குள்ளனும் டாவின்சியும்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பர்லாகர் க்விஸ்டின் குள்ளன் நாவலை தி.ஜானகிராமன் மொழியாக்கம் செய்திருக்கிறார். சிறப்பான மொழியாக்கம். நாவலின் கவித்துவமான வர்ணனைகள் மற்றும் தத்துவ எண்ணங்களை நேர்த்தியாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

The Dwarf நாவல் 1944ல் ஸ்வீடிஷ் மொழியில் வெளியானது. 1945ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.  1986 அக்டோபரில் சமுதாயம் பதிப்பகம் குள்ளன் நாவலை வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலில் ஓவியர் லியோனார்டோ டாவின்சி முக்கியக் கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளார். மிலன் பிரபுவான லுடோவிகோ ஸ்ஃபோர்சாவின் அழைப்பில் டாவின்சி மேற்கொண்ட கலைப்பணிகளையே நாவல் விவரிக்கிறது.

நாவலில் டாவின்சி கதாபாத்திரத்தின் பெயர் பெர்னார்டோ. இளவரசன் லியோனின் நண்பராகவும் ஆலோசகராகவும், குருவாகவும் சித்தரிக்கப்படுகிறார். டாவின்சியின் தோற்றம் , அறிவியலில் அவருக்குள்ள ஈடுபாடு, உடற்கூறியல் பற்றிய அவரது ஆய்வுகள். புதிய ஆயுதங்களை உருவாக்க முயன்ற நிகழ்வுகள், பிரான்ஸிஸ்கன் மடத்தின் சுவரில் டாவின்சி வரைந்த ஓவியம் போன்றவற்றைப் பர்லாகர் க்விஸ்ட் தனது நாவலில் குறிப்பிடுகிறார்

குள்ளன் எழுதிய நாட்குறிப்பு போலவே நாவல் விவரிக்கப்படுகிறது. ஒருவகையில் இது அவனது சுயசரிதை. . அவன் இளவரசன் லியோனின் விளையாட்டுத் துணையைப் போல அரண்மனையில் வசிக்கிறான். இளவரசன் போலவே உடை அணிந்திருக்கிறான்.

இரண்டரை அடி உயரம். நல்ல உடற்கட்டு. தைரியசாலி. குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவன். மற்ற குள்ளர்களைப் போல அவன் கோமாளியாக இருக்க விரும்பவில்லை. அப்படி யாராவது தன்னை நடத்த முயன்றால் கோவித்துக் கொள்கிறான். தன்னை ஒரு போர்வீரனாகக் கருதும் குள்ளன் இளவரசனுடன் போர்களத்திற்குச் செல்கிறான். சண்டையிடுகிறான். தன்னை போன்ற ஒரு குள்ளனைக் கொல்கிறான். குற்றவுணர்வே இல்லாமல் நடந்து கொள்கிறான்.

உருவத்தால் சிறியவராக இருப்பதால் தங்களைக் குழந்தைகளோடு விளையாடச் சொல்கிறார்கள். தனக்குக் குழந்தைகளைப் பிடிக்கவே பிடிக்காது என்கிறான் குள்ளன்.

அவமானத்தாலும் சிறுமைகளாலும் நிரம்பிய அவனது வாழ்க்கையை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் தனது இழிவான வாழ்வை வெறுக்கிறான். தன்னை அரவணைத்துக் காத்து வரும் இளவரசனையும் வெறுக்கிறான்.

யாவரையும் விட இளவரசியை அதிகம் வெறுக்கிறான். அதற்கு முக்கியக் காரணம். அவளது கள்ளக்காதல். மிகு காமம். அன்றாடம் அவள் தரும் காதற் கடிதங்களைக் கொண்டு செல்லும் பணி அவனுடையது. இந்த இழிந்த காரியத்தில் தன்னை ஏன் ஈடுபடுத்துகிறாள் என்ற கோபம் அவனுக்குள்ளிருக்கிறது. ஒருவேளை மன்னரால் கண்டுபிடிக்கபட்டால் தண்டிக்கப்படுவோமே என்ற பயமும் அவனிடம் இருக்கிறது. ஆனால் இளவரசியைப் போலவே அவனும் பாசாங்க நடந்து கொள்கிறான் 

இளவரசிக்கு எப்படி இத்தனை காதலர்கள். அவள் ஏன் இப்படி சரசமாடுகிறாள்  அதை ஏன் இளவரசன் கண்டு கொள்வதேயில்லை என்று மனதிற்குள் ஆத்திரமடைகிறான்.

குள்ளனை ஒரு விளையாட்டுப் பொம்மை போலவே இளவரசி நடத்துகிறாள். தனது அந்தரங்கம் யாவையும் பகிர்ந்து கொள்கிறாள். அவன் முன்னே ஆடைகள் நெகிழ நடக்கிறாள். படுக்கையில் ஆடையில்லாமல் கிடக்கிறாள். அது குள்ளனை எரிச்சல் படுத்துகிறது. தன்னை அவள் மனிதனாகவே நினைக்கவில்லை என்று உணருகிறான்.

குள்ளனுக்கு அவனைப் போலவே குள்ளமான ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைக்க இளவரசி முயலுகிறாள். அதை அவனால் ஏற்க முடியவில்லை. அவனது கூற்றுப்படி, குள்ளர்கள் மலட்டுத்தன்மை கொண்டவர்கள். எனவே இனப்பெருக்கம் சாத்தியமற்றது ஆகவே அவர்களுக்குக் காதல் தேவையற்றது.

அரண்மனையின் போலித்தனங்களையும் அபத்தமான நடவடிக்கைகளையும் காணும் குள்ளன்  தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்ல விரும்புகிறான். சந்தர்ப்பம் கிடைக்கும் போது தனது கோபத்தை வெளிப்படுத்துகிறான்.

குள்ளர்களுக்கு அவன் ஞானஸ்நானம் செய்து வைக்கும் போது பித்தேறியவன் போல நடந்து கொள்கிறான். விருந்தினர்கள் பயந்து போகிறார்கள். அந்தக் காட்சி லூயி புனுவலின் திரைப்படம் காணுவது போன்ற அனுபவத்தை தருகிறது.

தவறான நடத்தை காரணமாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அப்போது அவனது கையில் மாட்டுவதற்கு ஏற்றார் போல விலங்கு இல்லை என்று தெரிய வருகிறது. இளவரசன் அவனுக்காக புதிய விலங்கு ஒன்றைச் செய்யச் சொல்கிறான். அது பின்னாளில் உபயோகமாகிறது.

மனித மனதின் விசித்திரங்களை குள்ளன் நன்றாக அறிந்திருக்கிறான். குறிப்பாக ஒருவரின் தீய எண்ணங்களைப் பார்வையிலே உணர்ந்துவிடுகிறான். இது அவனுக்குப் பலநேரம் நன்மையாகவும் சில நேரம் தீமையாகவும் முடிகிறது.

அவனால் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரே மனிதர் ஞானியைப் போலிருந்த பெர்னார்டோ. அவர் ஓவியம் வரைகிறார். இறந்த உடலை ஆராய்ச்சி செய்கிறார். புதிய போர் கருவிகளை உருவாக்குகிறார். அவரும் இளவரசரும் பேசிக் கொள்வதைக் கேட்கும் போது குள்ளனுக்கு வியப்பாக இருக்கிறது.

இளவரசன் ஒரு மாணவன் போலப் பணிவாக நடந்து கொள்வதையும் பெர்னார்டோ உலகிலுள்ள சகல விஷயங்கள் குறித்தும் ஞானம் கொண்டிருப்பதையும் கண்டு குள்ளன் ஆச்சரியப்படுகிறான்.

ஒரு நாள் குள்ளனைத் தனது அறைக்கு வரவழைத்து அவனது உடைகளைக் களையச் சொல்லி படம் வரைகிறார் பெர்னார்டோ. குள்ளன் அதனை அத்துமீறிய செயலாக் கருதுகிறான். செத்த உடலை ஆராய்ச்சி செய்வது போலத் தன்னையும் அவர் ஆராய்ச்சி செய்வதாகக் கருதுவதாக நினைக்கிறான். தனது எதிர்ப்பை காட்ட உதைக்கிறான். ஆனால் பலவந்தமாக அவனது உடைகளைக் களைந்து அவனை ஓவியம் வரைகிறார்.

குள்ளனை வைத்தே தனது எதிரிகளுக்கு விஷம் கொடுக்கிறான் இளவரசன். அந்தப் பணியை விருப்பத்துடன் குள்ளன் மேற்கொள்கிறான். பழிவாங்குவதற்குத் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பம் என்றே நினைக்கிறான்.

டான் ரிக்கார்டோவின் மரணத்தின் விளைவாக இளவரசி மன உளைச்சலுக்கு ஆளாகிறாள். குள்ளனின் முன்பாக இளவரசி மண்டியிட்டு பாவமன்னிப்பு கேட்கிறாள். அவளது பாவங்களை மன்னிக்க முடியாது என்று குள்ளன் கூச்சலிடுகிறான். இளவரசி கண்ணீர் விட்டு தனது மனத்துயரை வடித்துக் கொள்கிறாள்.

குள்ளனால் எவரிடத்தும் அன்பு காட்ட முடியவில்லை. துரோகமும் போலித்தனமும் கொண்ட அரண்மனை வாழ்க்கையை அவன் வெறுக்கிறான்.

குள்ளனுக்கும் இளவரசிக்கும் இடையேயான உறவு தெளிவற்றது, அவள் மீது பொறாமை கொண்டிருக்கிறான். தன்னிடம் அவள் மன்றாடும் தருணத்தில் குள்ளன் மகிழ்ச்சி அடைகிறான். அந்த நிமிஷத்தில் அவன் தன்னைக் கடவுளைப் போல உணருகிறான்.

எந்த இளவரசரும் குள்ளன் இல்லாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு விளையாட்டு பொம்மைகளை விடவும் அவனைப் போன்ற மனிதர்களே தேவை என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறான்.

இளவரசர் லியோன் புத்திசாலி. அரசியலில் சாதுரியமாகக் காய் நகர்த்தத் தெரிந்தவன். மக்களின் மதிப்பைப் பெற எதையும் செய்பவன்.  இளவரசியைப் போலவே அவனும் கள்ளக்காதலில் திளைக்கிறான். அவன் காதலியோடு துயிலும் அறையைத் தேடிச் சென்று குள்ளன் ரகசியத் தகவலைச் சொல்லும் பகுதி நாவலில் முக்கியமானது.

குள்ளன் நாவலில் பெர்னார்டோ ஒரு மேதையாகச் சித்தரிக்கப்படுகிறார். அவர் நன்மை தீமை என இரண்டிற்கும் பங்களிக்கிறார். விஞ்ஞானமும் கலையும் பெர்னார்டோவால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்றன

பர்லாகர் க்விஸ்ட் ஓவியம் வரையக் கூடியவர். ஆகவே இத்தாலிய மறுமலர்ச்சி கால வரலாற்றை தொட்டுச் செல்லும் தனது நாவலில் டாவின்சியை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறார். அறிவும் போதமும் குமிழிடும் தெளிந்த ஊற்றின் முன் அமர்ந்திருப்பது போல இளவரசன் நடந்து கொள்வதாக நாவலில் எழுதியிருக்கிறார். இது டாவின்சியைப் பற்றிய சரியான மதிப்பீடு

தங்கள் எதிரியான ஜியோவானி ஏஞ்சலிகாவுடன் உறங்குவதைக் குள்ளனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை நள்ளிரவில் இளவரசரைனை தேடிச் சென்று அவனே வெளிப்படுத்துகிறான். அந்த வகையில் ஏஞ்சலிகாவின் தற்கொலைக்குக் குள்ளனே காரணமாக இருக்கிறான்.

தனது எந்த செயலையும் அவன் குற்றமாக நினைக்கவில்லை. அவற்றை விரும்பியே செய்கிறான். தண்டனையை ஏற்றுக் கொள்கிறான். தீமையின் மலரைக் கையில் ஏந்தியபடி நிற்கும் குள்ளன் கதாபாத்திரம் தனித்துவமானது.

மறுமலர்ச்சி கால இத்தாலியைப் பற்றிய இந்த நாவல் இன்று வாசிக்கப்படும் போது சமகாலத்தின் அரசியல் நிகழ்வுகளை. போருக்கான காரணங்களை, தனிமனித வீழ்ச்சியைப் பேசுவதாகவே உணர முடிகிறது.

குள்ளர்களுக்குத் தாய்நாடு, பெற்றோர் என்று ஒன்றும் கிடையாது“ என்று நாவலின் ஒரு இடத்தில் குள்ளன் சொல்கிறான். அவனை இருபது பணத்திற்கு விற்றுவிட்டாள் அவனது அம்மா. அந்தப் பணத்தில் மூன்று முழத்துண்டும், ஆட்டு மந்தைக்கு ஒரு காவல் நாயும் வாங்கிக் கொண்டாள். இவ்வளவு தான் அவனது மதிப்பு.

நட்சத்திரங்கள் தங்கள் சொந்த இருள் வழியே போய்க்கொண்டேயிருக்கின்றன“ என்று நாவலில் ஒரு வரி வருகிறது. அது தான் குள்ளனின் வாழ்க்கை.

பர்லாகர் க்விஸ்டிற்கு 19 51ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அவரது வீட்டு வாசலில் நூற்றுக்கணக்கான பத்திரிக்கையாளர்கள் திரண்டிருந்தார்கள். எவரையும் சந்திக்க மறுத்துவிட்ட பர்லாகர் க்விஸ்ட் தனது எழுத்தில் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டேன். அதைத்தாண்டி பத்திரிக்கையாளர்களிடம் சொல்வதற்கு எதுவுமில்லை என்று அறிவித்தார்.

கடைசிவரை அவர் பத்திரிக்கை பேட்டிகள் எதையும் தரவில்லை. தனது சொந்தவாழ்க்கை பற்றிய எதையும் பத்திரிக்கைகளில் பகிர்ந்து கொள்ளவில்லை.

நன்மைக்கும் தீமைக்குமான மோதல்களையே தனது படைப்பின் மையப்பொருளாகக் கொண்டிருந்தார் பர்லாகர் க்விஸ்ட்.

பாரபாஸ் நாவலும் இதே கருவைக் கொண்டது தான்.  இயேசுவிற்குப் பதிலாக விடுதலை செய்யப்பட்ட திருடன் பாரபாரஸின் கண்ணோட்டத்தில் இயேசுவின் அற்புதங்களைப்  பற்றி  பேசும் நாவலது.

நோபல் பரிசுக்கு பர்லாகர் க்விஸ்ட் பெயரை ஒன்பது நாடுகள் பரிந்துரை செய்தன. பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தின் முக்கியப் படைப்பாளிகள் பலரும் அவருக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அவரது குள்ளன் நாவல் வெளியான போதே இந்தக் கோரிக்கை எழுந்தது. ஆனால் அப்போது விருது கிடைக்கவில்லை

பாரபாஸ் நாவல் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. ஆறு மாதங்களுக்குள் ஒன்பது மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதோடு ஐம்பதாயிரம் பிரதிகள் விற்பனையாகின. அதுவே  நோபல் கமிட்டியின் கவனத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. 1951ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு  வழங்கப்படது.

பாரபாஸ் நாவல் தமிழில் அன்புவழி என்று க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது 1961ல் ரிச்சர்ட் பிளீஷர் இயக்கத்தில் பாரபாஸ் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது.

நமக்குள்ளிருக்கும் வன்முறையின் வடிவம் தான் குள்ளன். அவனைச் சிறையில் அடைப்பதால் எதுவும் மாறிவிடப்போவதில்லை. நாவலின் முடிவில் அதே இளவரசன் இன்னும் அரியணையில் இருக்கிறான். பகை அப்படியே இருக்கிறது. அதிகாரத்தின் சதிவலை விரிக்கப்பட்டேயிருக்கிறது. மீண்டும் யுத்தம் வரலாம், தான் விடுவிக்கப்படலாம் என்று குள்ளன் உணர்ந்திருக்கிறான். கடைசியில் அதை நினைத்தே அவனது முகத்தில் ஏளனச் சிரிப்பு வெளிப்படுகிறது.

••

0Shares
0