குறுங்கதை 86 குடும்பச் சண்டை.

கடைக்குச் சென்றால் விதவிதமான பூஜாடிகளை வாங்கி வருவது அவளது வழக்கம். இத்தனை ஜாடியிலுமா பூக்களை வைக்கப்போகிறாய் என்று கணவன் கோவித்துக் கொள்வாள். அதற்கு அவள் பூஜாடிகள் பூக்கள் வைப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டவையில்லை என்பாள். அவனால் அதைப் புரிந்து கொள்ள முடியாது.

வேஸ்ட் ஆப் மணி என்று அவள் காதுபடச் சொல்வான். உடனே அவள் நீ மட்டும் விதவிதமான ஷுக்களை வாங்கி அடுக்கவில்லையா என்று சண்டையிடுவாள். அது உண்மை, அவனிடம் நூற்றுக்கும் மேற்பட்ட காலணிகள் இருந்தன. எந்தப் புது ஷு வந்தாலும் வாங்கி விடுவான்.

இந்தச் சண்டை நீண்ட நாட்களாக அவர்களுக்குள் நடந்து வந்தது. அவள் சீன, ஜப்பானிய, இத்தாலிய பூ ஜாடிகளை வாங்குவதும் அவன் புதிய காலணிகள் வாங்குவதும் மாறவேயில்லை. வீண்செலவு என மாறி மாறி திட்டிக் கொண்டார்கள்

ஒரு நாள் அவள் வேண்டுமென்றே ஆள் உயரமுள்ள  பூஜாடிகளாக முப்பது நாற்பது வாங்கி வந்தாள். அவற்றை வைப்பதற்கு இடமில்லாத போது சமையலறை முழுவதும் பூ ஜாடிகளை நிரப்பி வைத்தாள். இது கணவனின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது.

அவளுடன் போட்டியிடுவதற்காக அவன் விதவிதமான பிராண்ட்களில் நூறு ஷுக்களை வாங்கி வந்தான். அதைக் கண்டு அவள் கோபம் கொண்டபோது உன்னைப் போலவே எனக்கும் இதை வாங்கும் போது காரணமில்லாத மகிழ்ச்சி கிடைக்கிறது என்றான்.

அவனை இப்படியே விடக்கூடாது நினைத்த அவள் மறுநாள் ஒரு வேன் நிறையப் பூஜாடிகளைக் கொண்டு வர ஆர்டர் செய்தாள். அந்த ஜாடிகளைக் கீழே இறங்கிய கூலியாட்கள் அதை எங்கே வைப்பது எனக்கேட்டதும் படுக்கை அறைக் கதவைத் திறந்துவிட்டாள். மீதமிருப்பதை மொட்டை மாடி முழுவதும் கொண்டு போய் வையுங்கள் என்றாள்.

அன்றிரவு அவன் வீடு திரும்பிய போது படுக்கை அறைக்குள் நுழைய முடியவில்லை. சோபாவில் தான் உறங்கினான்.

மறுநாள் அலுவலகம் விட்டுத் திரும்பி வரும் போது வேன் நிறைய மரத்தால் செய்யப்பட்ட ஷூ ரேக்குகளை வாங்கி வந்தான். அவற்றை எங்கே வைப்பது எனத் தெரியாமல் குளியல் அறை மற்றும் பால்கனி முழுவதும் நிரப்பி வைத்தான். அவளால் குளியல் அறைக் கதவைத் திறந்து உள்ளே கூடச் செல்ல முடியவில்லை.

ஆத்திரமடைந்த மனைவி மறுநாள் தனது சேமிப்பிலிருந்த பணத்தை எடுத்து லாரி நிறையப் பூக்குவளைகளை வாங்கி வீட்டின் முன்னால் குவித்து வைத்தாள். இப்போது அவனால் வீட்டிற்குள் போகவே முடியவில்லை.

உடனே கணவன் தனது சேமிப்பிலிருந்த பணத்தை எடுத்து பெரிய டிரக் நிறையக் காலணிகளை ஆர்டர் செய்து அவற்றை வீதியை மறித்து நிரப்பி விட்டான்.

கணவன் மனைவி சண்டையால் அந்த வீதியில் குடியிருந்தவர்கள் எவராலும் வெளியே நடமாட முடியவில்லை. முடிவில் காவல்துறை தலையிட்டது. இருவரையும் கைது செய்து தனிமைச் சிறையில் அடைத்தார்கள்.

அந்தச் சிறையில் ஒரு பொருள் கூடக் கிடையாது. வெறுந்தரை, சுற்றிலும் பளுப்படைந்த சுவர்கள். சிறையின் வலது பக்க மூலையில் ஒரு அழகான பூக்குவளை வைத்தால் நன்றாக இருக்கும் என அந்தப் பெண் யோசித்தாள்.

அது போலவே சிறையில் அடைக்கப்பட்ட கணவன் அழுக்கடைந்து போன இந்தத் தரையில் நடக்க மிருதுவான புதுச்செருப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் யோசித்தான்.

அவர்கள் மாறவேயில்லை

••

0Shares
0