குறுங்கதை 85 ஓடிப்போனவன்.

பால்காரனுக்குத் தருவதற்காக அம்மா வைத்திருந்த பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு ஒடிய அந்தப் பையன் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்த பணத்தை மறுபடியும் எண்ணிப்பார்த்துக் கொண்டான். சரியாக 638 ரூபாய் இருந்தது.

இதை வைத்துக் கொண்டு எங்கே போவது என்ன செய்வது எதுவும் தெரியவில்லை. ஆனால் இனி வீட்டிற்குத் திரும்பிப் போகக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தான். பதின்வயதுகளில் வீடு ஒருவனுக்கு அந்நியமாக ஆரம்பிக்கிறது. வீட்டின் கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள். கெடுபிடிகள் எரிச்சலூட்டுகின்றன. எவர் முகத்தையும் பார்க்கப் பிடிக்கவேயில்லை.

எங்காவது ஓடிப்போய்விடலாம் என்ற எண்ணம் எட்டாம் வகுப்பில் பெயிலாகிப் போன நாளில் துவங்கியது. ஆனால் அப்பா கேட்கவில்லை. மறுபடியும் எட்டாம் வகுப்பிலே படிக்கும்படி சொன்னார். கட்டாயத்தின் பெயரால் வகுப்பிற்குப் போக அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியர்களின் பரிகாசம் அவனை மேலும் வேதனைப்படுத்தியது.

நீண்ட பயணத்தின் பின்பு மதுரைக்கு வந்த போது யாரும் தெரிந்தவர் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான். பரபரப்பான மனிதர்களை வேடிக்கை பார்த்தபடியே டவுன் ஹால் ரோடில் சுற்றினான். சாலையோரக் கடை ஒன்றில் ஒரு தொப்பி வாங்கி வைத்துக் கொண்டான். தொப்பி வைத்தவுடன் ஆளே மாறிவிட்டது போல நினைத்துக் கொண்டான்.  விசில் அடித்தபடியே மீனாட்சியம்மன் கோவிலை நோக்கி நடந்தான். கோவில் கோபுரத்தை வேடிக்கை பார்த்தபடியே வெளியே நின்றான். உள்ளே போக மனமில்லை.

என்ன படம் ஓடுகிறது என்று ஒவ்வொரு சினிமா தியேட்டராகப் போய்ப் போஸ்டர்களை வேடிக்கை பார்த்து வந்தான். ரோட்டுக் கடையில் இட்லி ஆம்லேட் சாப்பிட்டான். இரவுக்காட்சி சினிமாவிற்குச் சென்றான். திரையரங்கத்தில் மொத்தமே நூறு பேர் கூட இல்லை. படம் ஓடிக்கொண்டிருந்த போதும் மனதில் ஏதோ கவலைகள். நினைவுகள்.

சினிமா விட்டு வெளியே வந்த போது எங்கே போவது எனத் தெரியவில்லை. இருண்டு கிடந்த பேருந்து நிலையத்தின் சிமெண்ட் பெஞ்சு அருகே சுருண்டு படுத்து கிடந்த பிச்சைக்காரனை ஒட்டி உட்கார்ந்து கொண்டான். உறக்கம் வரவில்லை. பயம் அதிகமானது. பையிலிருந்த காசை மறுபடியும் எண்ணிப் பார்த்துக் கொண்டான்.

யாராவது பணத்தைப் பறித்துக் கொண்டுவிடுவார்களோ எனப்பயமாக இருந்தது. எந்தப் பஸ் வருகிறதோ அதில் ஏறிப் போய்விட வேண்டியது தான் என முடிவு செய்தான். சேலம் போகிற பஸ் வந்தது. அதில் ஏறி கடைசி சீட்டில் உட்கார்ந்து கொண்டான். சில நிமிஷங்களில் உறங்கிப் போனான்

ஏழு மணிக்குச் சேலம் வந்து இறங்கிய போது எங்கே போவது எனத் தெரியவில்லை. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள ஒரு ஹோட்டலில் வேலை கேட்டான். கிடைக்கவில்லை. ஆனால் அதே தெருவிலிருந்த கணபதி மெஸ்ஸில் வேலை கிடைத்தது. எச்சில் இலையை எடுத்துப் போடும் வேலை.

இரண்டு நாட்கள் வேலை செய்வதற்குள் அவமானத்தில் ஒடுங்கிப்போனான். வீட்டில் ஒரு நாள் தட்டு டம்ளரைக் கழுவி வைத்ததில்லை. துணி துவைத்ததில்லை. ஏன் ஒருநாள் கூடப் படுத்த படுக்கையை மடித்து வைத்ததில்லை. அதெல்லாம் நினைவிற்கு வந்து போனது. அவனது கையில் உள்ள காசு குறைந்து கொண்டே வந்தது. எங்கே இப்படியே எச்சில் இலை எடுக்கும் பையனாகவே வாழ வேண்டுமோ எனப்பயந்து சொல்லிக் கொள்ளாமல் ஐந்தாம் நாளிரவு ஊரை நோக்கி பயணம் செய்தான். வழியில் சாப்பிடக்கூடயில்லை.

ஊர் வந்து இறங்கிய போது பசித்தது. இன்னமும் பொழுது விடியவில்லை. விடியும் வரை அவர்கள் வீடு உள்ள வீதியிலிருந்த சலூன் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தான். வீடு அமைதியாக உறைந்து போயிருந்தது.

வீட்டிற்குப் போன போது ஒருவரும் அவன் எங்கே போனான் எனக் கேட்கவில்லை. அம்மா ஒரு டம்ளர் காபி கொண்டுவந்து கொடுத்தாள். யாராவது தன்னை விசாரிக்கமாட்டார்களா, திட்டமாட்டார்களா என ஏக்கமாக இருந்தது. யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. கண்டிக்கவில்லை.

காபியைக் குடிக்கக் குடிக்க அவனை அறியாமல் அழுகை வந்தது. அம்மா பால்காரனுக்கு வைத்திருந்த பணத்திற்குக் கடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டதும் அவனது அழுகை மேலும் அதிகமானது.

கொஞ்சம் கொஞ்சமாக வீடு அவனை உள்வாங்கிக் கொண்டிருந்தது.

•••

23.5.20

0Shares
0