குறுங்கதை 96 சுழலும் கிண்ணம்.

லடாக்கில் உள்ள சாங் பௌத்த மடாலயத்தில் புத்தரின் புனித வார்த்தைகள் வெள்ளி, தங்கம் மற்றும் செப்பு கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த மடாலயத்தைக் காணுவதற்காக நிரஞ்சன் சென்றிருந்தான். லேவிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அங்கே சிரிக்கும் புத்தர் என்று அழைக்கப்படும் மைத்ரேய புத்தர் சிலை இருபது அடி உயரத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.

மடாலயத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து தியானம் செய்யும்படியான பெரிய தியான மண்டபம் இருந்தது. அங்கே தியானம் செய்வதற்காக நிரஞ்சன் சென்றான். ஊசி கீழே விழுந்தால் கூடச் சப்தம் கேட்கும்படியான மஹாமௌனம்.

அங்கிருந்த மேடையில் ஒரு கிண்ணம் சுழன்று கொண்டிருந்தது. செம்பில் உருவாக்கப்பட்ட அந்தக் கிண்ணம் பம்பரம் சுழலுவது போலச் சுழன்று கொண்டேயிருந்தது. யாரும் அதைச் சுற்றிவிடவில்லை. தானே சுழன்று கொண்டிருந்தது. அதிலிருந்து சப்தம் வரவேயிவ்லலை. வியப்பூட்டும் சுழலும் கிண்ணம் முன்னே துறவிகள் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார்கள்.

வியப்பான அந்தக் கிண்ணத்தைப் பார்த்தபடியே கண்களை மூடி நிரஞ்சனும் தியானம் செய்தான். வெளியே வந்த போது இளந்துறவி ஒருவனிடம் அந்த “கிண்ணம் எப்படிச் சுழலுகிறது“ எனக்கேட்டான்.

அதற்கு இளந்துறவி “அது திக்சே என்ற புத்த துறவியால் சுழற்றிவிடப்பட்ட கிண்ணம். முந்நூறு ஆண்டுகளாக இதே இடத்தில் நிற்காமல் சுழன்று கொண்டேயிருக்கிறது. பிறப்பு இறப்பு எனத் தொடரும் நம் வாழ்க்கையின் அடையாளம் போலவே கிண்ணம் சுழலுவதாக நம்பிக்கை. சப்தம் எழுப்பாமல் சுழலுவது ஒரு வாழ்க்கை முறை “ என்றான்.

நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு கிண்ணம் முடிவில்லாமல் சுழலுவதை வியந்தபடியே நிரஞ்சன் கேட்டான்

“ஏன் அதன் முன்னே அமர்ந்து தியானம் செய்கிறீர்கள்“

அதற்கு இளந்துறவி சொன்னான்

“கிண்ணம் சுழலும் போது அதன் வெறுமை சுழலுகிறதா என்ன. அதை உணரவே அதன் முன்பு அமர்ந்து தியானிக்கிறோம். “

அதைக் கேட்டதும் விழிப்புணர்வு கொண்டவன் போல நிரஞ்சன் கண்ணை மூடினான்.

மனதில் கிண்ணம் லயத்தோடு சுழன்று கொண்டிருந்தது

••

0Shares
0