குளிர்காலப் புத்தகங்கள்


குளிர்காலம் புத்தகம்படிப்பதற்கு மிகவும் உகந்த காலம். வேறு எப்போதையும் விட கையிலிருந்த புத்தகம் குளிர்ந்த இரவுகளில் நம்மோடு மிக நெருக்கமாகவிடுகிறது.வார்த்தைகள் தரும் வெம்மை அலாதியானது. சொற்கள் மிக நெருக்கமாக தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் நட்புடன் நம்மோடு பேசுகின்றன.மூடிய ஜன்னலின் வெளியே குளிர்காற்று அலைந்து கொண்டிருக்கிறது. புத்தகங்கள் குளிர்காலத்தில் துளிர்க்க துவங்குகின்றன. அதன் பசுமையும் அலைவும் மிக வசீகரமாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாசிப்பதற்கு போதுமான வெளிச்சத்தில் படிப்பது அலாதியான அனுபவம். எப்போதும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதற்கான காலத்திற்காக காத்திருக்கின்றன . அதை மற்ற நாட்களில் கையில் தொட வேண்டும் என்று கூட தோன்றாது. ஆனால் குளிர்காலத்திற்கு என்று அந்த புத்தகங்ள் காப்பாற்றி வைக்பட்டவை என்று பின்னால் தான் புரிகிறது.


நான் குளிர்காலங்களில் அதிகம் புனைகதைகள், சுயவரலாற்று புத்தகங்கள், காண்கலைகள் பற்றிய புத்தகங்களை வாசிக்கின்றவன். அதிலும் ஒரு நூற்றாண்டிற்கு முந்திய புத்தகங்கள் என்றால் வாசிப்பு கூடுதல் வேகம் கொண்டுவிடுகிறது. 


இதமான வெந்நீர் உடலுக்குள் செல்வதை போல சொற்கள் உடலுக்குள் கரைந்து போகின்றன. புத்தகங்கள் குளிர்காலத்தில் தன்னை முழுமையாக கிளைவிரித்து கொள்கிறது. டிசம்பர் பலருக்கும் இசை கேட்பதற்கான மாதம். வருசம் முழுவதும் அவர்கள் இசையில் விருப்பம் கொண்டிருந்த போதும் மார்கழி இசைக்கென சிறப்பான மாதமாக கருதப்படுவது போல நான் புத்தக வாசிப்பை வருசம் முழுவதும் செய்து வந்த போதும் டிசம்பர் ஜனவரி ஆகிய இரண்டு மாதங்கள் தொடர்வாசிப்பு புதிய புத்தகங்கள் இலக்கிய கூட்டங்கள் உரையாடல்கள் என்று மனது அதிக உற்சாகம் கொண்டுவிடுகிறது.


புத்தகங்களை சில நேரம் பார்த்தபடியே இருப்பேன். ஒரு சிற்பத்தை காண்பது போல அதை பார்க்க பார்க்க மனதில் ஏதேதோ தோன்றிக் கொண்டேயிருக்கும். புத்தகம் ஒரு விந்தை என்று ஒவ்வொரு முறையும் தோன்றுகிறது. காகிதம் புரளும் ஒசை கடலோசையை விட மனதிற்கு அதிகம் பிடித்திருக்கிறது.


சில வேளைகளில் புத்தகங்கள் அணைக்கும் கைகள் போலிருக்கின்றன. அது என்னை அரவணைத்து கொள்கிறது. ஆறுதல் தருகிறது. சில தருணங்களில் புத்தகம் சூறைக்காற்றை போலிருக்கிறது. அதன் முன்னே இருப்பு உறுதியற்று பறக்கிறது. சூறைக்காற்றின் விசை எதையும் தூக்கி எறிவது போல என்னில் இருந்த கசடுகளை புத்தகம் தூக்கி எறிகிறது. சில நேரம் உறைந்த பனி போல அது குளிர்ச்சியும் வசீகரமுமாக இதமாக்குகிறது. அதுவன்றி சிலவேளை நிலநடுக்கமாகவோ, ரணசிகிட்சை போலவே அமைந்தும் விடுகிறது.


பூனை தன்குட்டியை கவ்விக் கொண்டு போவது போல புத்தகம் நம்மை கவ்விக் கொண்டு போகிறது.அதன்பற்கள் நம்மீது படுவதில்லை. ஆனால்  செல்லும் வழியெங்கும் கூடவே போகிறோம். புத்தகம் இல்லாத அறையை, வீட்டினை என்னால் கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை.


எனது குளிர்கால வாசித்தலில் முக்கியமானதாக கருதும் சில புத்தகங்களை  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


***


கண்களால் காண்பதும் பொய்யே.


Ways of Seeing – John Berger   176 pages   Penguin  1990.இங்கிலாந்தை சேர்ந்த ஜான் பெர்ஜர் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர். நவீன ஒவியர், மற்றும் கலை விமர்சகர். இவரது ஜி என்ற நாவல் மிகவும் புகழ்பெற்றது. 1972ம் வருடம் பிபிசி தொலைக்காட்சி இவர் ஐரோப்பிய ஒவியங்களை முன்வைத்து நோக்குதல் என்ற கண்ணின் செயல்பாட்டினையும் அதன் பின்னே ஒளிந்திருக்கும் பிரச்சனைகள், தடைகள், விலக்கங்களையும் சுட்டிக்காட்டு விரிவாக நான்கு பகுதி கொண்ட தொடர் ஒன்றினை தயாரித்து அளித்தார். அந்த தொடர் மிகுந்த வரவேற்பு பெற்றது அந்ததொடரின் வெற்றியும் அதை தொடர்ந்த சர்ச்சைகளும் பார்த்தல் என்ற நிகழ்வின் மீதான கவனத்தையும் அரசியலையும் தீவிரமாக்கியது.ஜான் பெர்ஜர் தனது தொலைக்காட்சித்தொடருக்காக மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் தொடரில் இடம் பெற்ற விஷயங்களை ஒன்றிணைத்து இந்த நூலை உருவாக்கினார். வெளியான காலம் முதல் இன்று வரை இது பல்வேறு கலைப்பள்ளிகளில் பாடமாக நடத்தபட்டு வருவதுடன் ஒவியங்கள் சிற்பங்கள் போன்ற நுண்கலைகளை புரிந்து கொள்வது எப்படி என்பதற்கு முன்மாதிரியான நூலாகவும் உள்ளது.


ஒவியம் சிற்பம் போன்ற துறைகளில் ஆர்வமற்றவர்களுக்கும் கூட இது முக்கியமானது.காரணம் இது பார்த்தல் என்ற நிகழ்வின் பின்உள்ள சிக்கல்களை பேசுகிறது. குறிப்பாக கண்கள் பார்ப்பது யாவும் உண்மைதான் என்று நம்புவது ஆபத்தானது என்று சுட்டிக்காட்டுகிறது. காரணம் நமது பார்த்தல என்ற செயல்பாடு பழக்கம் காரணமாகவும், அர்த்த்தை உருவாக்கி கொள்வதற்காகவுமே முக்கியமாக பயன்படுகிறது. கலச்சார சமூக பொருளாதார கட்டுபாடுகள், தடைகள் நம் பார்வையை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு கலச்சாரமும் எதை பார்க்க வேண்டும், எப்படி பார்க்க வேண்டும், எதை பார்க்க கூடாது என்பதற்கான கறாரான விதிகளை கொண்டிருக்கிறது. அதை மீறுவது அவமதிப்பாகவும் அகம்பாகவுமாகவும் எடுத்துக் கொள்ளபடுவதுடன் தண்டிக்கபடவும் நேரிடுகிறது என்கிறார் பெர்ஜர்.


ஜப்பானில் ஒருவருடன் உரையாடும் போது அவரது முகத்தை பார்த்தபடியே பேசக்கூடாது. தோள்களை பார்த்தபடி தான் பேச வேண்டும், அது போலவே கென்யாவில் ஒருவன் தன் மாமியாரை நிமிர்ந்து பார்க்கவே கூடாது. நைஜீரியாவிலோ உயர் அதிகாரிகளை எளிய மக்கள் தலைகுனிந்து மட்டுமே பார்க்க வேண்டும், மெக்சிகோ பழங்குடியிடம் நோயாளியின் கண்களை உற்று பார்த்துவிட்டால் நாமும் நோயாளி ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கையிருக்கிறது.


இப்படி புராதன நம்பிக்கைகள், பயங்கள் , தடை விலக்கம் போன்றவை நாம் எப்படி பார்க்க வேண்டும். ஏன் அப்படி பார்க்க வேண்டும் என்று கற்றுதருகின்றன. ஆகவே நாம் ஒரு காட்சியை காணும் போது அதன்பின்னே நமது கலாச்சாரம் சமூககட்டுபாடுகள், மதம் மற்றும் தொல்சடங்குகளின் நம்பிக்கைகள் ஒளிந்து வெளிப்படுகின்றன. அதன் நீட்சியாகவே நாம் நுண்கலைகளை பார்த்து ரசிப்பதையும் செய்கிறோம். மிகைப்படுத்தபட்ட அலங்காரம் நமக்கு விருப்பமான காட்சியாக விருப்பமானதாக இருப்பதற்கு இதுவே காரணம்.


கண்கள் ஒரு பொருளை உற்று நோக்குதல் மட்டும் செய்வதில்லை. மாறாக அதிலிருந்து ஒரு அர்த்தத்தை உற்பத்தி செய்கிறது. அந்த அர்த்தம் கலச்சாரசூழல் மற்றும் சமூகஅரசியல் காரணம் சார்ந்தே புரிந்துகொள்ளப்படுகிறது. நாம் கண்களின் வழியாக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கிறோம். சற்று உன்னிப்பாக கவனிக்கும் போது அதன் உள் அர்த்தம் நமக்கு புரிய கூடும்


உதாரணத்திற்கு நம்மிடையே பார்வை என்ற செயல்பாடு சார்ந்து சில சொற்கள் இருக்கின்றன. உற்று நோக்குதல், ஒரம் பார்த்தல், வஞ்சகபார்வை, கண்காணித்தல், கள்ளபார்வை, வெகுளிபார்வை, அரைக்கண் பார்வை, பார்வை மயக்கம், காட்சிபிழை, தோற்றமயக்கம், கானல்காட்சி, இவை அத்தனையும் பார்த்தல் என்ற பொதுôன நிகழ்வினை குறிப்பதாக இருந்தாலும் ஒவ்வொரு செயல்பாடும் வேறுவகையான அர்த்தங்களை கொண்டது இல்லையா. இதை தான் பெர்ஜர் முக்கியமாக சுட்டிக்காட்டுகிறார். அசிங்கம், அழகு, அருவருப்பு, போன்றவற்றிற்கு உள்ளார்ந்த காரணங்கள் இருக்கின்றன. அதை ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக வரையறை செய்திருக்கிறது.


பெர்ஜர் கேமிரா கண்டுபிடிக்கபட்டதும் பார்த்தல் என்ற நிகழ்வு முற்றாக வேறு அர்த்தம் கொண்டுவிட்டது என்கிறார். அதுவரை ஒரு காட்சியை அந்த இடத்தில் உள்ள மனிதன் மட்டுமே காணமுடியும். நகலெடுப்பது சாத்தியமேயில்லை. அது தான் மனித கண்களின் இயல்பு. ஆனால் கேமிரா என்ற கருவி வந்தவுடன் அது ஒரு காட்சியை உலகெங்கும் மிதக்க செய்தது. மனிதர்கள் வெவ்வேறு நகரங்களை, மனிதர்களை காட்சிகளை நேரடியாக காணதபோதும் புகைப்படங்களின் வழியே பார்த்தார்கள். இதனால் அசலை விடவும் நகல்கள் முக்கியமானதாக கருதப்பட்டது. நகலில் இருந்து உருவான அனுபவங்கள் அசலில் இருந்து உருவானதை விடவும் பெரியதாக முன்வைக்கபட்டது. கேமிராவின் வருகையால் அதிகம் செல்வாக்கு இழந்தது ஒவியங்களே என்கிறார்


இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரு ஒவியத்தை காண விரும்புகின்றவர் அந்த ஒவியம் எந்த காட்சியகத்தில் இருக்கிறதோ அங்குசென்று காத்திருந்து அதை நேரடியாக காண்பது மட்டுமே சாத்தியம். இன்று அந்த ஒவியம் நகல்பிரதியாக அச்சிடப்பட்டு உலகெங்கும் உள்ளது. அத்துடன் ஒவியத்தின் ஒவ்வொரு சிறுபகுதியும் பெரிதுபடுத்தபட்டு தனி ஒவியம் போல காட்சிக்கு வைக்கபடுகிறது. ஆக அசல் ஒவியத்தை விட நகல் ஒவியங்கள் அதிகம் காணப்படுவதுடன் அசலை நேரடியாக காண வேண்டும் என்ற ஆவலையும் போக்கிவிடுகின்றன.


ஜான் பெர்ஜரின் நூலில் ஏழு கட்டுரைகள் இருக்கின்றன. இந்த கட்டுரைகளில் முதல்நான்கு காட்சிக்கும் சொற்களுக்குமான தொடர்பை ஆழமாக ஆராய்கின்றன. அடுத்த மூன்று கட்டுரைகள் காட்சி எப்படி ஒரு அதீத உணர்ச்சிவெளிப்பாட்டினை, நுகர்வு கலாச்சாரத்தை முன்வைக்கிறது என்று ஆராய்கிறது


மற்ற கலைவடிவங்கள் எதையும் விட ஒவியம் நிர்வாணத்தை தன்னுடைய முக்கிய கச்சாபொருளாக கொண்டிருக்கிறது. நிர்வாணமான பெண் உடலை வரைவது ஒவியமரபின் ஒரு அங்கமாக பலநூற்றாண்டுகாலமாக தொடர்கிறது. பைபளில் ஏவாளும் ஆதாமும் ஆப்பிளை சாப்பிட்ட மறுநிமிசம் தாங்கள் நிர்வாணமாக இருப்பதாக உணர்கிறார்கள். உடனே ஒரு இலையை கொண்டு தங்கள் ஜனன உறுப்புகளை மறைத்துக் கொள்கிறார்கள்.கடவுள் அவர்களை அழைக்கும் போது இலைமறைவில் ஒளிந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நிகழ்வை குறிக்கும் ஒவியங்கள் ஐரோப்பாவெங்கும் காணப்படுகின்றன.


ஆரம்ப காலங்களில் இந்த ஒவியத்தில் இருந்த ஆதாமும் ஏவாளும் குற்றவுணர்ச்சியின் அடையாளம் போலவே அந்த இலைகளை மறைத்துக் கொண்டு நின்றபடியே உள்ள ஒவியங்கள் வரையப்பட்டன. ஆனால் பதினேழாம் நூற்றாண்டின் பிறகு வரையப்பட்ட இதே கருப்பொருள் உள்ள ஒவியங்களில் ஆதாமின் முகபாவம் வேறாகவும் ஏவாளின் உணர்ச்சிவெளிப்பாடு வேறாகவும் உள்ளது. ஏவாள் தன் உடல் அழகை காட்டிக் கொள்வதில் குற்றவுணர்ச்சி அற்றவளாக தன்னை தானே பார்த்து கொள்வது போல வரையப்பட்டிருக்கிறது என்று பெர்ஜர் சுட்டிகாட்டுகிறார்


நிர்வாணம் எப்போது சொல்லாக கருத்தியலாக மாறியதோ அன்றிலிருந்தே அதற்கான தடையும் விலக்கமும் உருவாக்கபட்டுவிட்டது. ஒவியங்களில் உள்ள நிர்வாணம் என்பதும் ஆடைகளற்று இருப்பது வேறுவேறானது.
ஆடைகள் அற்றிருப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த நிகழ்வு. ஆனால் நிர்வாணமாக இருப்பதாக அறிவது அந்த ஆளுக்கு தெரியாமல் மற்றவர் காண்பதை சுட்டுகிறது. ஆடைகள் அற்றநிலையை அவருக்கு தெரியாமல் யாரோ ஒருவர் பார்த்து கொண்டிருப்பதையே நிர்வாணம் என்ற  சொல் குறிக்கிறது. ஒவியங்களில் உள்ள நிர்வாணம் என்பது அது போன்ற ஒன்றே.


அந்த வெளியாள் பெரும்பாலும் ஆண். அவனது பார்வையின் வழியே தான் நிர்வாணம் பெரிதும் காட்சிக்கு உட்படுத்தபட்டிருக்கிறது. பெண் உடலை போகத்திற்கான ஒன்றாகவே ஆண் கருதுகிறான். அதனால் தான் நிறமும் வாளிப்பும் நிலைகளும் அவனுக்கு தொடர்ந்து காம இச்சைகளை தூண்டுவதாக இருந்திருக்கிறது. அதை தான் ஐரோப்பிய நிர்வாண ஒவியங்கள் தொடர்ந்து பிரதிபலித்திருக்கின்றன.


உதாரணத்திற்கு Guercino யின் Susanna and the Elders, ஒவியத்தில் அவளது நிர்வாணம் மற்றவரால் எட்டிபார்க்கபடும் நிர்வாணமே ஆகும். அவளது கண்கள் தன்னை யாரோ அறியாமல் பார்ப்பதை உணர்ந்தது போல திரும்பியிருக்கின்றன. அதே சூசனாவை ஆர்திமீசியா வரையும் போது அதில் வெளிப்படும் நிர்வாணமும், உணர்ச்சிவெளிப்பாடும் முற்றிலும் மாறுபட்டது. அதற்கு காரணம் ஆர்திமீசியாவின் சூசனா பெண்ணியவழியப்பட்ட சிந்தனையில் இருந்து உருவாக்கபட்டவள்முற்றிலும் ஆண்வயப்பட்ட பார்வையுடைய சமூகம் மற்றும் அன்றிருந்த ஒவியமரபு பெண்உடலை நிர்வாணமாக காட்டுவதற்கான தெளிவான உத்திகளை உருவாக்கி வைத்திருந்தது. அதை தான் நாம் இன்று ஐரோப்பிய கலைமரபு என்று கொண்டாடுகிறோம். உண்மையில் அந்த கலைமரபின் பெண் வழியான பார்வையை முற்றிலும்ஒடுக்கியதே ஆகும். மறுமலர்ச்சிகால ஒவியங்களில் பெண் நிர்வாணமாக உள்ள ஒவியங்களில் அவளது கையில் ஒரு கண்ணாடி இருக்கும்படியாக அமைக்கபட்டது. அது அவள் இப்போது தன் அழகை தான் ரசித்து கொள்வதோடு மற்றவர் பார்க்கவும் அனுமதிக்கிறாள் என்பதையே அது காட்டுகிறது. கண்ணாடி என்பது மற்றொரு இருத்தல் போன்றது. அதை நவீன ஒவியமரபே சரியாக அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.


நான்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை பிரபுகள் இதுவரை நிர்வாண ஒவியம் வரைந்து தரவேண்டும் என்று ஒவியர்களை பணம் கொடுத்து பணித்தனர். ஒவியர்களின் மாடலாக பிரபுவின் மனைவியே நிர்வாணமாக காட்சியளித்தாள். தன் மனைவியின் உடலை மற்றவர் போல வெளியே இருந்து பார்க்க வேண்டும் என்ற ரசனை பலரிடமும் அன்றிருந்தது.அத்துடன் தனது வீட்டிற்கு வரும் விருந்தினர் பலரும் தன் மனைவியின் உடலை நிர்வாணமாக பார்ப்பதன் வழியே கிளர்ச்சி கொள்ளட்டும் என்ற புத்தியும் பலபிரபுக்களிடம் இருந்தது.


அது போன்ற தைலஒவியங்களை காணும்போது ஒரு பெண் நிர்வாணத்தை அதை வரையும் ஒவியன் காண்கிறான். அவன் அந்த பெண்ணின் சாடைகளை சற்று உருமாற்றி அதே நிர்வாணத்தை பிரபு காணும்படியாக செய்கிறான். பின்பு அது கலைப்படைப்பாகி ரசனைக்கு உரியதாக மாறிவிடுகிறது. இந்த தொடர்ச்சியில் தன்னை மற்றவர்கள் தன்விருப்பம் இல்லாமலே தொடர்ந்து நிர்வாணமாக ரசிக்கிறார்கள் என்ற பெண்ணின் தவிப்பு கண்டுகொள்ளபடுவதேயில்லை என்று பெர்ஜர் தெளிவாக விவரிக்கிறார்.


இன்று வரை விளம்பரங்கள் மற்றும் காட்சிகலைகள் யாவிலும் பெண் உடல் கொள்ளும் முக்கியத்துவத்திற்கும் பார்வை குறித்த நமது மரபான கட்டுபெட்டியான கருத்துகளுக்கும் நிறைய தொடர்பகள் இருப்பதை பெர்ஜரின் பூத்தகம் மிக சிறப்பாக வெளிப்படுத்துகிறது.


பெர்ஜரை ஒரு இடதுசாரி கண்ணோட்டம் உள்ள கலைவிமர்சகர் என்று இந்த புத்தகத்திற்காக விமர்சனம் செய்தபோதும் அவர் சுட்டுகாட்டும் சமூக உண்மைகள் ஒவியங்களின் பின்னால் புதைந்திருக்கின்றன என்பதே உண்மை. அத்துடன் காட்சிகலையை ஆழமாக புரிந்து கொள்வதற்கு தேவையான அடிப்படையை பெர்ஜரே திறந்துவிடுகிறார்


அவர் ஆண்கள் பெண்களை நேரடியாக எந்த மறைவும் ஒளிவும் அற்று பார்க்கிறார்கள்.ரசிக்கிறார்கள். ஆனால் அப்படி பெண் ஆணை காண்பதற்கு சமூகம் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. ஆகவே பார்வை என்ற செயல்பாட்டில் ஆண் பெண் என்ற பேதம் அடிப்படையாக இருக்கும்வரை கலைப்படைப்புகளை அறிவதிலும் நுகர்வதிலும் இந்த பேதம் தொடரவே செய்யும் என்கிறார்.
பெர்ஜரின் இந்த புத்தகம் கலைவிமர்சனம் மட்டுமில்லை. மாறாக இது ஒரு விஞ்ஞானப்பூர்வமாக கலையை அணுகும் முறை. ஒரு சமூகவியல் சிந்தனையுடன் கூடிய கலை ஆய்வு. இன்னும் சொல்வதாயின் ஆழ்ந்த கலை ரசனையின் உயர்வெளிப்பாடு என்றும் சொல்லலாம்.


**


 

0Shares
0