகள் தானே அவனைத் தேடி வந்து நின்றன. அவன் ஆடுகளைக் கவனிக்கவேயில்லை.
இரவெல்லாம் மாயவுலகில் சஞ்சரித்தான். விதவிதமான நிர்வாணப் பெண் உடல்களைக் கண்டான். துருவ பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாடுகிறவனைப் பார்த்தான். காலின் ஒற்றை விரலில் நடனமாடும் பெண்ணை விநோதமாகப் பார்த்தான். சிங்கம், கரடி, புலி பனிச்சிறுத்தை என விதவிதமான விலங்குகளைத் துரத்தினான். ஏதேதோ தேசங்கள், மனிதர்கள் காட்சிகள் எனப் பிம்பங்களின் உலகில் கரைந்து போனான். விடிந்து மறுநாள் துவங்கியது. அவனுக்கு வெளியுலகம் தெரியவில்லை. அன்றைய பகலிற்குள் முயல் பசியில் சோர்ந்து போனது.
அன்று மாலை திடீரெனத் தன் உணர்வு கொண்டவன் போல மருதன் சொன்னான்
“கனவில் கூட இவ்வளவு இன்பங்களைப் பெற்றதில்லை. உலகம் எவ்வளவு பெரியது. எவ்வளவு மனிதர்கள், எத்தனை அழகழகான பெண்கள். வேடிக்கைகள். சாகசங்கள். அந்தப் பிம்பங்களில் நானும் ஒருவனாகிவிட வேண்டும். அது தான் என் கடைசி ஆசை. அதை மட்டும் எனக்காகச் செய்து கொடு உன்னை விட்டுவிடுகிறேன்“ என்றான் முயலிடம்.
முயல் அவன் விரும்பியபடியே அவனையும் பிம்ப உலகின் ஒரு துளியாக்கியது. மறுநிமிசம் அவன் கோடான கோடி பிம்பங்களில் ஒன்றாக இணையவெளியில் கலந்து போனான். அதன்பிறகு பச்சை காதுள்ள முயல் தன்னுடைய உலகை நோக்கிச் செல்லத்துவங்கியது
பாவம் ஆடுகள், மருதன் எங்கே போனான். எப்போது திரும்பி வருவான் எனத் தெரியாமல் அதே மலையடிவாரத்தில் பகலில் மேய்வதும் இரவில் வேங்கை மரத்தடியில் ஒன்றுகூடுவதுமாக இருந்தன.
மரத்தில் தொங்கவிடப்பட்ட மருதனின் தூக்குச் சட்டி மட்டும் அவன் தொலைந்து போய்விட்டான் தொலைந்து போய்விட்டான் என்பது போல ஓசை எழுப்பிக் கொண்டேயிருந்தது.
அதைக் கேட்க அந்தப் பிராந்தியத்தில் ஒருவர் கூட இல்லை
••