டி.கே.கோபாலனுக்குச் சாவிகள் என்றால் பிடிக்கும். அதுவும் வீட்டுச்சாவியை வைத்துக் கொள்வது என்பது அவரது தனி உரிமை. வீட்டுச்சாவியைச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ளும் போது அதன் கனம் தாளாமல் பை ஒரு பக்கம் இழுக்கும். அந்தக் கனம் தான் அவரது பொறுப்புணர்வின் அடையாளம். வீட்டை நிர்வகிக்கிறோம் என்பதன் சாட்சியம். ஆகவே அவர் ஒரு போதும் வீட்டுச்சாவியை மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ தர மாட்டார்.
அவசரத்திற்கு மாற்றுச்சாவி ஒன்று போட்டு வைத்துக் கொள்வோம் என்று மனைவி சொன்ன யோசனையைக் கூடக் கேட்கவில்லை.
ஆகவே எப்போது வெளியே கிளம்பும் போதும் அவர் தான் வீட்டைப் பூட்டுவார் . திரும்பி வரும் போது அவர் தான் கதவைத் திறப்பார். ஏதாவது சில நேரம் கோவிலுக்கோ, சந்தைக்கோ மனைவி போய் வர வேண்டும் என்றால் கூடக் கடைப்பையனை வீட்டில் இருக்கச் சொல்லிவிட்டுத் தான் கிளம்ப வேண்டும்.
டி.கே.கோபாலன் சிறுவயதாக இருந்த போது சாவியைத் தொலைத்து விட்டதற்கு அப்பாவிடம் அடிவாங்கியிருக்கிறார். அதன் பிறகு ஒரு முறை கூட அவர் சாவியைத் தொலைக்கவேயில்லை.
சில நேரம் வீட்டுச்சாவியைக் கையில் எடுத்து வைத்து அழகுபார்த்தபடியே இருப்பார். மயில்தோகையைப் பார்ப்பது போல அத்தனை வசீகரமாக இருக்கும்.
சினிமாவிற்குப் போய்விட்டுத் திரும்பி வரும் நாளில் வழியில் டிபன் வாங்கி வர வேண்டும் என ஹோட்டலில் நின்ற நேரத்தில் அவரது மனைவியும் மகளும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பார்கள். அப்போது கூடச் சாவியை அவர்களிடம் கொடுத்து விட்டது கிடையாது. அவர்களும் அதைக் கேட்டது கிடையாது.
சந்தான கிருஷ்ணன் திருமணத்திற்காகத் திருநெல்வேலி கிளம்பிய நாளில் டாக்சியில் ஏறியபிறகு மனைவி தனது ஹேண்ட்பேக்கை எடுக்க வேண்டும் என வீட்டுச்சாவியைக் கேட்டாள். கொடுத்தவர் ஏதோ பேச்சுச் சுவாரஸ்யத்தில் திரும்ப வாங்க மறந்துவிட்டார்.
அவர்கள் திருநெல்வேலிக்குச் சென்று திருமண வீட்டிலிருந்தபோது திடீரென வீட்டுச்சாவி நினைவிற்கு வந்தது. அவரது மனைவியும் மகளும் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் உடனே எடுத்து தர இயலவில்லை.
வீடு வந்து சேர்ந்த போது அவரது மனைவி தன் ஹேண்ட்பேக்கில் சாவியைத் தேடினாள். சாவியைக் காணவில்லை. ஒருவேளை கோபாலன் எடுத்திருப்பாரோ என அவரிடமே கேட்டாள்.
வீட்டுவாசலில் நின்றபடியே “தொலைச்சிட்டயா. அதுக்குத் தான் உன் கையிலே சாவியைக் கொடுக்கமாட்டேனு தலையா அடிச்சிகிட்டேன்“ என்று கத்தினார் கோபாலன்.
அவள் பதற்றமாகி ஹேண்ட்பேக்கை தரையில் கொட்டித் தேடினாள். சாவி கிடைக்கவில்லை. கோபாலன் கோபத்தில் முகம் சிவக்கப் படியில் உட்கார்ந்திருந்தார்.
பூட்டுத் திறக்கும் ஆளை அழைத்து வருவதற்காக மகன் சென்றிருந்தான். இதற்குள் மகள் பின்கதவைத் தள்ளித் திறந்த போது தாழ்ப்பாள் சரியாகப் பூட்டப்படாத காரணத்தால் திறந்துவிட்டது. உள்ளே போய் முன்கதவை அவள் திறக்க முயன்றபோது டி.கே.கோபாலன் கதவைத் திறக்கக் கூடாது என்று ஆங்காரத்துடன் கத்தினார்.
மகன் அழைத்து வந்த பூட்டுத் திறப்பவன் மாற்றுச்சாவி தயார் செய்து தருவதாகச் சொன்ன போதும் கோபாலன் ஏற்றுக் கொள்ளவில்லை.
இனி இந்த வீட்டின் முன்கதவு திறக்கப்படாது. பின்கதவு வழியாகப் போய் வந்தால் போதும் எனக் கோபாலன் அறிவித்தார்.
மனைவியோ பிள்ளைகளோ அதை மறுக்கவேயில்லை.
அன்றிலிருந்து கோபாலன் வீட்டின் முன்கதவு பூட்டியே இருக்கிறது. எதுவும் நடக்காதவர் போல அவர் பின் வாசல் வழியாகவே தனது கடைக்குப் போய் வந்து கொண்டிருந்தார். பின் வாசலுக்குச் சாவி கிடையாது என்பதால் அவரது மனைவி அதன்பிறகு எப்போதும் வீட்டிலே இருந்தார். தபால்காரனும் விற்பவனும் பின் வாசலுக்கே வந்து போனார்கள்.
கோபாலன் இல்லத்தை முன்வாசல் பூட்டப்பட்ட வீடு என்றே அனைவரும் அழைக்கத் துவங்கினார்கள்.
எப்படியோ வீட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம் என்ற பெருமை உணர்வு கோபாலனைச் சந்தோஷப்படுத்தவே செய்தது.
••
29.5.20