புதிய சிறுகதை
(டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.)
தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன்

அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள்.
தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. பச்சை நிறத்தில் கலங்கிய தண்ணீர். கிணற்றுள் ஒரு ஆமையிருந்தது. அது எப்போதாவது நீர்மட்டத்திற்கு வந்து தலையை வெளியே நீட்டி வெயிலைத் தொட்டுப் போகும்.
கிணற்றை ஒட்டிய சிறிய அறையினுள் மோட்டார் பம்ப். வெளியே குளிப்பதற்கான சிமெண்ட் தொட்டி. கிணற்றை ஒட்டியது போல வளர்ந்து நிற்கும் இரட்டைவேப்பமரம். இரவில் தாத்தா கயிற்றுகட்டிலைப் போட்டு அந்த மரத்தடியில் தான் உறங்குவார். சில நாட்கள் நானும் அங்கே உறங்கியிருக்கிறேன்.
தாத்தா எப்போதும் எதையோ யோசித்தபடியே இருப்பார். ஏதாவது கேட்டால் உடனே பதில் சொல்லிவிட மாட்டார்.
சில நேரம் சிகரெட் புகையை வெறித்துப் பார்த்தபடியே தனக்குத் தானே ஏதோ சொல்லிக் கொள்வார். பாட்டிக்கும் அவருக்கும் சண்டை வராத நாளே கிடையாது. வீட்டை விடவும் நிலத்தில் இருப்பது தான் அவருக்குப் பிடித்திருந்தது.
போலீஸ்காரர்கள் வந்த போது தாத்தா மடத்தில் சின்னராசுவோடு ஆடுபுலியாட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். அவர்கள் மடத்தைக் கடந்து தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தாத்தாவை அடையாளம் தெரியவில்லை.
தாத்தாவை நினைத்துக் கொண்டாலே அவர் காதில் சொருகியிருக்கும் சிகரெட் தான் நினைவிற்கு வரும். தாதன்குளத்தில் அப்படிக் காதில் சிகரெட் சொருகியவர்கள் எவரும் கிடையாது. தாத்தா இந்தப் பழக்கத்தை எங்கே கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. அது பாசிங்ஷோ சிகரெட்.

தாத்தா ஒல்லியான உடல்வாகு கொண்டிருந்தார். ஆறடி உயரம். கழுத்து மட்டும் சற்றே வளைந்தது போலிருக்கும். உடல் முழுவதும் மயிர் அடர்ந்திருக்கும். கைகளைக் காணும் போது வயதான குரங்கின் கைகள் போலத் தோன்றும். ஒடுங்கிய முகம். பெரிய பற்கள். கல்யாண வீடுகளுக்குப் போகும் நாளை தவிர மற்ற தினங்களில் மேல்சட்டை அணிந்தது கிடையாது. அழுக்கடைந்த வேஷ்டி. வெளிறிப்போன துண்டு. முழுவதும் நரைத்துப்போன தலை. மூக்கிற்குள்ளும் கூட மயிர் நரைத்துப் போயிருந்தது.
வீட்டில் இல்லாத நேரங்களில் தாத்தா மடத்தில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருப்பார். அல்லது பொட்டல்பட்டிக்குப் போய்விடுவார். அங்கே யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் வீட்டில் சண்டை வரும்போது பொட்டில்பட்டிக்காரி என்று பாட்டி திட்டுவாள். யார் அந்தப் பெண் என்று எனக்குத் தெரியாது. தாத்தாவிடம் கேட்டதும் இல்லை
••
தாத்தாவை கூட்டிக் கொண்டு வரும்படி என்னைப் பாட்டி அனுப்பி வைத்தாள். நான் மடத்தை நோக்கி நடந்து போன போது தெருவில் இரண்டு சிறுவர்கள் பம்பரம் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒருவன் நானும் விளையாட வருகிறேனா என்று கேட்டான்.
“எங்க வீட்டுக்குப் போலீஸ் வந்துருக்கு“ என்றேன்
“போலீஸ் துப்பாக்கி வச்சிருந்தாங்களா“ என ஒரு பையன் கேட்டான்
நான் அதைக் கவனிக்கவில்லை. இரண்டு போலீஸ்கார்களில் ஒருவர் பெரிய தொப்பையுடன் குள்ளமாக இருந்தார். இன்னொருவர் இளைஞன். நாலு ரோட்டில் இறங்கி நடந்து வந்திருக்கக் கூடும். அதுவரை தான் டவுன்பஸ் வரும்.
இருவரும் வியர்த்து வழியும் முகத்துடன் இருந்தார்கள். பாட்டி அவர்களுக்கு லாடஞ்சொம்பில் தண்ணீர் கொடுத்தபோது ஒருவனே முழுசொம்பு தண்ணீரையும் குடித்துவிட்டான். இன்னொருவர் தொப்பியால் விசிறிக் கொண்டே ஒரு துண்டுவெல்லம் இருந்தா குடுங்க என்றார்
பாட்டி மண்டைவெல்லத்தில் சிறு துண்டும் இன்னொரு சொம்பு தண்ணீரும் கொடுத்து அனுப்பினாள். நான் தான் இந்தப் போலீஸ்காரரிடம் கொடுத்தேன். அவர் வெல்லத்துண்டை கறுக்முறுக் என்று கடித்து மென்றார். பிறகு சொம்பினை அண்ணாந்து குடித்தார். தண்ணீர் கழுத்து வழியாக வழிந்தோடியது. அதை அவர் துடைத்துக் கொள்ளவில்லை.
எங்கள் ஊரின் பகல்பொழுது வெயில் அனலாகக் கொதிக்கக் கூடியது. மரங்களில் அசைவிருக்காது. கல் உரலில் வெயில் நிரம்பியிருக்கும் கூரைவீடுகள் பெருமூச்சிடுவது போலச் சப்தமிடும். வெயில் தாங்க முடியாமல் ஒலைக்கொட்டான்கள் தானே தீப்பறிக் கொள்வதும் உண்டு.
ஊரைச் சுற்றிலும் விரிந்திருந்தது கரிசல் நிலம். ஆங்காங்கே உடை மரங்கள். ஊரின் கிழக்கே ஒரு ஆலமரமிருந்தது. அதன் நிழலில் கிறங்கி கிடக்கும் ஆடுமேய்ப்பவர்கள். ஆலமரத்தையொட்டி கண்மாய். அதில் மழைக்காலத்தில் மட்டுமே தண்ணீர் நிரம்பியிருக்கும். கோடையில் பாளம் பாளமாக வெடித்துப் போய்விடும். எப்போதும் கண்மாயிற்குள் சுற்றித்திரியும் நாய் ஒன்றிருந்தது. அது கண்மாயில் எதையோ தேடுவது போல அலைந்து கொண்டிருக்கும்.
••

நாலு ரோட்டிலிருந்து நடந்து வந்த எரிச்சல் போலீஸ்காரர்கள் முகத்தில் படர்ந்திருந்தது
“தங்கச்சாமி இல்லையா“ என்று பருத்த தொப்பை கொண்ட போலீஸ்காரர் கேட்டார்
தாத்தாவை அப்படிப் பெயர் சொல்லி யாரும் கூப்பிடுவது கிடையாது. பாட்டி அந்தப் போலீஸ்காரரை முறைத்தபடியே சொன்னாள்
“அவுக வீட்ல இல்லே“
“அவரை ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டு போக வந்துருக்கோம்“ என்றான் இளைஞன்
பாட்டி அது ஒன்றும் பெரியவிஷயமில்லை என்பது போல அவர்களை முறைத்தபடியே சொன்னாள்
“மடத்துல இருக்காரானு பார்த்துட்டு வரச்சொல்றேன்“
அதன்பிறகு தான் நான் மடத்தை நோக்கி கிளம்பினேன்.
வழியில் சிவப்பு வண்ணம் அடித்த பம்பரம் வைத்திருந்தவன் கிழே கிடந்த பம்பரத்தின் மீது ஒங்கி ஆக்கர் வைத்துக் கொண்டிருந்தான்.
நான் மடத்தை நோக்கி நடந்த போது ஒரு பூனை சாவகாசமாக இடிந்த மதில் சுவரின் மீது நடந்து போய்க் கொண்டிருந்தது. வேண்டுமென்றே அதை நோக்கி கையை வீசிப் பயமுறுத்தினேன். பூனை கண்டுகொள்ளவேயில்லை. ஊர் பூனைகளுக்குப் பயம் போய்விட்டிருக்கிறது
மடத்தில் தாத்தா ஆடுபுலி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார். அவர் எப்போதும் புலி தான். அவரை எந்த ஆட்டாலும் அடைக்க முடிந்ததில்லை. நான் தாத்தா ஆடுவதைப் பார்த்தபடியே நின்றிருந்தேன்.
வழிமறித்த ஒரு ஆட்டினை வெட்டிய கையோடு என்னைப் பார்த்து “காசு வேணுமா“ என்று கேட்டார்
“நம்ம வீட்டுக்கு ரெண்டு போலீஸ்காரங்க வந்துருக்காங்க. பாட்டி கூட்டியார சொல்லுச்சி. “ என்றேன்
“அவிங்களை இங்க வரச்சொல்லு“ என்றபடியே தாத்தா விளையாட்டினை தொடர்ந்தார்
அவரை அழைத்துக் கொண்டு போகாமல் வீடு திரும்பினால் பாட்டி கோவித்துக் கொள்வாள் என்பதால் தாத்தாவிடம் மறுபடியும் சொன்னேன்
“ உங்களைக் கையோட கூட்டிட்டு வரச்சொன்னாங்க. “
“எவன் சொன்னது“
“போலீஸ்காரங்க“
அதைக் கேட்ட சின்னராசு ஆட்டத்தை நிறுத்திவிட்டு சொன்னார்
“அப்புச்சி…வீட்டுக்கு போயி என்னானு பாத்துட்டு வந்திருங்க.. நம்ம ஆட்டத்தைப் பொறவு வச்சிகிடுவோம்“
தாத்தா தன்னுடைய காதில் சொருகியிருந்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்துக் கல்லில் தீக்குச்சியை உரசி பற்ற வைத்து, ஊத ஆரம்பித்தார். என்ன யோசனை என்று தெரியவில்லை. புகையை ஊதியபடியே மடத்தின் தூண்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு எழுந்து சிகரெட்டை புகைத்தபடியே வீட்டை நோக்கி நடந்தார்
•••
போலீஸ்காரர்களில் இளையவன் வாசலில் கட்டியிருந்த ஆட்டுக்குட்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். வீட்டிற்குள் ஒரு சேவல் சுதந்திரமாக நடந்து திரிந்தது. பாட்டி அடுப்பில் சுரைக்காயை வேகவைத்துக் கொண்டிருந்தாள்.
தாத்தாவை கண்டதும் இரண்டு போலீஸ்கார்ரகளும் விறைப்பானவர்கள் போல உடலை இறுக்கமாக்கி கொண்டு நின்றார்கள். பருத்த தொப்பை கொண்டவர் ஒரு காகிதத்தைத் தாத்தாவிடம் நீட்டினார். தாத்தா அதை வாங்கிக் கொள்ளவில்லை
“உங்க பேரு“ என்று அந்தப் போலீஸ்காரரை நோக்கி கேட்டார் தாத்தா
“சிவசாமி. இவன் ரவி“ என்றார் அந்தப் போலீஸ்காரர்
“என்னா வேணும் “ என்று சற்றே கோபமாகக் கேட்டார் தாத்தா.
“உங்களை அரெஸ்ட் பண்ணி கூட்டிகிட்டு வரச்சொல்லி இன்ஸ்பெக்டர் உத்தரவு.. கிளம்புங்க“ என்றான் ரவி
அவனை முறைத்தபடியே தாத்தா வீட்டிற்குள் போனார். பகலிலும் வீட்டிற்குள் வெளிச்சமில்லை. மங்கலான இருட்டுப் படர்ந்திருந்தது. நடந்து போன வேகத்தில் தாத்தா மிளகாய் வற்றல் வைத்திருந்த சொளகினை மிதித்துத் தள்ளிவிட்டுப் போனார். பாட்டி அவரைக் கோபத்தில் திட்டுவது கேட்டது.
தாத்தா ஒரு முக்காலியை எடுத்துக் கொண்டு வந்து வாசலை ஒட்டி போட்டு உட்கார்ந்தபடியே என்னிடம் “முக்குகடையில் ரெண்டு பாசிங்ஷோ சிகரெட் வாங்கிட்டு வா“ என்றார்
வரும்போது அந்தக் கடையைத் தாண்டி தானே வந்தோம். அப்போதே வாங்கியிருக்கலாமே என்று தோன்றியது. ஆனால் தாத்தாவின் முறைப்பை கண்டதும் நான் காசை வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன்
“இன்னைக்கு வரமுடியாது. ரெண்டு நாள் கழிச்சு வாங்க“ என்று தாத்தா போலீஸ்காரர்களைப் பார்த்து மிரட்டுவது போலச் சொன்னார்
“ கையோட கூட்டிட்டு வரச் சொல்லி ஆர்டர்“ என்றான் ரவி
“அதுக்கு வெறும்வயிற்றோட வரச்சொல்றயா“ என்றபடியே அவனை முறைத்தார் தாத்தா
“அருப்புக்கோட்டையில போயி சாப்பிட்டுகிடலாம்“ என்றார் சிவசாமி
“கிளப் கடையில் போடுற சோற்றை வாயில வைக்க முடியாது. வீட்ல சோறு ஆக்கிட்டு இருக்கா.. சாப்பிட்டு போவோம்“ என்றபடியே அவர் வீட்டிற்குள் சுற்றும் சேவலை நோக்கி தண்ணீர் செம்பை வீசி எறிந்தார். சேவலின் மீது அடிபடவில்லை. ஆனால் செம்பு மரப்பெஞ்சின் அடியில் போய் உருண்டது.
“வேலம்மா …அந்த சொம்ப எடு “என்று உத்தரவிட்டார்
பாட்டி ஆத்திரத்தில் திட்டியபடியே அவர் வீசி எறிந்த சொம்பை எடுத்து அடுப்படிக்குள் வீசினாள்.
பாட்டியின் கோபத்தை ரசித்தவர் சிவசாமி போல அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்
நான் வாங்கி வந்த சிகரெட்டினை தாத்தாவிடம் நீட்டியபோது அவர் ஒன்றை காதில் சொருகிக் கொண்டபடியே மற்ற சிகரெட்டினை பற்றவைத்துக் கொண்டு போலீஸ்கார்ர்களிடம் கேட்டார்
“நீங்களும் வீட்ல சாப்பிடலாம்லே“
“சொன்னா புரியாதா.. நாம உடனே கிளம்பணும்“ என்று ரவி கோபமாகச் சொன்னான்
அவனை நோக்கி புகையை ஊதியபடியே தாத்தா சொன்னார்
“நான் வரமுடியாதுன்னா என்ன செய்வீங்க“
“அடிச்சி இழுத்துட்டு போவோம்“ என்றான் ரவி
“அம்புட்டுத் தைரியம் இருக்கா“ என்றபடியே புகையை ஊதினார் தாத்தா
எனக்குத் தாத்தாவை பார்க்க வியப்பாக இருந்த்து. அவர் போலீஸ்காரர்களைப் பார்த்து பயப்படவேயில்லை. அவர்களை மிரட்டுகிறார். உறுதியான குரலில் பேசுகிறார்.
கான்ஸ்டபிள் சிவசாமி ரகசியமான குரலில் எதையோ ரவியிடம் சொல்வது கேட்டது. ரவி தலையாட்டினான்.
தாத்தா அதைக் கவனித்தவர் போலச் சொன்னார்
“இப்படி தான் அந்தச் சர்வேயர் கிறுக்கன் ஏறுக்குமாறா பேசிகிட்டு இருந்தான். அதான் அவன் மண்டையில கடப்பாரையாலே போட்டேன். தலைமுறையா ரோட்டடி நிலம் எங்களுது. பட்டா இருக்கு.. வரி கட்டியிருக்கோம். அதைப் போயி கவர்மெண்ட் புறம்போக்குனு அந்தக் கிறுக்கன் சொல்றான். ஒரு நியாயம் வேணாம். நானும் கிளிபிள்ளைக்குச் சொல்ற மாதிரி படிச்சி படிச்சி சொன்னேன். அவன் கேட்கலை. நிலத்தை அளந்து கல்லு நடப்போறேனு போனான். அதான் கடப்பாரை கம்பியாலே மண்டைல போட்டேன். “.
“கவர்மெண்ட் ஆபீசர் மேல கையை வச்சா என்ன நடக்கும்னு உமக்கு தெரியலை. எப்படியும் நாலு வருஷம் ஜெயில் தான்“ என்றார் சிவசாமி
“கவர்மெண்ட்னுனா அதுக்கு ஒரு நியாயம் வேணாமா.. எவனோ. எச்சிக்கலைப்பய கொடுத்த காசை வாங்கிட்டு என் நிலத்தைப் புடுங்க வந்தா பாத்துட்டு சும்மா இருக்க முடியுமா“
“உம்ம நிலம்னா.. கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே“
“வக்கீலுக்கு யார் தண்டச் செலவு செய்றது. அதான் நானே அவன் மண்டையில நாலு போட்டேன் “
“கதையடிச்சது போதும் கிளம்புங்க“ என்றான் ரவி
தாத்தா சிகரெட்டினை அணைத்து எறிந்தபடியே சொன்னார்
“ இப்போ வரமுடியாது உன்னாலே ஆனதை பாரு“
இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சிவசாமி ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் தாத்தா எழுந்து வெளியே நடக்க ஆரம்பித்தார். சிவசாமியும் ரவியும் அவர் பின்னாடியே ஏதோ சொல்லியபடி வேகமாக நடந்தார்கள். அதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது..
வெயிலோடி கிடந்த வீதியில் தாத்தா வேகமாக நடந்து கொண்டிருந்தார். தெருநாய் ஒன்று புதிதாகத் தெரிந்த போலீஸ்காரர்களைக் கண்டு குலைத்தது. தாத்தா மடத்திற்குப் போன போது அங்கே யாருமில்லை. தாத்தா மடத்தினுள் ஏறி தூணை ஒட்டி உட்கார்ந்து கொண்டார்
சிவசாமி மட்டும் மடத்துப் படியில் நின்றபடியே சொன்னார்
“கோவிச்சிகிட்டா எப்படி.. உச்சிக்குக்குள்ளே போயிரலாம்னு நினைச்சேன். நாலு ரோட்டில ஒரு மணி பஸ்ஸை விட்டா திரும்ப மூணு மணிக்கு தானே. பஸ் வரும்“
“ அப்போ மூணு மணிக்கு போவோம்“
சரியென அவர்கள் தலையாட்டியபடியே மடத்து நிழலில் உட்கார்ந்து கொண்டார்கள்
“ஒரு ஆட்டம் போடுவமா“ என்று கேட்டார் சிவசாமியிடம் கேட்டார் தாத்தா
சிவசாமியும் தலையாட்டினார்
இருவரும் ஆடுபுலி ஆட்டம் ஆட ஆரம்பித்தார்கள். தாத்தா உற்சாகமாகத் தனது புலிகளை எடுத்துக் கொண்டார். ரவி ஒரு தூணில் சாய்ந்தபடியே அவர்கள் விளையாட்டினை பார்த்துக் கொண்டிருந்தான். ஆடுகளை வைத்து புலியை அடைக்கப் போராடிக் கொண்டிருந்தார் சிவசாமி.
நான் அவர்களை வியப்போடு பார்த்தபடியே இருந்தேன் தாத்தா முகம் உற்சாகத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.
“கலர் குடிக்குறீங்க“ என்று விளையாடியபடியே தாத்தா கேட்டார்
சிவசாமி தலையாட்டினார்
தாத்தா என்னை நோக்கி திரும்பி “மூணு பவண்டோ வாங்கிட்டு வா“.
“காசு“ என்று தாத்தாவை நோக்கி கேட்டேன்
“நான் சொன்னேன்னு பாண்டிகிட்ட சொல்லு. குடுப்பான்“
நான் மூன்று பவண்டோ பாட்டில்களை வாங்கிக் கொண்டு வந்தபோது தாத்தா ஜெயித்திருந்தார். தாத்தா தன் கைகளால் கலர்பாட்டிலை திறந்து அவர்களைக் குடிக்க வைத்தார். பாதிப் பாட்டிலை தான் குடித்துவிட்டு மீதியை என்னிடம் நீட்டினார் தாத்தா. அதைச் சொட்டுச் சொட்டாக ருசித்துக் குடித்தேன்
••

அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மதியம் தாத்தாவோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். வேணியக்கா வீட்டில் இருந்து இரண்டு சில்வர் தட்டுகளை இரவல் வாங்கி வந்தேன். தாத்தா பழைய அலுமினியத் தட்டில் சாப்பிட்டார். பாட்டி சோற்றை அள்ளி அள்ளி வைத்தாள்.
“ தேங்காதுவையல் அரைச்சி வச்சிருக்கலாம்லே“ என்றார் தாத்தா. அது அவருக்குப் பிடித்தமானது. சோற்றில் பிசைந்து சாப்பிடுவார்.
“பொட்டல்பட்டிகாரிகிட்ட கேளு… ஆக்கிப் போடுவா. “ என்றாள் பாட்டி. அதன் பிறகு தாத்தா பேசவில்லை. சாப்பிட்டு முடித்துத் தண்ணீர் சொம்பை கையில் எடுக்கும் போது சொன்னார்
“சுரைக்கா கூட்டு ருசியா இருந்துச்சி “
இப்படிச் சாப்பாட்டினை அவர் ஒரு போதும் பாராட்டி சொன்னதேயில்லை. பாட்டி சேலையால் முகத்தைத் துடைத்தபடியே சொன்னாள்
“இன்னைக்குத் தான் நாக்குல ருசி தெரியுதாக்கும்“
தாத்தா சிரித்துக் கொண்டபடியே எழுந்து கொண்டார்.
பின்பு கல்யாண வீட்டிற்குக் கிளம்புவது போல டிரங் பெட்டியில் மடித்து வைத்திருந்த மேல்சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டார். துவைத்து வைத்திருந்த பளுப்பு நிற வேஷ்டி ஒன்றை கட்டிக் கொண்டார். சாமி படத்தின் முன்பாக நின்று திருநிறு பூசிக் கொண்டார். பிறகு பாட்டியிடம் அமைதியான குரலில் சொன்னார்
“வேலம்மா.. பெட்டிக்கடைக்கார பாண்டிக்கு கலர் வாங்குனதுக்கு ரூவா குடுக்கணும். அதை மறக்காம குடுத்துரு.. சோமு மவன் நமக்கு இருபத்தைந்து ரூவா தரணும். அதை வாங்கிக் கோ.. இந்த ஆடு ரெண்டையும் வித்துரு.. தேவையில்லாமல் வக்கீலுக்குக் காசை கொடுத்து கோர்ட்க்கு அலைய வேண்டாம். எத்தனை வருஷம் என்னை ஜெயில்ல போடுறாங்களோ போடட்டும். இந்தப் பயல நல்லபடியா பாத்துக்கோ.. “
ஏதோ ஊருக்கு கிளம்புகிறவர் போலக் கடகடவெனச் சொல்லிக் கொண்டிருந்தார்
சிவசாமி அவரது கையில் விலங்கை மாட்டினான். சந்தைக்கு அழைத்துச் செல்லப்படும் ஆடு போவது போல. தாத்தா மௌனமாக அவர்களுடன் நடந்து போக ஆரம்பித்தார்
தெருவில் ஆள் நடமாட்டமில்லை. கையில் விலங்கிட்டு தாத்தா போவது என் மனதை உறுத்தியது.
முற்றியபாகு போல வெயில் வழிந்த வீதியில் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். நான் தாத்தாவின் பின்னாடியே நடந்து போனேன்
மடத்தைக் கடந்து போகையில் ஏனோ அதைத் திரும்பி பார்த்துக் கொண்டார்
ஊரை விலக்கிய மண்சாலையில் அவர்கள் நடந்து போன போது தாத்தா திரும்பி பார்த்து சொன்னார்
“நீ எதுக்குடா பின்னாடியே தொயங்கட்டிகிட்டு வர்றே. வீட்டுக்கு போ“
“நாலு ரோடு வரைக்கும் வாரேன்“
“அதெல்லாம் ஒரு மசிரும் வேணாம்“ என முறைத்தபடியே சொன்னார்
நான் தயங்கியபடியே நின்று கொண்டேன்.
தாத்தாவும் அவர்களும் வெயிலோடு நடந்து கொண்டிருந்தார்கள்.
இனி எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தாத்தா திரும்பி வருவார். அவரை எப்போது காண முடியும் என்ற நினைப்பு மனதை வேதனைப்படுத்தியது.
அவர்கள் பின்னாடியே ஒடினேன். இரட்டை பனைகளைத் தாண்டி அவர்கள் போகும்போது மூன்று நிழல்கள் நீண்டு சரிந்தன. நான் தொலைவில் நின்றபடியே தாத்தா என்று பலமாகச் சப்தமிட்டேன்
அது அவருக்குக் கேட்டிருக்கக் கூடும். ஆனால் அவர் என்னைத் திரும்பி பார்க்கவேயில்லை.
யாரோ தெரிந்தவருக்குப் பெண் பார்க்க போவது போலத் தாத்தா இயல்பாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவரது நிழல் கம்பீரமாக நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது
தாத்தாவின் இந்தக் கம்பீரத்தை அங்கீகரிப்பது போலக் குயில் ஒன்று எங்கிருந்தோ இனிமையாகச் சப்தமிட்டது. எனக்கோ அந்தச்சப்தம் பிரிவை மேலும் அதிகப்படுத்துவதாகத் தோன்றியது
•••