குற்றமுகங்கள் -7 நூபுரன்

மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல் ரயில் சேவை ஜூலை 1, 1856 அன்று ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து துவங்கியது. 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுச் சுமார் மூன்றரை மணி நேரம் பயணத்தின் பின்பு வாலாஜாவை அடைந்தது. ரயிலின் வரலாறு இதுவாக இருந்தாலும் ரயிலில் பிறந்த முதல் குழந்தையின் வரலாறு 1894ல் துவங்குகிறது.

நூபுரன் தான் ரயிலில் பிறந்த முதல் குழந்தை. அவனது அம்மாவின் பெயர் தனராணி. ஒடும் ரயிலில் நடந்த பிரவசமது. ரயிலில் யார் பிரவசம் பார்த்தது என்று தெரியவில்லை. ஆனால் ரயிலின் ஓசையே நூபுரன் கேட்ட முதல் சப்தம்.

ரயிலில் பிறந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்து கொள்ளலாம் என்று பயணிகளில் ஒருவர் சொன்னார். தனராணி அதை நம்பவில்லை. ரயிலில் குழந்தை பிறந்தது அதிர்ஷ்டமில்லை என்று மட்டும் நம்பினாள்.

மாட்டுவண்டிகள் செல்வதற்கே சரியான பாதையில்லாத அவளது சொந்த கிராமமான தென்வடலில் அவனை வளர்த்தாள். ரயிலில் பிறந்த நினைவு நூபுரனுக்குள் இருந்திருக்கக் கூடும். அவன் சிறுவனாக இருந்த போது ஒரு இடத்தில் நிற்காமல் ஒடிக்கொண்டேயிருந்தான்.

தனது பத்தாவது வயதில் அவன் நேரில் ரயிலைப் பார்த்த போது அது தன்னுடைய பிறந்த வீடு என்றே உணர்ந்தான். கனத்த இரும்பின் சப்தம் அவனை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. ரயிலின் கூடவே அவனும் ஒடினான். ரயிலின் வேகத்தில் இணைந்து ஒட தனக்கும் இரும்பாலான கால்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டான். ரயிலின் கரும்புகை அவனை ஏக்கம் கொள்ள வைத்தது.

ஊர் திரும்பிய நூபுரன் ரயிலைப் போலவே சப்தமிட்டான். அதன் பிந்திய நாட்களில் ரயில் நம்முடையது தானா என அம்மாவிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தான். அவனைச் சமாதானப்படுத்த அம்மா அது உன்னுடைய சொத்து என்றாள்.

நூபுரன் அதை முழுமையாக நம்பினான். தனக்குரிய ரயிலை தானே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தனது பதினைந்தாவது வயதில் வீட்டைவிட்டு ஒடிப் போனான்.

அதுவே அவனது முதல் ரயில் பயணம். அதன் பிறகான ஆண்டுகளில் எத்தனையோ ரயில்களில் எங்கெங்கோ பயணம் செய்துவிட்டான். எதற்கும் டிக்கெட் வாங்கியது கிடையாது. எந்த ரயில் நிலையத்திலும் இறங்கிக் கொள்வான். டிக்கெட் கேட்கும் பரிசோதகரிடம் தான் ரயிலில் பிறந்தவன் என்று வாதிடுவான்.

“உங்கப்பனா ரயிலை விட்டிருக்கிறான். தண்டம் கெட்டு“ என அவர்கள் சண்டையிடும் போது நூபுரன் வெறும் கையை விரித்துக் காட்டுவான். ரயில் தான் அவனைக் குற்றம் செய்ய வைத்தது. தனது முதல் திருட்டை அவன் நிகழ்த்தியது ரயிலில் தான்.

ரயிலில் பயணம் செய்கிறவர்கள் ஈரத்துணி தரையில் கிடப்பதைப் போல நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். பெரிய தொட்டில் ஒன்றில் உறங்கும் குழந்தையைப் போலத் தன்னை உணருகிறார்கள். ரயிலின் வேகத்தில் காற்று முகத்தில் ஏற்படுத்தும் குறுகுறுப்பின் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள். ஆண்களை விடவும் பெண்களை ரயில் அதிக சந்தோஷப்படுத்துகிறது என்பதை நூபுரன் கண்டறிந்தான்.

ரயிலில் ஏறியதும் மனிதர்கள் தன் இயல்பை மீறி நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களின் குரல் மாறிவிடுகிறது. தனது வாழ்க்கை நிகழ்வுகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளத் துவங்கிவிடுகிறார்கள். ரயில் பயணம் என்பது பலநூறு நடிகர்கள் ஒரே மேடையில் தோன்றி நடிக்கும் நாடகம்.

சில பயணிகளின் அலட்சியம் மற்றும் அதிகாரம் தான் அவர்களின் பொருளை திருடும்படியாக நூபுரனைத் தூண்டியது. பெரும்பாலும் அவன் பகலில் தான் திருடுவான். அதுவும் திருடிய பொருளோடு ஒடும் ரயிலில் இருந்து குதித்து விடுவான். அது ஒரு சாகசம். அப்படித் தாவிக் குதிக்கும் போது கவண் கல்லில் இருந்து கல் பறப்பது போன்ற இன்பத்தை அடைந்தான்.

மோதிரம், செயின், பயணப்பெட்டிகள், கூஜா, கைகடிகாரம், வெண்கல பானை, எனத் திருடிய அவன் ஒருமுறை ஜேம்ஸ் ஏ. காக்ஸ் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் தொப்பி மற்றும் துப்பாக்கி இரண்டினையும் திருடிச் சென்றான்.

அந்த நாட்களில் ரயில்வே நிறுவனங்கள் பயணிகளின் சொத்துக்கள் மற்றும் பொருட்களைப் பாதுகாக்க தங்களுக்கென “வாட்ச் அண்ட் வார்டு” ஊழியர்களைக் கொண்டிருந்தன, அவர்களால் திருட்டை தடுக்க முடியவில்லை.

நூபுரன் தன்னை நித்ய ரயில் பயணியாகக் கருதினான். உறங்குவது என்றால் கூடச் சிறிய ரயில் நிலையம் ஒன்றின் கடைசி இருக்கையினையே தேர்வு செய்தான். ரயில் நிலையத்தில் கிடைக்கும் உணவிற்கு என்றே ஒரு ருசியிருக்கிறது. ரயில் நிலையக்காற்று என்றும் இருக்கிறது. அதை வேறு இடங்களில் உணர முடியாது.

இந்த நாட்களில் தன்னைப் போல ரயில் திருடர்களாக இருக்கும் பலரை அவன் கண்டுகொண்டான். அதில் இருவர் பெண்கள். அவர்கள் திருமண வீட்டிற்குப் போவது போல மிக அழகாக ஒப்பனை செய்து கொண்டு ரயிலில் ஏறுவார்கள். பயணிகளுடன் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். எவரும் அவர்களைச் சந்தேகம் கொள்ள முடியாது. உறங்கும் பெண்களின் கழுத்தில் உள்ள நகைகளை, கைவளையல்களைத் திருடிக் கொண்டு நழுவி விடுவார்கள்.

நூபுரன் அந்தப் பெண்களுடன் ஸ்நேகமாக இருந்தான். அவர்களில் ஒருத்தி புளிப்பு உருண்டை சாப்பிடுவதில் விருப்பம் கொண்டிருந்தாள். சிறிய உருண்டை புளியை எப்போதும் வாயில் ஒதுக்கிக் கொண்டிருப்பாள். ஒருமுறை அவன் மீதான அன்பில் அந்த எச்சில் புளி உருண்டையை நூபுரனுக்குக் கொடுத்தாள். பல்கூசும் புளிப்பை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அப்போது அவன் முகம் போன போக்கை பார்த்து அவள் சிரித்தது நூபுரனால் மறக்க முடியவில்லை.

பணப்பெட்டி துவங்கி வரை பழக்கூடைகள் ரயிலில் பல்வேறு வகையான பொருட்கள் திருட்டுப் போனது. நூபுரன் யாரோடு இணைந்தும் திருட்டில் ஈடுபடவில்லை. திருடிய நகையைத் துளையிடப்பட்ட இளநீர் ஒன்றுக்குள் வைத்து ரயிலில் இருந்து நூபுரன் வீசி எறிந்துவிடுவான். மறுநாள் பகலில் அதை எடுத்துக் கொள்வது வழக்கம்.

மதராஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்த சொத்து வழக்கு ஒன்றுக்காக ராவ் பகதூர் வேதலாசம் அடிக்கடி ரயிலில் போய் வருவதுண்டு. அவரது தலைப்பாகையில் வைரக்கல் பதிந்திருக்கும். ரயில் பயணத்திலும் அதை அணிந்திருப்பார். பயணத்தின் போது அவருடன் இரண்டு வேலையாட்கள் ஒரு கணக்குபிள்ளை உடன்வருவார்கள் பயணத்திற்கென பட்டுத் தலையணை, படுக்கை, விசிறி, வெள்ளி கூஜாவில் பசும்பால் கொண்டு வருவார்கள். ராவ் பகதூரின் வேலையாட்கள் ரயில்பெட்டியில் தரையில் தான் அமர வைக்கபட்டார்கள்.

அவரது தலைப்பாகையை நூபுரன் கொள்ளையடித்துச் சென்றது செய்திதாள்களில் கூட இடம்பெற்றது. ஒரு முறையில்லை. ஐந்து முறைகள் ராவ் பகதூர் வேதாசலத்தின் பொருட்களை நூபுரன் கொள்ளையடித்திருக்கிறான். அத்தனையும் அவரது வேறுவேறு ரயில் பயணத்தில்.

ஒரு முறை அவர் கைதுப்பாக்கியுடன் பயணம் செய்தார். காவலுக்கு நான்கு ஆட்களையும் வைத்திருந்தார். நூபுரன் எப்படித் திருடினான் என்று எவருக்கும் தெரியவில்லை. அந்த முறை அவர் இடுப்பில் அணிந்திருந்த வெள்ளி அரைநாண் களவு போயிருந்தது.

பாம்புப்பிடாரன் போல வந்து நூபுரன் அதைத் திருடிச் சென்றான் என்றும் அவனது மகுடிக்குள் திருடிய வெள்ளி நாணை மறைத்துக் கொண்டு விட்டான் என்றும் சொல்கிறார்கள்

வெள்ளைகார துரைகளிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ராவ்பகதூர் திருடனைத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போதும் நூபுரனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவனது தலைக்கு ஆயிரம் ரூபாய்த் தருவதாகக் கூட அறிவித்தார்கள்.

இந்தத் தொடர் திருட்டுகள் தனக்கு இயற்கை விடுகிற எச்சரிக்கை என்பது போல உணர்ந்த ராவ்பகதூர் தான் வழக்காடிக் கொண்டிருந்த கேஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். ஒன்பது வருஷங்களாக இழுத்தடித்துக் கொண்டிருந்த சொத்துவழக்கு நொடித்துப் போய்க் கடனில் மூழ்கியிருந்த ஆறுமுகத்தின் பக்கம் ஜெயமாகியது.

நூபுரனை பிடிப்பதற்காக இங்கிலாந்திலிருந்து பனிரெண்டு துப்பாக்கி வீர்ர்கள் வரவழைக்கபட்டார்கள். அவர்கள் மாறுவேஷத்தில் பயணிகள் போல ரயிலில் சென்றார்கள். சந்தேகப்படுகிறவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தார்கள். இதில் நூபுரன் எந்த ரயிலில் வைத்து அவர்களிடம் அகப்பட்டான் என்று தெரியவில்லை. ஆனால் அவன் ரயிலில் இருந்து தப்பிக் குதிக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இறந்து கிடந்த அவனது உடல் இரண்டு நாட்களுக்குத் தண்டவாளத்தின் ஓரத்தில் கிடந்தது. மூன்றாம் நாளில் உடலை ஒலைப்பாயில் சுருட்டி கூட்ஸ் ரயிலில் கொண்டு போனார்கள் எனக் கான்ஸ்டபிள் ஃபிரைட்மேன் தனது அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார். அவன் ரயிலில் பிறந்தவன் என்ற தகவல் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

முர்ரே ஹாமிக் மதராஸின் காவல்துறை ஆணையராக இருந்த போது இந்த அறிக்கை சமர்ப்பிக்கபட்டிருக்கிறது.

••

0Shares
0