ஹாலிவுட் இயக்குநரான மார்ட்டின் ஸ்கோர்செசி தனது எண்பதாவது வயதில் Killers of the Flower Moon என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

மூன்றரை மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தை ஆப்பிள் டிவி தயாரித்துள்ளது. ஸ்கோர்செசியை விட ஒரு வயது குறைந்த ராபர்ட் டி நீரோ இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லியோனார்டோ டிகாப்ரியோ, லில்லி கிளாட்ஸ்டோன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
நியூயார்க் பல்கலைக கழகத்தின் திரைப்பள்ளியில் 1964ஆம் வருடம் திரைக்கலை பயின்றவர் ஸ்கோர்செசி. தனது குறும்படங்களின் வழியே கவனத்தைப் பெற்று 1967ல் தனது முதற்படத்தை இயக்கினார். ஐம்பத்தாறு ஆண்டுகள் ஹாலிவுட் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிவரும் ஸ்கார்செசி இன்றும் அதே தீவிரத்துடன் தனித்துவமான பாணியில் படம் இயக்கியிருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.

ஹாலிவுட் சினிமாவில் ஒரு இயக்குநர் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிப்பது எளிதான விஷயமில்லை. அது ஒரு சந்தை வணிகர்களே அங்கே சினிமாவை நிர்ணயிக்கிறார்கள். ஆகவே கலையும் வணிகமும் இணைந்த திரைப்படத்தை உருவாக்குவது பெரும் சவாலானது. அதில் மார்ட்டின் ஸ்கோர்செசி தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். அவர் தேர்வு செய்யும் கதைகளும் அதைப் படமாக்கும் விதமும் வியப்பூட்டுகின்றன.
முதுமையில் பலரும் நினைவு அழிந்த நிலையில் செயலற்று முடங்கிவிடும் போது ஸ்கோர்செசி போன்ற கலைஞர்கள் தனது கலையாற்றலின் உச்சத்தை வெளிப்படுத்துகிறவராக இருக்கிறார்கள்

எது இவர்களை என்றும் இளமையாக வைத்திருக்கிறது. அவர்களின் உறுதியான ஈடுபாடு மற்றும் தொடர்ந்து கற்றுக்கொண்டு தன்னை மேம்படுத்தியபடியும் தனது துறையை மேம்படுத்தியபடியும் இருப்பதும் தான் இதற்கான காரணங்கள். ஸ்கோர்செசி வெறிபிடித்த சினிமா ரசிகர். அவர் பார்க்காத ஹாலிவுட் திரைப்படங்களே இல்லை என்கிறார்கள்.. மௌனப்படங்கள் வரை தேடித்தேடிப் பார்த்திருக்கிறார். திரைத்துறையில் ஏற்பட்ட அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்திருக்கிறார். நடிகர்களுடனான அவரது நட்பு மற்றும் உலகசினிமா மீது அவர் கொண்டுள்ள ஈடுபாடு நிகரில்லாதது. திரைக்கலை பயிலுகிற மாணவர்களுக்காக அவர் எடுத்த மாஸ்டர்கிளாஸ் இணையத்தில் காணக்கிடைக்கிறது. அதில் சினிமாவின் இலக்கணம் பற்றிப் பேசும் போது மௌன திரைப்பட யுகத்தில் டி.டபிள்யூ. கிரிஃபித் மற்றும் பேசும்படத்தில் ஆர்சன் வெல்ஸ் இருவருமே நமக்கான ஆசிரியர்கள் என்று சொல்கிறார். இவர்கள் புதிய காட்சிமொழியை உருவாக்கியவர்கள் என்று விவரிக்கிறார். பார்வையாளர்களுக்குச் சில உணர்வுகளைத் துல்லியமாக, தெரிவிக்க எடிட்டிங் புதிய வழியை உருவாக்கியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்

Killers of the Flower Moon படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதைக் காணும் போது இன்றைய இளம் இயக்குநர்கள் எடுக்கும் படங்களுக்குப் போட்டியாக, அதைவிட நுட்பமாக, சிறப்பாகத் தன்னால் படம் எடுக்க முடியும் என்று ஸ்கோர்செசி காட்டியிருக்கிறார்.
ஹாலிவுட் சினிமா மட்டுமின்றி உலகச் சினிமா சாதனைகளையும் ஆழ்ந்து அவதானித்து அதன் சிறப்புகளைத் தொடர்ந்து பேசியும் எழுதியும் முன்னெடுத்தும் வருபவர் ஸ்கோர்செசி. கறுப்புவெள்ளை யுகத்தின் சிறந்த படங்களை இன்றைய 4K தரத்தில் உருமாற்றி வெளியிடும் போது அந்தப் படங்களின் சிறப்புகளை ஸ்கோர்செசியே விவரிக்கிறார். அவரது சினிமா நினைவுகள் சொல்லித் தீராதவை.
தனக்குப் பிடித்தமான நடிகரான ராபர்ட் டி நீரோவுடன் எத்தனை மாறுபட்ட குற்றநாடகப் படங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது வியப்பளிக்கிறது.

Killers of the Flower Moon என்ற தலைப்பில் டேவிட் கிரானின் எழுதிய புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்திற்கான திரைக்கதையை எரிக் ரோத்துடன் இணைந்து எழுதியிருக்கிறார்.
1920களில் ஓக்லஹோமா பகுதியில் வசித்து வந்த ஓசேஜ் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது இப்படம். அந்தப் பகுதியில் எண்ணெய் வளங்கள் கண்டறியப்பட்டதால் நிலத்திற்கான உரிமத்தொகையாகக் கோடிக்கணக்கான டாலர்கள் ஓசேஜ் பழங்குடி மக்களுக்கு அளிக்கப்பட்டது. திடீரென அவர்கள் வசதியான ஆடம்பரமான வாழ்க்கையை வாழத் துவங்கினார்கள். இதனால் போட்டி பொறாமை. மற்றும் அதிகார சண்டைகள் உருவாகின. அதைத் தீர்த்து வைக்க அமெரிக்க அரசு புதிய நிர்வாகிகளை நியமித்தது. அவர்கள் ஓசேஜ் பழங்குடி மக்களைப் பாதுகாப்பதாகச் சொல்லி மோசடிகளில் ஈடுபட்டார்கள். ரகசியமான முறையில் ஓசேஜ் பழங்குடி மக்கள் கொல்லப்பட்டார்கள். யார் இவற்றைச் செய்கிறார்கள் என்று கண்டறிய ஏஜென்ட் டாம் வைட் தலைமையில் எஃப்.பி.ஐ விசாரணையில் ஈடுபட்டது பணத்தாசை காரணமாக அறுபதுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட நிகழ்வை முன்வைத்தே ஸ்கோர்செசி படத்தை உருவாக்கியுள்ளார்.
ஓசேஜ் பழங்குடி இனக் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற முகங்களைக் கண்டறிந்து நடிக்க வைத்திருக்கிறார்கள். ஓசேஜ் இனத்தின் தலைவரான ஜெஃப்ரி ஸ்டாண்டிங் பியர் படத்தின் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். அதே நிலப்பகுதியில் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
கொலை, துரோகம் மற்றும் பேராசை கொண்ட கதைகளையே ஸ்கோர்செசி தொடர்ந்து இயக்கி வந்திருக்கிறார். இந்த முறை அதில் இனவெறி, பழங்குடி மக்களின் வாழ்க்கை இணைந்து கொண்டிருக்கிறது. ஆகவே அவரது பாணி படமாகவே இப்படமும் உருவாக்கப்பட்டிருக்கும்.
புதிய தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தித் தனது கலைத்திறனை முழுமையாக வெளிப்படுத்த முடியும் என்பதை ஸ்கோர்செசி நன்றாக உணர்ந்திருக்கிறார். அவரது துடிப்பான, தொடர்ச்சியான செயல்பாடு நம்மையும் உத்வேகப்படுத்துகிறது. வயதோ தொழில்நுட்ப வளர்ச்சியோ, காலமாற்றமோ எதுவும் தீவிரமாகச் செயல்படும் கலைஞனுக்குப் பொருட்டில்லை என்பதை ஸ்கோர்செசி நிரூபித்திருக்கிறார்.
கேன்ஸ் திரைப்படவிழாவில் படம் பார்த்தவர்கள் மிக மெதுவாகப் படம் நகர்கிறது, ஆனால் அசாத்தியமான உருவாக்கம் என்கிறார்கள். ஒன்றிரண்டு எதிர்மறையான விமர்சனங்களும் வெளியாகியிருக்கின்றன. ஆனால் ஸ்கோர்செசி கேன்ஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு அளித்த பேட்டியும் அவரது எதிர்காலக் கனவுகளும் நம்மையும் தீவிரமாகச் செயல்படத் தூண்டுகின்றன என்பதே நிஜம்.