குற்றவுணர்வின் மணியோசை

கன்னடத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு புத்த மணியோசை. கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார் கே.நல்லதம்பி. எதிர் வெளியீடு இதனை வெளியிட்டுள்ளது.

சமகாலக் கன்னடச்சிறுகதைகளின் போக்கையும் தனித்துவத்தையும் இத்தொகுப்பு சரியாக அறிமுகம் செய்திருக்கிறது. நேரடியாகத் தமிழில் எழுதப்பட்டது போல அத்தனை நிறைவான மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நல்லதம்பி. அவருக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்

இந்தத் தொகுப்பில் பத்து கதைகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பாகக் கிருஷ்ணமூர்த்தி சந்தரின் கதை, ஹெச். என் சுபதாவின் கதை, ஸ்ரீகாந்தாவின் சிறுகதை, மஹந்த்தேஷ் நவல்கல் எழுதிய சிறுகதை இந்த நான்கும் மிகச்சிறந்தவை.

கன்னடக்கதைகளாக இருந்தாலும் இதில் சில கதைகள் சென்னையில் நடக்கின்றன. அதுவும் சென்னையில் நாம் அறியாத விஷயங்களை, நினைவுகளை, மனிதர்களை அடையாளம் காட்டுகின்றன. இன்னொரு மொழியில் சென்னை வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.

கிருஷ்ணமூர்த்தியின் துங்கபத்ராவின் மாமரமும் மதராசின் குயிலும் சிறுகதை புகழ்பெற்ற இசைக்கலைஞர் ராஜீவ் தாராநாத்தின் தந்தை பண்டிட் தாராநாத் பற்றியது. அவர் ஒரு கல்வியாளர். ஆயுர்வேத மருத்துவர். இசைக்கலைஞர். அவரது தங்கை லீலா சென்னையில் கல்வி பயின்றிருக்கிறார்.

லீலாவின் தோழியான சுமதி தமிழ்பெண். அவரைத் தான் பண்டிட் தாராநாத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். நிஜாம் அரசு பண்டிட் தாராநாத்தை கைது செய்ய முற்பட்ட போது அவரை எப்படித் தந்திரமாகத் தப்ப வைத்தார்கள் என்பது வியப்பளிக்கிறது.

கதையை விடவும் வாழ்க்கை அதிகத் திருப்பங்களும் எதிர்பாராத நிகழ்வுகளும் கொண்டது என்பதற்குத் தாராநாத்தின் வாழ்க்கை ஒரு உதாரணம்

கதை கடந்த கால நிகழ்வுகளை இன்றைய உரையாடலின் வழியே அழகாக இணைக்கிறது. மாமரமும் குயிலும் அழகான கட்டிங் பாயிண்ட். சுமதிபாய் 1930களில் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவரது ஆளுமை கதையில் முழுமையாக வெளிப்படுகிறது. உண்மை நிகழ்வுகளை இவ்விதம் சிறந்த சிறுகதையாக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

நார்மண்டியின் நாட்கள் என்ற சுபதாவின் கதை நிகரற்றது. சமீபத்தில் நான் படித்த மிகச்சிறந்த சிறுகதை இதுவே.

நார்மண்டியில் வசித்த தனது பால்ய நினைவுகளைக் கதை சொல்லி நினைவுபடுத்துவதில் துவங்குகிறது கதை

அவரது அப்பா ஜார்ஜ், அம்மா தெல்லி இருவரையும், நார்மண்டியின் வாழ்க்கைச் சூழலையும் அறிமுகம் செய்கிறார்.

சமையல் செய்வதில் நிகரற்ற ஜார்ஜ் பிள்ளைகளுக்கு விதவிதமான உணவை ருசியாகச் சமைத்துத் தருகிறார். அவர் பாரீஸின் புகழ்பெற்ற உணவகங்களில் பணியாற்றிய தலைசிறந்த சமையற்கலைஞர். தெல்லி அவரது உணவின் ருசியில் மயங்கிக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இயற்கையோடு இணைந்து வாழுவதற்காக அவர்கள் நார்மண்டியில் குடியேறுகிறார்கள். பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் சுவையான உணவுகளைத் தயாரித்துக் கொடுப்பதில் ஜார்ஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் மற்ற ஆண்களைப் போல வாழ்க்கையில் பெரிய கனவுகள் எதுவுமற்று இருக்கிறாரே, பணம் தேட முயலவில்லையே என்று தெல்லிக்கு ஆதங்கம்.

தெல்லி ஒரு அழகி. அவள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறாள். நாடகம், சினிமா, விருந்து என உல்லாசமாக இருக்க நினைக்கிறாள். பாரீஸை விட்டு அவர்கள் நார்மண்டிக்கு வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை. மூன்று குழந்தைகள் பிறந்த பிறகு காதல் வாழ்க்கை சலிக்கத் துவங்கிவிடுகிறது. ஆனால் ஜார்ஜ் கிராம வாழ்க்கையை விரும்புகிறார். நார்மண்டியில் ஒவ்வொரு இரவும் அவர் கணப்பு அடுப்பின் முன்பாக அமர்ந்து கிதார் வாசிக்கிறார். பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுக்கிறார். சமையலையும் சங்கீதம் போலவே உணர்கிறார்.

அன்றாடம் வீட்டில் ஒன்றுகூடும் தெல்லியின் நண்பர்கள் அனைவருக்கும் ஜார்ஜ் சுவையான உணவு தயாரித்துத் தருகிறார். அவர்கள் ஜார்ஜை புகழ்ந்து பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஊரே ஜார்ஜின் சமையலைப் புகழ்ந்து பேசுகிறது. அவரது மனைவியாக இருப்பது அதிர்ஷ்டம் என்று தெல்லியை பாராட்டுகிறது அவளுக்கோ அந்தப் பாராட்டு கசப்பாக இருக்கிறது. தெல்லி அவரை வெறுக்கத் துவங்குகிறாள் ‘

இதைக் காட்டிக் கொள்ள அவளாகச் சமைக்க முயலுகிறாள். ஜார்ஜ் அதை அனுமதிப்பதில்லை. அவள் சின்னஞ்சிறு விஷயங்களுக்காகக் கூட அவரைக் கோவித்துக் கொள்கிறாள். சண்டையிடுகிறாள்.

ஆனால் ஜார்ஜ் எதற்காகவும் அவளுடன் சண்டையிடுவதில்லை. எப்போதும் மாறாத சிரிப்புடன் இருக்கிறார். சமையலறையைச் சுத்தமாக வைத்துக் கொள்கிறார். மனைவிக்குப் பிடித்தமான உணவை சமைத்துத் தருகிறார். பிள்ளைகள் அவரது உணவின் ருசியைப் பாராட்டும்போது மனதில் அன்பு இருந்தால் மட்டுமே உணவில் ருசி பிறக்கும் என்று சொல்கிறார்

ஒரு நாள் தெல்லி இனி நீங்கள் சமைக்க வேண்டாம் என்று அவரைத் தடுத்துவிடுகிறாள். அவரால் இந்த நிராகரிப்பைத் தாங்க முடியவில்லை. அவளுடன் சண்டைபோடவில்லை. மாறாக நோயாளி போல முடங்கிப் போகிறார். அவரது சிரிப்பு மறைந்து போகிறது. சதா ஏதோ யோசனையுடன் இருக்கிறார். ஒரு நாள் கடைக்குச் சென்று விதவிதமான பாட்டில்களை வாங்கி வருகிறார். அவற்றைச் சமையலறையில் வைத்து பலசரக்குப் பொருட்களைப் போட்டு வைக்கிறார். அலங்காரப் பொருள் போல அழகு படுத்துகிறார்.

இந்த ஆசை மெல்ல வளருகிறது. அடிக்கடி கடைக்குப் போய்ப் புதிது புதிதான வண்ணங்களில் அளவுகளில் பாட்டில் வருகிறார். சதா அதைச் சுத்தம் செய்கிறார். பகலிரவாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் மிகப் பெரிய சைஸில் பாட்டிலை வாங்கி வருகிறார். தனது உணவு உடை எல்லாவற்றையும் அதற்குள் போடுகிறார். அவரது விபரீத நடவடிக்கை வீட்டைக் குழப்பமாக்குகிறது.

அவரது மாற்றம் தெல்லிக்கு அச்சமூட்டுகிறது. சமாதானம் செய்ய முயன்று தோற்றுப் போகிறாள்

இதனால் வீட்டின் அன்றாடம் பாதிக்கப்படுகிறது. பிள்ளைகளின் படிப்பில் சிக்கல் ஏற்படுகிறது. ஜார்ஜ் நலமுடைய தெல்லி ஏதேதோ செய்கிறாள். மீட்பது எளிமையாக இல்லை. தெல்லியின் நண்பர்கள் அவரது உடல் நலம் பற்றி அக்கறையாக விசாரிக்கிறார்கள். பாதிரியார் கூட ஆலோசனை சொல்கிறார். மெல்ல ஜார்ஜ் மனப்பிறழ்வின் உச்சத்தை நோக்கிச் செல்கிறார். கதையின் முடிவு நம்மைக் கலங்கச் செய்கிறது

இந்தக் கதையில் வரும் ஜார்ஜ் தனது குடும்பத்தால் நிராகரிக்கப்படுகிறார். உலகம் அவரது திறமையைக் கொண்டாடுகிறது. ஆனால் காதல் மனைவி அவரது திறமையை, அன்பை விரும்பவில்லை. பிள்ளைகள் அவரை நேசிக்கிறார்கள். அவர் சமைத்துத் தரும் ருசியான உணவைப் பாராட்டுகிறார்கள். அவரும் அவர்களுக்காகவே வாழுகிறார். ஆனால் அதைத் தெல்லி புரிந்து கொள்ளவில்லை.

அவள் வேறு கனவுகளுடன் வாழுகிறாள். அவரைத் தொடர்ந்து வேறு வேலைக்குச் செல்லும்படி நிர்ப்பந்தம் செய்கிறாள்.

ஜார்ஜ் தன்னை ஒரு காலி பாட்டில் போலவே உணருகிறார். முறிந்த கிளையைப் போல வாடத் துவங்குகிறார். தெல்லி தனது தவற்றை உணருகிறாள். ஆனால் அவளால் அவரை மீட்க இயலவில்லை.

ஜார்ஜ் உண்மையில் ஒரு கலைஞன். அவரது நுண்ணுணர்வே அவரை வீழ்ச்சியடையச் செய்கிறது. வேறு ஒரு ஆணாக இருந்தால் கோபம் கொண்டு சண்டையிட்டிருப்பார். அல்லது விலகி வெளியேறிப் போயிருப்பார். ஆனால் ஜார்ஜ் இன்னமும் தெல்லியைக் காதலிக்கிறார். ஆனால் அவரைச் சமையலறையிலிருந்து வெளியேற்றியதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளப்படாத அன்பு தான் மனப்பிறழ்வாக மாறுகிறது.

மிகச் சிறப்பான கதை. அடர்த்தியாக, நுணுக்கமாக நிகழ்வுகள் கதையில் விவரிக்கப்படுகின்றன. குறைவான உரையாடல்களே இதன் பலம். ஜார்ஜ் தெல்லியின் வாழ்க்கையை மட்டுமில்லை அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கையினையும் அவர்கள் எதிர்கொள்ளும் உண்மையான சிக்கல்களையும் கதை அழகாகப் பின்னிச் செல்கிறது.

எங்கேயும் யார் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை. ஆனால் குடும்பத்தில் பிரச்சனை எப்படி உருவாகிறது. எப்படி வளருகிறது. எப்படி விடுபட முடியாமல் போகிறது என்பதைக் கதை நுட்பமாக விவரிக்கிறது

ஜார்ஜ் காலிக் குப்பிகளின் மூலம் தனக்காக விடுதலையைக் கண்டறிவது போல நிராகரிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வழியில் தனது வெறுமையைப் போக்கிக் கொள்ள முயலுகிறார்கள். வீழ்ச்சி அடைகிறார்கள்.

ஸ்ரீகாந்தாவின் ஈயைத் துரத்திக் கொண்டு சிறுகதையில் காமம் தான் ஈயாகச் சுற்றியலைகிறது. அது குருட்டு ஈயைப் போலத் தத்தளிக்கிறது. அந்தக் கதையிலும் தமிழ் சினிமா காட்சிகள் கேலி செய்யப்படுகின்றன. கதையில் காதலுற்ற இரண்டு ஈக்கள் ஒன்றையொன்று துரத்துகின்றன. முத்தமிட்டுக் கொள்கின்றன. கலவி புரிகின்றன. அசிங்கம் என்ற வார்த்தை அழகாக இருக்கிறதே என்று அந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. சோபியா லோரனும் விவேகானந்தரும் ஒரே அட்டையின் முன்பின்னாக இருப்பது ஸ்ரீகாந்தாவின் கூர்மையான கேலிக்குச் சான்று

புத்த மணியோசை கதை பேங்காங்கில் நடக்கிறது. கிருமிநாசினிகள் விற்பனை செய்யும் ஒருவன் பட்டாங்கில் ஆன்காங்க் என்ற விலைமாதைச் சந்திக்கிறான்.

விற்பனை பிரதிநிதிகளை உற்சாகப்படுத்த நிறுவனம் வெற்றியாளர்களைப் பாங்காங் அழைத்துவருகிறது. மது பெண்கள், கேளிக்கை என உல்லாசம் அனுபவிக்க வைக்கிறது.

பேங்காங் என்றால் சொர்க்கம் எனப் பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் அது ஒரு நரகம். மோசமான உடலின்ப சந்தை. பச்சைக்காய்கறிகள் போல இளம்பெண்களும் விற்பனை பொருளாகக் கருதப்படுகிறார்கள் என்கிறார் மஹந்த்தேஷ் நவல்கல்.

கதையின் ஒரு இடத்தில் ஆன்காங் கேட்கிறாள்.

“இந்தியர்கள் இங்கே உல்லாசமாக இருக்க வருகிறீர்கள். உங்கள் மனைவிகள் சரியாக இல்லையோ அல்லது அவர்களுக்கு இதைப்பற்றி எல்லாம் தெரியாதோ.“

பின்பு அவளே சொல்கிறாள்

“அவர்கள் உங்களைச் சரியாகப் பார்த்துக் கொண்டால் பின்பு எங்களை யார் காப்பாற்றுவார்கள். “

வேறு நாட்டவர்களை விடவும் இந்தியர்கள் தான் பாங்காங்கிற்கு அதிகம் வருகிறார்கள். அவர்களால் தான் பாலியல் தொழில் இங்கே சிறப்பாக நடந்து வருகிறது. அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்கிறாள் ஆன்காங்க்.

குற்றமனதுள்ள விற்பனை பிரதிநிதி உல்லாசத்தை நாடவில்லை. அவன் தனது மீட்சிக்காக ஏங்குகிறான். ஆகவே அவளிடம் தான் விவசாயிகளுக்குப் பாதகம் செய்யும் கிருமிநாசினிகளை விற்று வருகிறேன் என்று பாவமன்னிப்புக் கேட்கிறான்

அதிர்ச்சி அடைந்த அவள் தனது சூட்கேஸை திறந்து சிறிய புத்த விக்கிரகத்தை எடுத்து வைத்துத் தியானம் செய்கிறாள். பின்பு சின்ன மணிகளைக் கையில் பிடித்து அசைக்கிறாள். அது அதி பயங்கர ஓசை எழுப்புவதாக அவன் உணருகிறான்.

அந்த மணியோசை நம் காதுகளிலும் விழுகிறது.

குற்றவுணர்வு கொண்ட ஒருவனும் விலைமாதுவும் புத்தனின் முன்பு மண்டியிடுகிறார்கள். உலகின் தவறுகளுக்காக அவர்கள் இருவரும் வருந்தும் அந்தக் காட்சி அபாரமானது.

கதை பேசும் சமகாலப் பிரச்சனையும் வணிகத் தந்திரங்கள் செயல்படும் விதமும் முக்கியமானது. கதை முழுவதும் புத்தனும் மணியோசையும் குறியீடாக முன் வைக்கப்படுகின்றன

கன்னடம், வங்காளம், மராத்தி என இந்தியாவின் வேறுமொழிகளில் வெளியாகும் சமகாலச் சிறுகதைகளை வாசிக்கும் போது கதைகளின் களம் அந்த மாநிலத்தைத் தாண்டி வெளியே சர்வதேச அளவில் சஞ்சரிப்பதைக் காணமுடிகிறது. அது போலவே மரபான சிறுகதைகள் போலக் கதையை நேர்கோட்டில் வளர்த்துக் கொண்டு போவதற்கு முயலவில்லை. நிறைய ஊடு இழைகளைக் கொண்டு ஒரு சிறுகதையை எழுதுகிறார்கள். கவிதையைப் போலவே கதைக்கும் மையப்படிமம் உருவாக்கப்படுகிறது. இன்றைய வாழ்க்கையின் சிக்கல்களும் கடந்த கால வாழ்வின் நினைவுகளும் அழகாகப் பின்னப்படுகின்றன. கதை சொல்லப்படும் மொழி புதிதாகயிருக்கிறது.

பத்துகதைகளிலும் குற்றவுணர்வு ஏதோ ஒரு வகையில் வெளிப்படுகிறது. குற்றவுணர்வு கொள்வது அல்லது மறுப்பது என்ற இருநிலையினையும் கதைகள் பேசுகின்றன. இன்றைய வாழ்க்கையின் முக்கியப் பிரச்சனையாக இருப்பது உறவுச்சிக்கல்களே என்பதை இந்தத் தொகுப்புக் கவனப்படுத்துகிறது.

தானே ஒரு சிறுகதையாசிரியர் என்பதால் கே.நல்லதம்பி சரியான கன்னடக் கதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழிலிருந்து கன்னடத்திற்கும் கன்னடத்திலிருந்து தமிழுக்கும் அவர் செய்து வரும் மொழியாக்கங்கள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

புத்தகத்தின் அட்டை வடிவமைப்பு மிக அழகானது. எழுத்துருவும். பௌத்த மணியும் தனித்துவமான அழகுடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சந்தோஷ் நாராயணனுக்கு எனது பாராட்டுகள்.

0Shares
0