குறுங்கதை 89 சினிமா பார்த்தவன்.


யஜுசிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி சினிமா பார்த்துத் திரும்பும் போது மாறன் தனது தந்தையும் தாயையும் நினைத்துக் கொண்டான்.

படத்தில் வரும் பெற்றோர் டோக்கியோவுக்கு வந்ததும் தங்கள் தனிமையை நினைத்துப் பயப்படுகிறார்கள். சொந்த பிள்ளைகளால் பிரித்து வைக்கப்படுகிறார்கள். நிராகரிக்கப்படுகிறார்கள். அந்தப் பிள்ளைகளில் ஒருவனைப் போலத் தன்னை உணர்ந்தான்.

படம் முடிந்து வெளியே வந்த போது மாநகரம் உறங்கியிருக்கவில்லை. வாகன இயக்கம் குறைந்திருந்தது. நடந்தே அறைக்குத் திரும்ப வேண்டும். கோடம்பாக்கம் பாலத்தை ஒட்டிய மேன்ஷன் ஒன்றில் குடியிருந்தான்.

இது போன்ற ஜப்பானியப் படங்களை எல்லாம் பிலிம் சொசைட்டியில் தான் திரையிடுவார்கள். அதற்கு உறுப்பினர் ஆக வேண்டும். சினிமா இயக்க வேண்டும் என்ற ஆசையில் கரிசல் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தான் பிலிம் சொசைட்டியில் உறுப்பினராகப் பணம் கிடைத்தது. அதுவும் கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து படங்கள் பார்க்கிறான்.

பெரும்பான்மை வெளிநாட்டுப் படங்களை அறிவாளிகள் கொண்டாடும் போது அவன் எதற்காகப் புகழுகிறார்கள் எனத் தெரியாமல் வெறித்தபடியே இருப்பான்.

எந்தப்படம் பற்றியும் யாரும் கற்றுத் தர மாட்டார்கள். புரிந்து கொள்ள உதவி செய்யமாட்டார்கள். வெளிநாட்டுப் படம் பார்க்க வருபவர்களில் ஐம்பது விழுக்காடு சினிமாவோடு தொடர்பில்லாதவர்கள். அவர்களின் நோக்கம் வேறு.

ஆனால் டோக்கியோ ஸ்டோரி படம் துவங்கிய சில நிமிடங்களில் மாறன் கரைந்து போகத் துவங்கியிருந்தான். மாநகரில் வசிக்கும் பிள்ளைகளைக் காண டோக்கியோ புறப்பட்ட பெற்றோர்களுடன் அவனும் ரயில் ஏறினான்.

அந்தத் தந்தையின் சாயலில் கிராமத்து விவசாயியான தனது தந்தையைக் கண்டான். படத்தில் வரும் தாயை விடவும் தனது தாய் மெலிந்தவள். அவர்கள் கிராமத்திற்கு ரயிலோ பஸ்ஸோ கிடையாது. விலக்கு சாலை வரை நடந்து போய்த் தான் பஸ் ஏற வேண்டும். சிறுவயதில் அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு அப்பா விலக்கு ரோட்டிலிருந்து நடந்து வந்திருக்கிறார்.

எப்போது சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பிப் போனாலும் அம்மாவிற்கு ரங்கநாதன் தெருவில் விற்கும் காட்டன் புடவை ஒன்றை வாங்கிக் கொண்டு போவான். அதை அம்மா ஒரு போதும் கட்டிக் கொள்ளமாட்டார். அக்காவிற்கோ அல்லது அத்தை பிள்ளைகளுக்கோ கொடுத்துவிடுவாள். அம்மாவிடம் இருப்பது நான்கே சேலைகள். அது போதும் என்றிருக்கிறாள்.

ஒருவேளை நாளை அவன் திரைப்பட இயக்குநர் ஆனாலும் கூட அவனைக் காண அப்பாவும் அம்மாவும் மாநகருக்கு வரமாட்டார்கள். அவர்களுக்குச் சினிமா பார்க்கும் பழக்கமே கிடையாது. அவர்கள் கிராமத்தில் சினிமா தியேட்டரும் கிடையாது. அவனது பெற்றோர் உழைப்பு, உழைப்பு எனத் தன் உடலைத் தேய்த்து அழித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்பாவும் அம்மாவும் சேர்ந்து பயணம் சென்றதேயில்லை. அப்பா அதிகபட்சம் விதைகளோ, உரமோ வாங்க அருப்புக்கோட்டை வரை சென்று வருவார். அம்மாவிற்கு அதுவும் கிடையாது. அவன் சிறுவனாக இருந்த போது ஒரு முறை திருச்செந்தூர் போயிருக்கிறார்கள். அது தான் அதிக பட்ச பயணம். வீடு, தோட்டம். முள் வெட்டுவதற்காகச் செல்லும் கண்மாய். கிணறு, ரேஷன்கடை இவ்வளவு தான் அவளது உலகம். அம்மா இதுவரை மருத்துவமனைக்குக் கூடச் சென்றது கிடையாது. பிரசவம் கூட வீட்டில் தான் நடந்தது.

டோக்கியோ ஸ்டோரியில் வரும் தந்தையும் தாயும் பிள்ளைகளை ஒரு போதும் குற்றம் சொல்லவேயில்லை. அவர்கள் பெரிய நகரில் சிறியதொரு வாழ்க்கையை நடத்துகிறார்கள் என்று உணருகிறார்கள்.

தன்னைப் பற்றியும் தந்தையும் தாயும் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருப்பார்கள் என மாறன் உணர்ந்தான்.

ஊருக்குப் போகும் நாட்களில் ஒருமுறை கூட அவன் படம் எடுப்பானா என்று கேட்டதே கிடையாது. சினிமாவில் என்ன கஷ்டங்களைப் படுகிறான் என அவனும் சொன்னதே கிடையாது.

எப்போதாவது கோடிகளில் சம்பாதிப்பேன் என்று அவன் அம்மாவிடம் சொல்லும் போது அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு உன் பணம் காசு எங்களுக்கு வேணாம்பா. குடிக்கிற கஞ்சி போதும் என்பாள்.

டோக்கியோ ஸ்டோரி பார்த்துக் கொண்டிருந்த போது அந்த நினைவுகள் அவன் மனதைக் கனக்க வைத்தன. கண்ணீர் கசியப் படம் பார்த்தான்.

அறைக்குத் திரும்பி வரும் போது அம்மா அப்பாவை பற்றி இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா என ஆதங்கப்பட்டான். அவர்கள் இருவரையும் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்று தோன்றியது.

அப்பா அம்மா திருமணத்தில் கூடப் போட்டோ எடுத்தது கிடையாது. அடுத்த முறை ஊருக்குப் போகையில் நண்பனின் கேமிராவை இரவல் வாங்கிக் கொண்டு போய் நிறையப் போட்டோ எடுக்க வேண்டும் என நினைத்தபடியே மேன்ஷனை நோக்கி நடந்தான். இன்னும் படம் இயக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் எனத் தெரியவில்லை. ஒருவேளை டோக்கியோ ஸ்டோரி போல அம்மா இறந்து விட்டால் என நினைத்த போது அவனை அறியாமல் விம்மினான்.

பாதையில் அடர்ந்திருந்த இருட்டு அவனைப் பார்த்துச் சிரிப்பது போலவே இருந்தது.

••

28.5.20

0Shares
0