குறுங்கதை 98 சந்தோஷமான முடிவு

ஞாயிறுக்கிழமை காலை தணிகாசலம் தவறாமல் நூலகத்திற்குச் சென்றுவிடுவார். இப்போது அவரது வயது எழுபது . இருபது வயதிலிருந்து அவர் நூலகத்திற்கு சென்று வாசிக்கிறார். கதைகளை மட்டுமே அவர் வாசிப்பார். அதுவும் நாவல்களின் முடிவு சந்தோஷமாக இல்லாவிட்டால் அவராக அடித்துத் திருத்தி சந்தோஷமான முடிவை உருவாக்கி விடுவார்.

புத்தகம் என்பது வாசிப்பவரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. அதில் எந்த எழுத்தாளனும் தலையிடமுடியாது என்று அவர் உறுதியாக நம்பினார்.

மனிதர்களைப் போல ஏன் கதாபாத்திரங்களும் துயரமான முடிவைச் சந்திக்க வேண்டும் என்று அவருக்குப் புரியவேயில்லை.

சந்தோஷமான முடிவை உருவாக்கியவுடன் புத்தகத்தின் இயல்பு மாறிவிடுவதாக அவர் நம்பினார். சில வேளைகளில் நூலகர் இதற்காகக் கோவித்துக் கொண்ட போது. வாழ்க்கையில் கிடைக்காதவற்றைத் தானே புத்தகத்தில் தேடுகிறேன், கதையில் சுபமான முடிவு கிடைக்கும் போது புதியதொரு நம்பிக்கை பிறக்கிறதே என்பார்.

நூலகருக்கு அது ஏற்புடையதாகவே இருந்தது. கதைப்புத்தகங்களில் அவர் திருத்திய சந்தோஷமான முடிவை ஒருவரும் ஆட்சேபணை செய்யவில்லை. மாறாகச் சிலர் அந்த முடிவு ஏற்புடையதாக இருப்பதாக அவரைப் பாராட்டவும் செய்தார்கள்.

நாவல்களிலிருந்து விடுபட்டு தற்செயலாக ஒரு நாள் வரலாற்று நூல் ஒன்றை வாசித்தார். அதன் முடிவு அவருக்கு ஏமாற்றத்தைத் தந்தது. நாவலின் முடிவை மாற்றுவது போலவே வரலாற்றின் முடிவையும் மாற்றி எழுதினார். ஆனால் அதை வாசகர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

வரலாற்றின் முடிவுகளை மாற்ற இவர் யார் என்று கொந்தளித்தார்கள். நடந்து முடிந்தவற்றை எப்படி இவராக மாற்ற முடியும் எனக் கேள்வி கேட்டார்கள். தோல்வி ஒரு போதும் வெற்றியாகிவிட முடியாதே என்று வாதம் செய்தார்கள்.

நாவலைப் போல வரலாறும் ஒரு புத்தகம் தானே. அதன் முடிவை மாற்றினால் ஏன் கோபம் கொள்கிறார்கள் என்று அவருக்குப் புரியவேயில்லை

ஆனாலும் பிடிவாதமாக அவர் வரலாற்று நூல்களைத் தனது விருப்பம் போல மாற்றிக் கொண்டேயிருந்தார். நூலகரால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இனி அவரை நூலகத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று நிறுத்திவிட்டார்.

அதன்பிறகு தான் தணிகாசலத்திற்கு, வரலாற்றின் விதியை நாவல்களால் மட்டுமே மாற்றியமைக்க முடியும் என்பது புரியத் துவங்கியது.

••

0Shares
0