குற்றவுணர்வின் பாதை மிக நீண்டது.

ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமியின் Men Without Women சிறுகதைத் தொகுப்பிலுள்ளது Drive My Car சிறுகதை.

இந்தச் சிறுகதையை மையமாகக் கொண்டு ரியுசுகே ஹமாகுச்சி இயக்கியுள்ள திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்றுள்ளதோடு தற்போது ஆஸ்கார் பரிந்துரை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது

படம் பார்ப்பதற்கு முன்பு நீங்கள் சிறுகதையைப் படித்திருந்தால் படத்தின் திரைக்கதை எவ்வளவு அழகாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். முரகாமியின் நாவல்கள் இதற்கு முன்னதாகப் படமாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை. இந்தப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம் அதன் திரைக்கதை அமைப்பே.

சிறுகதையின் துவக்கத்தில் ஜப்பானிலுள்ள பெண் காரோட்டிகளின் மனநிலையைப் பற்றி முரகாமி விரிவாக எழுதியிருப்பார். கண்ணில் குளுகோமா வந்த நிலையில் காரோட்ட உதவி தேவை என்ற நிர்ப்பந்தம் காரணமாகவே கதையில் ஒரு பெண் காரோட்டி வேலைக்கு வருகிறார். அதை விருப்பமில்லாமல் ஏற்றுக் கொள்வதாகவே கதை விவரிக்கிறது.

படம் சிறுகதையின் மையப்பொருளை மட்டுமே வைத்துக் கொண்டு தனக்கான ஒரு திரைவடிவத்தை உருவாக்கியிருக்கிறது. கதையில் வருவது போலப் பெண் காரோட்டிகள் பற்றிய கேலிப்பேச்சு எதுவும் படத்தில் கிடையாது.

முரகாமியின் புனைவிற்கே உரித்தான விசித்திரங்களுடன் படம் துவங்குகிறது. கஃபுகுவும் அவனது மனைவி ஓட்டேவும் உடலுறவின் போது கற்பனை கதைகளை உருவாக்குகிறார்கள். அப்படி ஒரு புனைவான பெண்ணின் கதையிலிருந்து படம் துவங்குகிறது. அந்தக் கதாபாத்திரத்தின் ரகசிய செயல்பாட்டினை எப்படி வளர்த்தெடுப்பது என்பதைப் பற்றி மறுநாள் அவர்கள் காரில் உரையாடியபடியே செல்கிறார்கள்.

தங்களின் நான்கு வயது மகளை நிமோனியாவால் இழந்த காரணத்தால் அவர்களின் குடும்ப உறவில் மெல்லிய விரிசல் உருவாகியிருக்கிறது.

ஒரு நாள் ஓட்டோ தன்னோடு பணியாற்றும் இளம் நடிகன் கோஜி தகாட்சுகியுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருப்பதைக் கஃபுகு காணுகிறான். ஆனால் இதைப்பற்றி அவளுடன் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

குளுகோமா காரணமாக அவனது கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்கிறான். ஏன் இந்தப் பார்வையிழப்பு ஏற்படுகிறது என்பதை மருத்துவரால் விளக்க முடியவில்லை. மாறாக அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்கிறார். இது தான் படத்தின் மையக்குறியீடு. அவனது குடும்ப வாழ்க்கையும் இது போன்றதே.

கஃபுகு ஒரு நாள் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்து சேரும்போது ஓட்டோ, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இறந்து கிடப்பதைக் காணுகிறான். அவளது இறுதிச்சடங்கில் இளம் நடிகனைக் காணுகிறான். குற்றவுணர்வு கஃபுகுவினை வதைக்கிறது

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமாவிலுள்ள ஒரு நாடக நிறுவனத்திற்காக ஆன்டன் செகாவின் அங்கிள் வான்யா நாடகத்தை இயக்கச் செல்கிறான். அங்கே நீண்ட தொலைவில் உள்ள ஒரு தங்குமிடத்தினைத் தனக்காகத் தேர்வு செய்கிறான்.

அரங்கத்திலிருந்து விடுதிக்குப் போய் வருவதற்காகவே பெண் காரோட்டி உதவிக்கு நியமிக்கப்படுகிறார். மிசாகி வதாரி என்ற பெண் காரோட்டி அறிமுகமாகும் காட்சியிலிருந்து அவளது கடந்தகாலம் விவரிக்கப்படுவது வரை படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. மிசாகியாக நடித்திருக்கும் Tôko Miura அற்புதமாக நடித்திருக்கிறார்.

கஃபுகுவின் கடந்தகாலம் ஒரு சரடு. அவன் மனைவிக்கும் இளம் நடிகனுக்குமான ரகசிய உறவு இன்னொரு சரடு. கஃபுகுவிற்கும் மிசாகிக்குமான உறவு மூன்றாவது இழை. நாடக ஒத்திகை மற்றும் அதில் சைகையில் உரையாடும் பெண் நான்காவது இழை இப்படிக் கதை நான்கு தனியிழைகளை அழகாகப் பின்னிப்பின்னி திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஆன்டன் செகாவின் தீவிர வாசகரான முரகாமி இதில் செகாவின் நாடகத்தையும் அதற்கான ஒத்திகையினையும் மையக்கதையின் இணைநிகழ்வாக மாற்றியிருக்கிறார். படத்தின் முடிவில் வான்யாவாகக் கஃபுகுவே நடிக்க ஒத்துக் கொண்டு நாடகம் நிகழும் போது இரண்டு நிகழ்வுகளும் ஒன்று கலந்துவிடுகின்றன. நிஜம், நாடகம் என்ற இரண்டுக்குமான வேறுபாடு அழிக்க பட்டுவிடுகிறது.

இந்தப் படத்தைக் காணும் போது Driving Miss Daisy திரைப்படம் நினைவில் வந்தபடியே இருந்தது. அதுவும் ஆஸ்கார் விருது பெற்ற படமே. சிறப்பாக உருவாக்கியிருப்பார்கள். முரகாமியின் சிறுகதையில் தொட்டுக்காட்டிச் செல்லும் விஷயங்களைப் படத்தில் அழகான காட்சிகளாக மாற்றியிருக்கிறார்கள்.

தனது கார் பயணத்தின் போது பதிவு செய்யப்பட்ட கேசட்டை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே வருகிறான் கஃபுகு. அது அவனது நினைவின் புறவடிவம் போலவே ஒலிக்கிறது. இறந்து போன மனைவியின் குரலது.

காரோட்டிகளுக்கே உரித்தான நிதானத்துடன் அமைதியுடன் நடந்து கொள்ளும் மிசாகி கார் ஓட்டுவதைத் தனது மீட்சியாகக் கொண்டிருக்கிறாள் என்பது அழகான விளக்கம். படத்தின் துவக்கக் காட்சிகளில் கஃபுகு தனது கடந்தகாலத்தைப் பேச தயராகயில்லை. எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கியிருக்கவே விரும்புகிறான். ஆனால் மிசாகியின் நிதானமும் ஈடுபாடும் அவளிடம் தனது கடந்தகாலத்தைப் பற்றிப் பேச வைக்கிறது.

குற்றவுணர்வு கொண்ட இருவர் ஒரு புள்ளியில் சந்தித்து ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது. ஆளற்ற பனிப்பிரதேசத்தில் அவர்கள் நடந்து செல்வதும் மிசாகியின் பழைய வீட்டினை பார்வையிடுவதும் சிறப்பான காட்சிகள்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட முடியாதவர்களை முரகாமி நிறையவே எழுதியிருக்கிறார். எது சரி எது தவறு என்பதைத் தாண்டி ஏன் இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இதன் பின்னுள்ள மனநிலை என்னவென்பதையே அவர் ஆராய்கிறார். முரகாமியின் அடையாளமாகக் கருதப்படும் மேற்கத்தியச் சங்கீதம். மதுவிடுதிகள். நீண்ட பயணங்கள். கடற்கரை போன்றவை இதிலும் உண்டு.

வேறுவேறு மொழிகள் பேசும் நடிகர்களைக் கொண்டு ஆன்டன் செகாவின் நாடகத்தைக் கஃபுகு ஏன் நடத்த விரும்புகிறான். காரணம் மொழியைத் தாண்டி அடிப்படை உணர்ச்சிகள் பொதுவானது. வான்யாவின் ஆற்றாமையை எந்த மொழியில் பேசினாலும் பார்வையாளரால் உணர முடியும்.

படத்தின் துவக்கத்தில் கதை சொல்லுதல் என்பது ஒரு சடங்கு போலவே சித்தரிக்கப்படுகிறது. உடலுறவின் போது அவர்கள் கதையைப் புனைகிறார்கள். ரகசியமான செயல்களில் ஈடுபடும் ஒரு இளம்பெண்ணைப் பற்றி ஒட்டோ சொல்கிறாள். பிறர் அறியாமல் அவர்கள் வாழ்க்கையினுள் பிரவேசிப்பது என்பதைப் பற்றிய இந்தத் துவக்கம் பின்பு படத்தின் மைய நகர்வாக மாறுகிறது.

ஹிரோஷிமாவின் அழகான நிலக்காட்சிகள். நீண்டகார் பயணத்தின் போது கடந்து செல்லும் நிலவெளி. கஃபுகு தங்கியுள்ள விடுதி. அவனது சிவப்பு வண்ண கார்(red Saab 900), அவன் திரும்பி வரும்வரை இரவில் மிசாகி காத்திருக்கும் இடம் என இடமும் கதையின் அகமாக மாறியிருக்கிறது.

உண்மையை மறைத்துக் கொள்ளும் போது ஏற்படும் தடுமாற்றத்தை கஃபுகு அழகாக வெளிப்படுத்துகிறான். சைகை மொழியில் பேசும் நடிகையை நாடகத்திற்கான தேர்விற்கு அழைக்கும் போது, கஃபுகு மொழியற்ற தொடர்பு நிலையை அறிந்து கொள்கிறான். அது தான் மீட்சியின் வழி.

Drive My Car நிஜ வாழ்க்கையில் நாம் எவ்வளவு நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையும் மேடை நடிப்பின் மூலம் வாழ்க்கையின் உண்மைகள் வெளிப்படுகின்றன என்பதையும் தேர்ந்த கலைப் படைப்பாக வெளிப்படுத்தியிருக்கிறது. இப்படம் இன்னும் நிறைய விருதுகளை வெல்லும் என்றே தோன்றுகிறது.

••

0Shares
0