தார்பாலைவனத்தினுள் ஜெய்சால்மரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தூரத்திலுள்ளது குல்தாரா. கைவிடப்பட்ட இந்தக் கிராமத்தை ஆவிகள் வாழும் ஊர் என்கிறார்கள். எங்கும் இடிபாடுகள். ஒட்டுமொத்த ஊரும் காலியாக உள்ளது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பாக ஜெய்சால்மரின் திவான் சலீம் சிங் குல்தாராவில் வசித்து வந்த பாலிவால் பிராமணப் பெண் ஒருத்தியின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். அதற்குப் பாலிவால் பிரமாணர்கள் மறுக்கவே பெண்ணைத் தூக்கிக் கொண்டுபோய்த் திருமணம் செய்வதோடு ஊரையும் அழித்துவிடுவேன் என சலீம் சிங் மிரட்டியிருக்கிறார்.
பயந்து போன பாலிவால் பிராமணர்கள் இரவோடு இரவாக மொத்த ஊரையும் காலி செய்து போய்விட்டார்கள். ஆயிரம் பேருக்கும் மேலாக வசித்த அந்த ஊரில் ஒருவரில்லை. எங்கே போனார்கள் என்றும் சலீம்சிங்கால் கண்டுபிடிக்க முடியவில்லை. காலியான வீடுகள் காலத்தில் அழிந்து சிதைந்து நிற்கின்றன. ஒரு ஊரே காலியாக இருப்பது பெரும்வெறுமையை ஏற்படுத்துகிறது.
தற்போது குல்தாரா Archaeological Survey of India வால் பாதுகாக்கபட்டு வருகிறது. அழிந்து போன வீடுகளின் மாதிரி போலச் சிலவற்றைக் கட்டி பார்வைக்காக வைத்திருக்கிறார்கள்
உச்சிவெயிலில் பாலைவனத்தினுள் பயணம் செய்து குல்தாராவிற்குப் போய் இறங்கினேன். அனல்பறக்கும் வெளி. கண்கூசும் வெளிச்சம். காற்றேயில்லை. எங்கள் வாகனத்தைத் தவிர ஒரு ஆள் இல்லை. எங்கும் இடிந்து போன வீடுகள். உடைந்து சிதறிய கட்டைச்சுவர்கள். சுட்டெரிக்கும் சூரியன்.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள விஷ்ணு கோவில் ஒன்றுள்ளது. வருஷத்தில் ஒரு நாள் விழா நடைபெறும். அன்று பாலிவால் பிராமணர்களின் தலைமுறையினர் கலந்து கொள்கிறார்கள் என்று சொன்னார் வழிகாட்டி
கோடைகாலத்தில் பாலைவனத்தினுள் பயணம் செய்வது விசித்ரமான அனுபவம். முடிவில்லாத வெட்டவெளி. வெளிறிய வானம். மணலேறிப் போன மரங்கள். சாலைகளில் பாதி மண்மூடியிருக்கிறது. கார் செல்லும் வேகத்தில் நம் கைகளில் தலையில் மணல் பறந்துவந்து படிகிறது. தீராத தாகம் கையில் தண்ணீர் பாட்டிலை பிடித்தபடி தண்ணீர் குடித்தபடியே போய்க் கொண்டிருந்தேன்.
குல்தாரா சபிக்கபட்ட இடம். ஆகவே யாரும் குடியேறுவதில்லை என்று சொன்னார் வழிகாட்டி.
குல்தாராவை தாண்டி தொலைவில் ஆடு மேய்கிறவர்களின் உருவம் கண்ணில் பட்டது. ஆடுகள் வட்டமாக ஒன்றோடு ஒன்று முகம் உரசிக்கொண்டு அசையாமல் நின்றிருந்தன. வெயிலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள அப்படி ஒன்றுசேருகின்றன என்றார் கார் ஒட்டுனர்.
குல்தாராவின் இடிந்து போன ஒரு வீட்டினுள் சென்றேன். புழுதி பறந்தது. செங்கல் சுவர்கள் இருநூறு வருஷங்களுக்குப் பிறகு உறுதியாகவே இருந்தன. தாழ்வான வீடுகள். வெயிலுக்குப் பயந்து பூமிக்கு அடியில் வசிப்பதற்காக அறைகள் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் மிக அதிகமான குளிர் இருக்கும் என்றார்கள்
தூர்ந்து போன கிணறு ஒன்றையும் கண்டேன்.
காலியான ஊரைக் காணும் போது ஏனோ நம்மை அறியாமல் வேதனை கவ்வி கொள்கிறது.
சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு இங்கே யாரும் அனுமதிக்கபடமாட்டார்கள். ஆவிகள் மட்டுமே உலவி கொண்டிருக்கும் என்றார் கார் ஒட்டுனர்.
மனிதர்கள் கைவிட்ட ஊரை கதைகள் கைப்பற்றியிருக்கின்றன எனச் சிரித்துக் கொண்டேன்
திரும்பி வரும் போது பாலையின் ஒரு இடத்தில் ஆள் உயரத்திற்குச் சுழி போலக் காற்று சுழன்று மணல் சுற்றுவதைக் கண்டேன். பார்த்துக் கொண்டிருக்கும் போதே மணற்காற்று நகர்ந்து எங்கள் வாகனத்தை நோக்கி வந்தது. கைகளால் முகத்தை மூடிக் கொண்டேன். கைவிரல்கள். காது, உதடு, தலை எல்லாம் மணல்.துடைத்தும் போகவில்லை
ஒரு வளைவில் காரிலிருந்து திரும்பிப் பார்த்தேன்
தொலைவில் குல்தாரா வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
••