1828 இல் லண்டன் காவல்துறை போலீஸ் கெஜட் என்றொரு பத்திரிகையைத் துவக்கியது அதில் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் தேடப்படும் குற்றவாளிகளின் முழு விவரங்களைச் சித்திரங்களுடன் வெளியிட்டது. அத்துடன் விசித்திரமான குற்றங்கள் மற்றும் அது தொடர்புடைய நம்பிக்கைள். சடங்குகள் பற்றிய செய்திகளையும் வெளியிட்டார்கள். அக்டோபர் 1834ல் வெளியான இதழில் மதராஸ் தொடர்புடைய ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது

அது லாப்பனைப் பற்றியது.
திருடர்கள் அதிர்ஷ்டத்தை உறுதியாக நம்பினார்கள். எந்தப் பொருளை எந்த நாளில் எந்த நேரத்தில் திருட வேண்டும் எத்தனை பேர் சேர்ந்து திருட்டிற்குப் போக வேண்டும். தப்பிப் போவதாக இருந்தால் எந்தத் திசையில் போக வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வதில் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதற்காகவே அவர்கள் லாப்பனை நாடினார்கள்.
லாப்பனுக்கு எழுபது வயதிருக்கும். கோரையான தாடி. உடைந்த முன்பற்கள். மஞ்சள் படிந்த கண்கள். அவனது கைகள் சதா நடுங்கிக் கொண்டேயிருந்தன.
லாப்பன் திருடர்களுக்கான நாள்காட்டி ஒன்றினை உருவாக்கியிருந்தான். அது கிரக சஞ்சாரங்கள் மற்றும் திருடர்களின் வாய்மொழியிலிருந்து உருவாக்கபட்டது என்றார்கள்.
லாப்பன் திருடனில்லை. அவன் மதராஸ் காய்கறி சந்தையில் குப்பைகளைச் சுத்தம் செய்பவனாகத் தனது பனிரெண்டு வயதில் வேலைக்குச் சேர்ந்தான். சந்தை அவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்தது. குறிப்பாக ஜனங்களை ஏமாற்றும் சிறுதந்திரங்களை, இனிப்பு பேச்சுகளை மற்றும் விநோத நம்பிக்கைகளை.
சில ஆண்டுகளிலே லாப்பன் சந்தையில் தனியே கடை போட்டுவிட்டான். அதிர்ஷ்டம் அவனுக்குத் துணை நின்றது. வியாபாரத்தில் கிடைத்த பணத்தை அங்குள்ள சிறுவணிகர்களுக்கு வட்டிக்குக் கொடுத்தான். அதிலும் வருவாய்ப் பெருகியது. லாப்பன் முதலாளி என்று அவனை அழைக்க ஆரம்பித்தார்கள். சந்தையில் ஒரு வரிசை முழுவதும் லாப்பனின் கடைகளே இருந்தன.
லாப்பன் காய்கறி சந்தைக்குள் ஒரு கோவிலைக் கட்டினான். சந்தைவாசிகள் மட்டுமின்றி வெளியிலிருந்தும் ஆட்கள் வந்து அந்தக் கோவிலை வணங்கிப் போகத் துவங்கினார்கள். சந்தை வணிகர்கள் தங்கள் முதல் விற்பனையில் கிடைக்கும் பணத்தைக் கோவிலுக்குக் கொடுத்தார்கள். அக் கோவில் கட்டியது லாப்பனுக்குப் பெரிய புகழை உருவாக்கியது. அந்த மகிழ்ச்சியில் கோவிலுக்குத் தங்க வாகனம் வாங்கிக் கொடுத்தான் லாப்பன்.
இப்படிப் பணமும் புகழுமாக லாப்பன் இருந்த நாட்களில் லாப்பனின் மனைவி என்று சொல்லிக் கொண்டு ஒரு இளம்பெண் சந்தைக்கு வந்து கடையாட்களிடம் பணம் வசூலிக்கத் துவங்கினாள்.

பிரமிக்க வைக்கும் அழகை கொண்டிருந்த அவளைப் பார்த்து வியந்த கடைக்காரர்கள் இவளை எப்படி லாப்பன் திருமணம் செய்து கொண்டான் என்று ஆச்சரியப்பட்டார்கள். அவளிடம் லாப்பனுக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்தார்கள். அவளது நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டியில் கூடை கூடையாக மாம்பழங்களை ஏற்றினார்கள்.
அன்று மாலை லாப்பனுக்கு விஷயம் தெரிய வந்தது. தனக்குத் திருமணமே ஆகவில்லை. இது ஒரு மோசடி என லாப்பன் கொதித்துப் போனான். அந்தப் பெண் யார் என்று தேட ஆரம்பித்தான்.
அவள் காய்கறி சந்தையில் மட்டுமின்றி, ஜவுளிக்கடை, நகைகடை எனப் பல இடங்களில் லாப்பனின் பெயரைச் சொல்லி தேவையானவற்றை வாங்கிக் கொண்டு போனாள். அவளுடைய ஒளிரும் அழகையும் பேச்சின் வசீகரிக்கும் தன்மையை எல்லோரும் வியந்தார்கள்
ஆத்திரம் தாங்க முடியாத லாப்பன் அவளை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் எனத் தனது ஆட்களை அனுப்பி வைத்தான். அவர்களால் அந்தப் பேரழகியை கண்டறிய முடியவில்லை
ஒரு வெள்ளிக்கிழமை அவள் லாப்பன் கடையின் முன் வந்து நின்றாள். அப்படி ஒரு மயக்கும் அழகியை லாப்பன் கண்டதேயில்லை. அவள் சொல்லும் பொய்யை ஏற்றுக் கொண்டுவிடலாம் என்பது போலிருந்தது. அவள் லாப்பனிடம் கைகளை நீட்டி வீட்டிற்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டாள். லாப்பன் நீட்டிய கைகளைப் பற்றிக் கொண்டு கேட்டான்
“உன்னை எப்போது திருமணம் செய்து கொண்டேன் என்று சொல்“
அவள் சிரித்தபடியே லாப்பனின் இடுப்பில் இருக்கும் மச்சத்தைப் பற்றிச் சொன்னாள். கூடவே லாப்பனை அவள் திருமணம் செய்து கொண்டதற்கான சாட்சிகளாக இருவர் தன்னோடு வந்திருப்பதாகத் தெரிவித்தாள்.
அந்த இருவர் லாப்பனின் கடைக்கு வெளியே நின்றிருந்தார்கள். அவர்கள் லாப்பன் தங்கள் சகோதரியை எங்கே எப்போது திருமணம் செய்து கொண்டான் என்று சாட்சியம் சொன்னார்கள். சந்தை அதனை நம்பியது. லாப்பன் அந்தப் பொய்யை உண்மையாக்க விரும்பி அவளை ஊர் அறிய மனைவியாக ஏற்றுக் கொள்வதாகச் சொன்னான்.
அவள் அதற்குச் சம்மதம் தெரிவிப்பது போலக் கூடையில் இருந்த கொய்யாப்பழம் ஒன்றை பாதிக் கடித்து மீதியை அவனிடம் நீட்டினாள். லாப்பன் அந்தக் கனியை உண்டான். அது அவனது விதியை மாற்றி அமைத்தது. அந்தப் பெண் லாப்பனின் கையைப் பற்றிக் கொண்டு சந்தையிலிருந்து தனது கோச் வண்டியை நோக்கி சென்றதை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். பின்பு லாப்பன் திரும்பி வரவில்லை.
எங்கே சென்றான். என்ன ஆனான் என்று தெரியவில்லை. லாப்பனின் கடைகளை அதில் வேலை செய்வதர்களே எடுத்துக் கொண்டார்கள். லாப்பன் கட்டிய கோவிலையும் கைவிட்டார்கள். சந்தை கொஞ்சம் கொஞ்சமாக லாப்பனை மறந்து போனது. புதிய வணிகர்கள் சந்தையில் தோன்றினார்கள்.

நீண்ட பல வருஷங்களுக்குப் பின்பு அந்தச் சந்தைக்கு ஒட்டி உலர்ந்து போன வயிற்றுடன் ஒரு கிழவன் வந்திருந்தான். அவன் கூட ஒரு நாய்க்குட்டி. அது லாப்பன் என எவருக்கும் தெரியவில்லை. அவன் தனது பழைய கடைகள் உருமாறியிருப்பதைப் பார்த்தான். தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்றே விரும்பினான். ஆனால் சந்தையில் நாவற்பழம் விற்கும் ரஞ்சிதம் என்ற பெண் அவனை அடையாளம் கண்டுவிட்டாள். அவள் அதிர்ச்சியோடு கிழவனைப் பார்த்து சொன்னாள்
“லாப்பன் முதலாளி. “
அது தான் இல்லையென்று லாப்பன் தலையாட்டினான். ஆனால் அவள் விடவில்லை. சந்தையே கேட்கும்படி சப்தமிட்டாள். அது லாப்பன் தானா. ஏன் இப்படி உருக்குலைந்து போனான் என வியாபாரிகள் ஒன்றுகூடி அவனை வெறித்துப் பார்த்தார்கள்.
லாப்பனுடன் நெருங்கிய பழகிய மயூரன் என்ற வணிகன் மட்டும் கேட்டான்
“அந்த பெண் உன்னை ஏமாற்றிவிட்டாளா“
“இல்லை. நான் விரும்பி ஏமாந்துவிட்டேன்“.
“யார் அவள். ஏன் உன்னை இப்படிப் பொய் சொல்லி திருமணம் செய்து கொண்டாள். “
லாப்பன் நடுங்கும் குரலில் சொன்னான்
“அது தான் எனக்கும் புரியவில்லை. எது அவளை என்னை நோக்க வர வைத்து. ஏமாற்ற வைத்தது. அவள் திருடர் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளுடன் வந்தவர்களும் திருடர்கள். நான் திருடர்களின் கூட்டத்தில் முப்பது ஆண்டுகளைச் செலவு செய்துவிட்டேன். பூனை தனது குட்டியை கவ்வி கொண்டு போவது போல அவள் என்னைக் கவ்விக் கொண்டுவிட்டாள். என்ன மயக்கம் என்று புரியவேயில்லை. சுடரை காற்று விழுங்கிக் கொள்வதைப் போல அவள் என்னை விழுங்கிக் கொண்டுவிட்டாள். என்னால் அவளிடமிருந்து விடுபடவே முடியவில்லை“
“இப்போது எப்படி வந்தாய். அவள் எங்கே“
“பத்து ஆண்டுகளுக்கு அவள் இறந்துவிட்டாள். அதுவும் கருநாகம் கடித்து“.
சாவதற்கு முன்பாக அவள் எனது கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னாள்
“நான் உயிரோடு இருக்கும் போதே ஒடிவிடு. “
அவசரமாக எழுந்து ஒடினேன். அவளது குரல் கேட்டால் கூடத் திரும்பி விடுவேனோ எனப் பயமாக இருந்தது. வட இந்தியாவில் ஊர் ஊராக ஒடிக் கொண்டேயிருந்தேன். நிற்காத ஒட்டத்தின் முடிவில் இங்கே வந்திருக்கிறேன்.
அவன் சொல்லியதைக் கேட்டு சந்தை திகைத்துப் போனது. அவன் தன்முன்னிருந்தவர்களைப் பார்த்து கேட்டான்.
“நான் ஏன் அந்தப் பெண்ணோடு கடையை விட்டு வெளியேறி போனேன். உங்களில் யாராவது பதில் சொல்லுங்கள்“.
எவரிடமும் பதில் இல்லை. லாப்பன் அதன்பிறகு சந்தையை விட்டு போகவில்லை. அங்கேயே வசிக்க ஆரம்பித்தான்.
திருடர்களோடு வாழ்ந்த அனுபவத்திலிருந்து லாப்பன் ஒரு நாட்காட்டியை உருவாக்கினான். அந்த நாட்காட்டியின் உதவியைக் கொண்டு திருடர்களின் நிமித்திகனாக உருமாறினான்.
தன்னை ஏமாற்றிய வஞ்சகம் செய்த திருடர்களுக்கு ஏன் நாள் குறித்துக் கொடுத்தபடி இருக்கிறான் என்று எவருக்கும் புரியவில்லை. அந்தப் பெண் கொடுத்த முத்தம் அவன் தலையில் விஷமாக ஏறியிருக்கிறது. அதை மாற்றவே முடியாது. லாப்பனின் விதியை அந்தப் பெண் எழுதி முடித்துவிட்டாள் என்றார்கள்.
லாப்பன் இறந்த போது அவனது பெட்டியிலிருந்த திருடர்களின் நாட்காட்டியை திறந்து பார்த்தார்கள். அது தோலில் பைண்ட் செய்யப்பட்ட புத்தகம். அதில் எதுவும் எழுதப்படவில்லை. வெற்றுக் காகிதங்கள். லாப்பன் திருடர்களின் நாட்காட்டியை தனது மனதில் வைத்திருந்தான் என்கிறார்கள். நிஜம் தானா என்று தெரியவில்லை.
லாப்பனின் நாட்காட்டியைப் பற்றிப் போலீஸ் கெஜட்டில் எழுதிய ஜோ.மார்டின் இது முற்றிலும் கற்பனை கதையாகவும் இருக்கக் கூடும் என்கிறார். திருடர்களின் வசிப்பிடம் கதை தான் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது.
••