குற்றமுகங்கள்- 1 லான்சர் கீச்சான்.

(காலனிய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற குற்றங்கள், குற்றவாளிகள், காவலர்களின் உலகம் பற்றிய விசித்திரப் புனைவுகளை எழுத வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். குற்றமுகங்களைப் பற்றிய புனைகதைகளாக சிலவற்றை எழுதியிருக்கிறேன். இதில் புனைவும் உண்மையும் கலந்திருக்கின்றன. )

பிரிட்டிஷ் இம்பீரியல் போலீஸின் ஆவணக்குறிப்பு 1863 வி.12ல் இரண்டு முறையும் குறிப்பேடு எம்.16ல் நான்கு முறையும் குறிப்பிடப்பட்டுள்ள லான்சர் கீச்சான் என்ற மதராஸில் வாழ்ந்த பிக்பாக்கெட் உண்மையில் ஒரு ஆண் இல்லை. அவன் பகலில் பெண்ணாகவும் இரவில் ஆணாகவும் இருந்த திருடன் என்று மெட்ராஸ்காவல் துறையின் துணை ஆணையராகப் பணியாற்றிய தஞ்சை ராமச்சந்திர ராவ் குறிப்பிடுகிறார்.

தனது சர்வீஸில் அவனைப் பிடிப்பதற்காக ஏழு ஆண்டுகளைச் செலவழித்ததாகவும் ஆனால் கடைசி வரை அவனைப் பிடிக்க முடியவேயில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

இதில் அவர் வெட்கத்துடன் ஒத்துக் கொள்ளும் விஷயம் அவரிடமே இரண்டு முறை லான்சர் கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான் என்பதே. இரண்டு முறையும் அவரது பர்ஸிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு காலி பர்ஸினுள் டயமண்ட் குயின் சீட்டு ஒன்றை வைத்து ராமசந்திர ராவ் வீட்டு தோட்டத்திலே போட்டு வந்திருக்கிறான் என்பது அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.

கீச்சான் பெரும்பாலும் வெள்ளைக்கார சீமாட்டி போலவே வேஷம் அணிந்து கொண்டிருந்தான். அவனை நிஜமான பெண் என நினைத்து நீதிபதி வொய்லியின் மனைவி கேதரின் நட்பாகப் பழகியிருக்கிறாள். அவளுடன் ஒன்றாகக் கீச்சான் நாடகம் பார்க்கச் சென்றிருக்கிறான் என்றும் சொல்கிறார்கள். வொய்லியின் மனைவியை ராமச்சந்திர ராவ் விசாரணை செய்தபோது அது வீண்சந்தேகம் என்றும் தனது தோழி இசபெல் ஒரு போதும் லான்சர் கீச்சானாக இருக்க முடியாது என்று உறுதியாகச் சொன்னாள். அத்துடன் இசபெல் கப்பலில் இங்கிலாந்து புறப்பட்ட போது தானே வழியனுப்பி வைத்ததாகவும் சொன்னாள்.

லான்சர் கீச்சானை பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானே இங்கிலாந்து புறப்பட்டுப் போக முயற்சி செய்தார். ஆனால் காவல் துறைஆணையராக இருந்த சார்லஸ் டெகார்ட் ஒரு பிக்பாக்கெட்டினைப் பிடிக்க லண்டன் போக வேண்டியதில்லை என்று அனுமதி தர மறுத்துவிட்டார்.

கீச்சான் பெண் வேஷமிடுகிறான் என்பது ராமச்சந்திர ராவ் உண்டாக்கிய கதை. உண்மையில் அவருக்குக் கீச்சான் யார் என்பதே தெரியாது. அவனை நேரில் கண்டவரில்லை. மதராஸின் ஆயிரமாயிரம் பொதுமக்களில் அவனும் ஒருவன். அவன் வெள்ளைக்காரர்களிடம் மட்டும் திருடினான் என்பதும் அவன் திருடியவர்களில் இருவர் நீதிபதிகள் என்பதும் ஆறு பேர் கிழக்கிந்திய கம்பெனியின் உயரதிகாரிகள் என்பதும் முக்கியமானது.

இந்தியர்கள் எவரும் கலந்து கொள்ள முடியாத விருந்தில் இந்தத் திருட்டு நடந்திருக்கிறது என்பதே அவன் பெண் வேஷமிட்டான் என்ற கதை உருவானதற்கான காரணமாக இருக்கக் கூடும்

பிடிபடாத திருடன் மெல்ல கதையாக மாறுவது காலத்தின் வழக்கம். லான்சர் கீச்சான் பற்றிய கதைகளும் அப்படித்தான் உருவானது. உண்மையில் இந்தக் கதைகளை உருவாக்கியதில் பிரிட்டிஷ்கார்களுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. அவர்கள் ஒன்று கூடும் போதெல்லாம் லான்சர் கீச்சானைப் பற்றிப் பேசினார்கள். பயந்தார்கள்.

விக்டோரியா கிளப்பில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. அங்கும் இரண்டு முறை கீச்சான் பிக்பாக்கெட் அடித்திருக்கிறான். அப்படியானால் அவன் பெண் வேஷமிட்டு வரவில்லை என்று தானே அர்த்தம் என்றார் ஹெபர்ட். ஒருவேளை அங்கு மட்டும் அவன் கப்பற்படை அதிகாரியின் தோற்றத்தில் வந்திருக்கக் கூடும் என்றார்கள். காரணம் திருட்டு நடந்த நாளில் நிறையக் கப்பற்படை அதிகாரிகள் வந்திருந்தார்கள்.

கீச்சானுக்கு எப்படி இது போன்ற விருந்துகள். நிகழ்ச்சிகள் நடப்பது தெரிகிறது. யார் அவன் பின்னால் இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் காவல்துறை ஆணையர் விசாரிக்க ஆள் அனுப்பினார். ஆனால் அவர்களால் ஒரு தகவலையும் கண்டறியமுடியவில்லை

லான்சர் கீச்சானைப் பிடிப்பதற்காக ராமச்சந்திர ராவ் தானும் பெண்வேஷமிட்டுச் சுற்றியலைந்தார் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அதைப்பற்றிக் காவல்துறையில் எந்த ஆவணப்பதிவுமில்லை.

லான்சர் கீச்சான் எந்த ஊரில் பிறந்தான் என்றோ, அவனது பெற்றோர் யார் என்றோ தெரியவில்லை. ஆனால் அவன் எஸ்.எஸ். பாசில்டன் என்ற ஆங்கிலேயக் கப்பலில் மதுக்கோப்பைகள் மற்றும் சமையற்பாத்திரங்களைக் கழுவும் வேலையில் இருந்தான் என்றும். அந்தக் கப்பலில் இருந்த யாரோ ஒருவர் தான் அவனுக்குத் திருட்டுத் தொழிலை கற்றுத் தந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

நிலத்தில் திருட்டுக் கற்றுக் கொள்பவர்களை விடவும் நீரில் திருடக் கற்றுக் கொள்பவர்கள் திறமைசாலிகள். அவர்களை எளிதில் பிடிக்க முடியாது என்பார்கள்.. கப்பலில் வரும் வணிகர்கள். பிரபுகள், ராணுவ அதிகாரிகளின் பர்ஸை திருடிவிட்டு கப்பலிலே ஒளிந்து கொள்வது எளிதானதில்லை. ஆனால் கீச்சான் ஒருமுறையும் பிடிபடவில்லை. அவன் எப்படித் திருடுகிறான் என்பதோ, திருடிய பணத்தை என்ன செய்தான் என்றே யாருக்கும் தெரியவில்லை

குற்றவாளிகள் தங்களுக்கென ஒரு ரகசிய மொழியை உருவாக்கிக் கொள்கிறார்கள். பயன்படுத்துகிறார்கள் அதைக் கண்டறிந்துவிட்டால் கீச்சானைப் பிடித்துவிடலாம் என ராமசந்திர ராவ் நம்பினார். இதற்காகப் பலவகையிலும் முயற்சி செய்தார். ரகசிய எழுத்துக்களை ஆராயத் துவங்கிய ராமசந்திர ராவிற்கு அது முடிவில்லாத புனைவுலகம் என்று தெரிந்திருக்கவில்லை. அது போலவே ரகசிய எழுத்துகளைத் தேடிய தான் எதற்காகத் தீவிரமான ஆன்மீக நாட்டம் கொள்ளத் துவங்கினோம் என்றும் புரியவில்லை. ராமசந்திர ராவ் திடீரென எண்களைக் கடவுளாகக் கருதத் துவங்கினார். உலகம் ஒரு ரகசிய கணக்கின்படி இயங்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தார். கடவுள் என்பது யாரும் அறியாத ஒரு விநோத எண் என்று அவர் நினைத்ததை வெளியே சொல்ல முடியவில்லை..

கீச்சானைப் பற்றிய கதைகளை மக்கள் மிகவும் ரசித்தார்கள். உண்மையில் எவர் எங்கே பிக்பாக்கெட் அடித்தாலும் அது கீச்சானின் வேலையாகவே கருதப்பட்டது. இதனால் அவன் திருடர்களால் நேசிக்கப்பட்டான். அவனைக் குற்றத்தின் கடவுளாக வணங்கினார்கள். கீச்சானின் பெயரை சிலர் கைகளில் பச்சை குத்திக் கொண்டார்கள். தப்பிச்செல்லும் போது அவன் சிகரெட் புகையாக மறைந்துவிடக் கூடியவன் என்று மக்கள் நம்பினார்கள்.

கீச்சானின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் மூலம் அவனது கதையை முடித்துவிட முடியும் எனக் காவல்துறை நம்பியது. இதனால் அடையாளம் தெரியாத உடல் ஒன்றை கடலில் மிதக்கவிட்டு அது கீச்சானின் உடல் என்று அறிவித்தார்கள். கீச்சானை யார் கொன்றார்கள் என்று விசாரணை செய்வது போலப் போலீஸ் நாடகம் நிகழ்த்தினார்கள். ஆனாலும் லான்சர் கீச்சான் யார் என்று கடைசிவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.

அதன்பிறகான ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஏதாவது ஒரு பொருள் தொலைந்து போனால் அதனைக் கீச்சான் என்று குறிப்பிடும் பழக்கம் உருவானது. கீச்சானின் பெயரை ஆங்கில அகராதியில் கூடச் சேர்ந்துவிட்டார்கள் என்கிறார்கள். கப்பலில் நடக்கும் விருந்தில் ஒரு இருக்கை காலியாக விடப்பட்டது. அது கீச்சானுக்கானது. அங்கே ஒரு குவளை மது வைக்கபடுவதும் வழக்கமானது.

நோரா அலெக்சாண்டர் என்ற ஆங்கிலேயப் பெண்மணி தனது இந்தியப் பயணம் பற்றிய நூலில் தான் கீச்சானின் காதலியாக இருந்தேன் என்று ஒரு அத்தியாயம் எழுதியிருக்கிறார். அதில் கீச்சான் ஒரு காஸனோவா போல விவரிக்கபடுகிறார். அவர் முத்தமிடுவதால் பெண்ணின் உதட்டு நிறம் மாறிவிடும் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஜே. எவிங் ரிச்சி எழுதிய தி நைட் சைட் ஆஃப் லண்டன் நூலில் கீச்சானைப் பற்றிய ஒரு குறிப்பும் காணப்படுகிறது. இதன் பிறகான காலத்தில் இங்கிலாந்தில் கீச்சான் ரகசியக் காதலன் கதாபாத்திரமாக மாறினான்.

காவல்துறை அதிகாரியான ராமசந்திர ராவ் ஓய்வு பெற்று ஞானதேசிகர் என்ற பெயரில் சாதுவாக வாழத் துவங்கிய போது சில நேரங்களில் அவரது மனதில் கீச்சான் என்பது குற்றத்தின் அழிவற்ற குமிழ் என்று தோன்றுவதுண்டு.

எப்படியோ, உலகம் கண்டிராத கீச்சான் ஒரு சொல்லாக நிலைபெற்றுவிட்டான். திருடனின் வாழ்க்கை என்பதே சொற்களாக மிஞ்சுவது தானே.

0Shares
0