குறுங்கதை 99 முறையீடு

ராயப்பன் அந்த வழக்கைத் தொடர்ந்த போது அவருக்குச் சொந்தமாக ஐந்தரை ஏக்கர் நிலமும் பம்ப்செட் ஒன்றும் இருந்தது. உள்ளூரிலே பேசி முடித்துத் தீர்த்து வைத்திருந்தால் எளிதாக முடிந்து போயிருக்கும். ஆனால் அவர் பக்கம் நியாயம் இருந்த போதும் எவரும் உதவிக்கு வரவில்லை.

ராயப்பனுக்கு சொந்தமாக ஊரின் மேற்காக ஒன்றரை ஏக்கர் கரிசல் நிலமிருந்தது. அதைக் குத்தகைக்குக் கேட்பதற்காக அவரது தூரத்து உறவினர் கந்தசாமி வந்த போது ராயப்பன் கொடுப்பதற்குத் தயங்கினார்.  ஆனால் கந்தசாமிக்கு ஆதரவாகத் துளசி வாத்தியார் வந்து பேசியதால் மூன்று ஆண்டுகளுக்குக் குத்தகை என்று பேசி முன்பணம் பெற்றுக் கொண்டார்.

இந்த மூன்று ஆண்டுகளில் குத்தகைப்பணம் தவிர விளைச்சலில் நாலில் ஒரு பங்கும் தரவேண்டும் என்று பேசி வெற்றிலை மாற்றிக் கொண்டார்கள். முதலிரண்டு ஆண்டுகள்  கந்தசாமி பேசியபடியே விளைச்சலில் கால்வாசி அளந்து கொடுத்தார். குத்தகை பணமும் சரியாக வந்து சேர்ந்தது.

மூன்றாம் ஆண்டு தனக்கு விளைச்சல்  இல்லை என்று சொல்லி குத்தகைப் பணம் மட்டுமே கொடுத்தார். அந்த வருஷத்தோடு குத்தகையை முடித்துக் கொள்ளும்படி ராயப்பன் கறாராகச் சொல்லியபோதும் அவர் விவசாயம் செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. அப்போதும் துளசி வாத்தியார் தான் பேச்சுவார்த்தைக்கு வந்து கஷ்டப்படுகிறவன் இன்னும் ரெண்டு வருஷம் விவசாயம் பாக்கட்டும் என்று பேசி முடித்து வைத்தார்.

அந்த இரண்டு வருஷங்களில் கந்தசாமி நிலத்தின் தீர்வையை ரகசியமாக தன் பேரில் போட்டு வாங்கிக் கொண்டதையோ, போலியாக ஆவணங்கள் தயாரித்துக் கொண்டதையோ அவர் அறியவில்லை.

அந்த இரண்டு ஆண்டுகள் குத்தகை பணமும் தரவில்லை. மகசூலில் கால்வாசியும் கொடுக்கவில்லை. ஆனால் சோளமும் கம்பமும் விளைந்து நிற்பதைப் பார்த்து ராயப்பன் சண்டையிட்ட போது அந்த நிலம் தன்னுடையது என்று சொல்லி ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு அதை தனக்கு விற்றுவிட்டதாக கந்தசாமி புகார் சொன்னார்.

இது என்ன பச்சைப்பொய்யாக இருக்கிறதே எனத் துளசி வாத்தியாரிடம் முறையிட்ட போது தன் கண்முன்னே தான் ஐநூறு ரூபாய் வாங்கியதாக அவரும் பொய் சாட்சியம் சொன்னார்.

பகல் கொள்ளையாக இருக்கிறதே என ராயப்பன் ஊரைக் கூட்டி நியாயம் கேட்கவே கந்தசாமிக்கு ஆதரவாகவே பலரும் சாட்சியம் சொன்னார்கள். ஏன் இத்தனை பேர் தனக்கு எதிராகப் பொய் பேசுகிறார்கள் என்று ராயப்பன் மன வருத்தமடைந்தார். அதன்பிறகு தான் கந்தசாமி மீது  நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுத்தார்.

அந்த வழக்கு பதினேழு ஆண்டுகள் நடைபெற்றது. வழக்கறிஞருக்கான கட்டணம். நீதிமன்ற செலவு, பயணம். ஆவணச்செலவு எனத் தன்வசமிருந்த நிலம், நிலத்தடி வீடு யாவற்றையும் விற்று செலவு செய்து வந்தார்.

ஒவ்வொரு முறை கோர்ட்டிற்கு போகும்போது வழக்கறிஞர் அவர் பக்கம் நியாயம் உள்ளது வென்றுவிடுவார் என்று உறுதியாகச் சொன்னார். அதை நம்பியே ராயப்பன் செலவு செய்து கொண்டிருந்தார்.

இந்த பதினேழு வருஷங்களில் ஊரில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துப் போனது. பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி பிழைப்பு தேடி நகரம் நோக்கிப் போனார்கள். மனைவி இறந்து போனார். ராயப்பன் ஒற்றை ஆளாக வசித்து வந்தார்.

பிள்ளைகள் எவ்வளவு அழைத்தும் ராயப்பன் ஊரைவிட்டுப் போகவேயில்லை. வழக்குத் தொடுத்த கந்தசாமியும் இறந்து போனான். ஆனால் வழக்கு முடியவில்லை. அவரது மகன் வழக்கை நடத்தினான்.  பதினெட்டாவது ஆண்டில் தீர்ப்பு கந்தசாமிக்குச் சாதமாக வந்தது.

ராயப்பன் மனம் உடைந்து போனார். குடியிருக்கும் சிறிய ஓட்டுவீட்டினை தவிர அவருக்கு வேறு சொத்து எதுவுமில்லை. இனி என்ன செய்வது எனப்புரியாமல் வீட்டிலே முடங்கிக் கிடந்தார். அநீதியின் கனத்தை அவரால் தாங்க முடியவில்லை.

நீண்ட நாட்களின் பிறகு அவர் கந்தசாமி மகனிடமே கூலியாக வேலைக்குப் போக ஆரம்பித்தார். தன் சொந்த நிலத்தில் கூலியாக வேலை செய்தார். யாரோடும் ஒரு வார்த்தை பேசமாட்டார்.  எப்போதாவது கை நிறையக் கரிசல் மண்ணை அள்ளிவைத்துக் கொண்டு இந்த உலகத்திலே நியாயமே இல்லையா என்று கேட்பார்.

அப்படி ஆதங்கப்படுவதைத் தவிர வேறு எதையும் அவரால் செய்ய முடியவில்லை.

கரிசல் விவசாயி வேறு என்ன தான் செய்வார்

••

7.6.20

0Shares
0