குறுங்கதை -7 சாலை ஓவியன்

சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை.

மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் அவளது கையைப் பிடித்தபடியே நிற்கும் பையன் முகத்தில் எப்போதும் சந்தோஷமே காணப்படும். ஒருவேளை அவன் தனது பால்யகாலத்தைத் தான் வரைந்து கொண்டிருக்கிறானோ என்னவோ.

சில நேரம் அவன் கரிக்கோட்டில் வரைந்த ஓவியத்திற்கு கலர் சாக்பீஸ் கொண்டு வண்ணமடிப்பான். அவன் ஒரு போதும் தனது ஓவியத்தின் அடியில் தனது பெயரை எழுதிக் கொண்டதில்லை. ஓவியத்தை முடித்தபிறகு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பான்.

மரத்திலிருந்து இலைகள் உதிர்வதைப் போலப் பகல் முழுவதும் யாரோ வீசி எறிந்த சில்லறைக்காசுகள் அந்த ஓவியத்தின் மீது விழுந்து கிடக்கும். அவற்றைக் கூட அவன் அவசரமாகச் சேகரித்து வைத்துக் கொள்வதில்லை.

தெருவிளக்கின் வெளிச்சம் ஓவியத்தில் படும்போது அவன் சில்லறைகளைப் பொறுக்கிக் கொண்டு சாப்பிடப்போவான். திரும்பி வந்து நடைமேடையிலுள்ள குப்பைத்தொட்டியை ஒட்டிய இடத்தில் படுத்து உறங்கிவிடுவான். பின்பு வழக்கம் போலப் பின்னிரவில் எழுந்து கொள்வான். .

ஒரு நாள் அவன் பின்னிரவில் ஓவியம் வரைந்து முடித்துவிட்டு எழுந்து கொள்ளும் போது அவன் வரைந்த சிறுவன் கையில் ஒரு அடர் மஞ்சள் வண்ண மலர் இருந்ததைக் கண்டான். இதைத் தான் வரையவில்லையே என்றபடியே அந்த மலரைத் தொட்டுப் பார்த்தான்.

நிஜமான மலரைப் போல அதிலிருந்து விநோத வாசனை வந்தது. எப்படி இது சாத்தியம் எனப்புரியாமல் குனிந்து அந்த மலரை அழித்துவிட முயன்றான். ஆனால் அம்மலரை அழிக்கமுடியவில்லை

அன்று அந்தச் சாலையைக் கடந்து போகிறவர்கள் விநோத மணத்தால் ஈர்க்கப்பட்டு தங்களை அறியாமல் சட்டைப் பையிலிருந்த சில்லறைகளை ஓவியத்தில் போட்டுச் சென்றார்கள். அன்றிரவு அவன் நாணயங்களைச் சேகரித்த போது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமிருந்தது.

மறுநாள் புதிய ஓவியம் வரைய முற்பட்ட போதும் அந்த மலரைச் சிறுவன் கையிலிருந்து அழிக்க முடியவில்லை.

அவனுக்கும் ஓவியத்திற்குமான உறவு மாறிப்போனதை அவன் உணர்ந்தான். மரத்தின் கிளையில் மலர் அரும்புவது போலத் தனது ஓவியத்திலும் மலர் அரும்புகிறதே. இது எப்படி. . ஓவியத்தைத் தான் மட்டும் வரையவில்லை என்பது அவனுக்குப் புரிந்தது.

இந்த விநோத வாசனை காரணமாக நாளுக்கு நாள் அவனது வருவாய்ப் பெருகியது. ஓவியன் நடைமேடையினை விட்டு விலகி தனக்கென ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டான். அங்கிருந்து பின்னிரவில் எழுந்து வந்து சாலையில் ஓவியம் வரைந்தான்.

சில்லறைகள் போடுவதற்கு வசதியாக அவன் ஓவியத்தின் அருகில் ஒரு மரப்பெட்டியை ஏற்பாடு செய்தான். நாளடைவில் சில்லறைகளுடன் நிறைய ரூபாய் நோட்டுகளும் அந்தப் பெட்டியில் குவிந்தன. மிதமிஞ்சிக் குடிக்கவும் பெண்களுடன் மகிழ்ச்சியாக இரவைக்கழிக்கவும் துவங்கினான். இதனால் அவன். பல நாட்கள் ஓவியம் வரையவில்லை.

பின்பு ஒரு நாளின் பின்னிரவில் அவன் சாலையில் புதிய ஓவியம் வரைய ஆரம்பித்த போது எவ்வளவு முயன்றும் சிறுவனின் முகத்தில் சந்தோஷத்தைக் கொண்டுவர முடியவில்லை.

சிறுவனின் முகம் இருண்டு கவலை கொண்டதாக மாறியது. சிறுவன் கையில் தோன்றிய மஞ்சள் நிற மலரும் இப்போது நிறம் மாறி அடர் சிவப்பில் இருந்தது அவன் அதைப் பெரியதாகப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் ஓவியத்திலிருந்த சிவப்பு மலரிலிருந்து பகலில் துர்நாற்றம் வர ஆரம்பித்தது. மக்கள் அந்த ஓவியனைத் திட்டினார்கள். பலர் கூடி அந்த ஓவியத்தை அழித்தார்கள். ஆனால் அந்த மலரை அழிக்க முடியவேயில்லை

கோபமுற்ற ஒருவன் ஓவியனைத் தேடிப் போய் உதைத்தான். தான் அந்த மலரை வரையவில்லை என்று ஓவியன் வலியோடு புலம்பினான். ஒருவரும் அதை நம்பவில்லை. அந்த ஓவியனை அடித்துத் துரத்த வேண்டும் என்பதில் ஊரே ஒன்றுகூடியது. பின்பு அந்த ஓவியனை அந்த நகரில் காணமுடியவில்லை. ஆனால் அழியாத மலர் ஒன்று சாலையில் நீண்டகாலமிருந்தது. பின்னொரு பெருமழை நாளில் அந்த மலர் சாலையிலிருந்து தானே மறைந்து போனது.

••

0Shares
0