குழப்பம் எனும் நெருப்பு

கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசான்ஸ்சாகிஸ் வாழ்வினை விவரிக்கும் kazantzakis என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். 2017ல் வெளியானது. இதனை யானிஸ் ஸ்மரக்டிஸ் இயக்கியுள்ளார்.

துறவியின் இதயமும் கலைஞனின் கண்களும் கொண்டவர் கசான்ஸ்சாகிஸ். இப்படம் அவரது படைப்புகள் உருவான விதம் மற்றும் அவரது ஆளுமையை அறிந்து கொள்ளத் துணை செய்கிறது. குறிப்பாக இயேசு மற்றும் புத்தர் குறித்த அவரது புரிதலும் பார்வைகளும் படத்தில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தரின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட கசான்ஸ்சாகிஸ். தனது நாடகம் ஒன்றில் சீனாவின் யாங்சி ஆறும் புத்தரும் ஒன்று தான் என்கிறார்

தனது கிரேக்க அடையாளங்களைப் பெருமிதமாக எண்ணும் கசான்ஸ்சாகிஸ் விடுதலை உணர்வும் இன்பங்களைத் தேடும் ஆசையும் கிரேக்கர்களின் அடிப்படை இயல்பு. அதுவே தன்னையும் இயக்குகிறது என்கிறார்.

Report to Greco என்ற கசான்ஸ்சாகிஸின் சுயசரிதை நாவலை அடிப்படையாக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் முன்னுரையில் பயணங்களும் கனவுகளுமே தன்னை உருவாக்கியதாகச் சொல்கிறார். கிறிஸ்துவத் திருச்சபை அவரது The Last Temptation of Christ நாவல் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததோடு அதைத் தடைசெய்யப் போராடியது. அவரையே சாத்தானின் உருவமாகவும் சித்தரித்தார்கள். ஆனால் தன் வாழ்நாள் முழுவதும் அகக்கொந்தளிப்பிலும் தீராத ஆன்மீகப் போராட்டத்தில் இருந்தவர் கசான்ஸ்சாகிஸ். முடிவில் கௌதம புத்தரைத் தனது மீட்சிக்கான வழிகாட்டியாக அறிவித்துக் கொண்டார்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியும் காஃப்காவும் இணைந்து உருவானவர் போலிருக்கிறார் கசான்ஸ்சாகிஸ். அவர் ஒன்பது முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். ஆல்பெர் காம்யூவிற்கு நோபல் பரிசு கிடைத்த ஆண்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் அவருக்கு விருது கிடைக்காமல் போனது

படம் மருத்துவமனையில் துவங்குகிறது. சீனா சென்று திரும்பிய கசான்ஸ்சாகிஸின் வலதுகரம் செயலற்றுப் போகிறது. இனி எப்படி எழுத முடியும் என்ற பயம் அவரை வேதனைக்குள்ளாக்குகிறது. முடிக்கப்படாத தனது படைப்பு குறித்துக் கவலை கொள்கிறார். பிளாஷ்பேக் மூலம் அவரது கடந்தகால வாழ்க்கை விவரிக்கப்படுகிறது

1920-30களில் படம் நடக்கிறது. கசான்ஸ்சாகிஸின் பால்யகாலம். அவரது காதல் வாழ்க்கை. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, ருமேனியா, எகிப்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் சீனா என நீளும் அவரது முடிவில்லாத பயணங்கள். கவிஞர் ஏஞ்சலோஸ் சிகெலியானோஸ் உடன் ஏற்பட்ட நட்பு. ஜோர்பாவை சந்தித்த காலம் என அவரது வாழ்வின் பல்வேறு அடுக்குகளைப் படம் விவரிக்கிறது.

“During my entire life one word always tormented and scourged me, the word ascent. என்று கசான்ஸ்சாகிஸ் எழுதியிருக்கிறார். ஏற்றமும் வீழ்ச்சியுமே அவரது படைப்புகளைப் புரிந்து கொள்வதற்கான சாவிகள். கனவில் சஞ்சரிப்பவர் போல பல காட்சிகளில் கசான்ஸ்சாகிஸ் நடந்து கொள்கிறார்.

கவிஞர் ஏஞ்சலோஸ் சிகெலியானோஸை முதன்முறையாகச் சந்திக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் உரையாடல் அழகானது. கசான்ஸ்சாகிஸ் தொடர்ந்து கனவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார். எளிதில் உணர்ச்சிவசப்பட்டு மயங்கிவிடுகிறார். முடிவு எடுக்க முடியாத குழப்பம். அதீத உணர்ச்சி கொந்தளிப்பு. காதலின் தீவிரம் என அவரது ஆளுமையின் சிதறல் நிஜமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கசான்ஸ்சாகிஸின் தந்தை மூர்க்கமானவர். அவரது மூதாதையர்கள் கடற்கொள்ளையர்களாக இருந்தவர்கள். அவர்கள் செய்த குற்றத்திற்குத் தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனக் கசான்ஸ்சாகிஸ் நினைக்கிறார். தந்தையின் கோபம். கெடுபிடி. போதனைகள் அவரை நடுங்க வைக்கின்றன. ஒரு காட்சியில் அவரைத் தந்தை தரதரவென இழுத்துக் கொண்டு செல்கிறார். அப்போது பலியிட இழுத்துச் செல்லும் ஆட்டுக்குட்டி போலவே கசான்ஸ்சாகிஸ் நடந்து கொள்கிறார்.

தந்தை அவரைக் கல்லறையின் முன்பு மண்டியிட வைத்து மரணத்தைக் கண்டு பயப்படுகிறாயா என்று கோபமாகக் கேட்கிறார். ஆமாம் என்று குரல் நடுங்கச் சொல்கிறார் கசான்ஸ்சாகிஸ். மரணம் என்பது ஒரு கழுதை. அதில் ஏறி நாம் சொர்க்கத்திற்குச் சென்றுவிடலாம், பயப்படாதே என்கிறார் தந்தை.தனது தந்தையின் பிடியிலிருந்து விடுபட முடியாத மனிதராகவே கசான்ஸ்சாகிஸ் வாழ்ந்திருக்கிறார். ஒரு காட்சியில் தந்தை இறந்துவிட்டதாகத் தந்தி வருகிறது. அப்போது தான் விடுதலை பெற்ற மனிதனாக உணர்வதாக மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.

சட்டமும் தத்துவமும் பயின்ற கசான்ஸ்சாகிஸ் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டிருந்தார். இளமையில் மெய்த்தேடல் குறித்த சந்தேகங்களும் குழப்பங்களும் அவரை ஆக்கிரமித்தன. அந்தக் குழப்பங்களே அவரைப் படைப்பாளியாக்கின. சொந்த வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளும் வேதனையும் அவரை நிலைகுலையச் செய்த போது எழுத்தின் வழியே அவர் மீட்சியைக் கண்டறிந்தார். எழுத்து ஒரு வலிநிவாரணி போலச் செயல்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் இருந்த காலத்தில் யூதப்பெண்ணைக் காதலித்து அவளது காதலின் பொருட்டு ரஷ்யா செல்கிறார். கம்யூனிசம் மீது நம்பிக்கை கொண்டிருந்த போதும் ஸ்டாலின் ஆட்சியும் அவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களும் பிடிக்கவில்லை. ரஷ்ய நிலப்பரப்பின் ஊடாக நீண்ட பயணம் செய்து அதன் நிகரற்ற அழகினை எழுதியிருக்கிறார்.

கசான்ஸ்சாகிஸ் 1924 இல் எலெனி சமியோவை சந்தித்தார். அவரது எழுத்துப்பணிக்கு உறுதுணை செய்ய முன்வந்தார் எலெனி. அந்த நட்பு பின்பு காதலாக மாறியது. இந்த நிகழ்வு அப்படியே தஸ்தாயெவ்ஸ்கிக்கும் அன்னாவிற்குமான காதலை நினைவுபடுத்துகிறது

எலெனியிடம் கிரேக்க கடல் மற்றும் காதல் பற்றிக் கசான்ஸ்சாகிஸ் பேசும் இடம் அழகானது.

கசான்ஸ்சாகிஸ் தனது வாழ்வில் தற்செயலவாகச் சந்தித்த ஒரு மனிதர் வழியாக அவரது புகழ்பெற்ற Zorba the Greek நாவல் எப்படி உருவானது எனப் படத்தில் காட்டுகிறார்கள். நாவலில் வரும் ஜோர்பா இன்னும் நெருக்கமாக, உணர்வுப்பூர்வமாக இருந்தார். படத்தில் ஜோர்பா சரியாகச் சித்தரிக்கப்படவில்லை.

மனிதன் சுதந்திரமானவன். எல்லாவிதமான கட்டுப்பாடுகளையும் மீறியவன். கொண்டாட்டத்தை வாழ்வின் நோக்கமாகக் கொண்டவன். இசையும் நடனமும் அவனை இயக்குகின்றன என்கிறான் ஜோர்பா. அதை உணரும் இளம் எழுத்தாளன் தனது கையெழுத்துப்பிரதியைக் காற்றில் பறக்கவிடுகிறான். அந்தக் காட்சி படத்தில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

கசான்ஸ்சாகிஸின் எழுத்து கிரேக்க இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவும் அதே நேரம் நவீனத்துவத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது. இன்று அவரது நாவலை நவீனத்துவத்திற்கு எதிரான பின்நவீனத்துவப் படைப்பு என்று கருதுகிறவர்களும் உண்டு. ஒடிஸியஸ் மற்றும் கிறிஸ்து ஆகியோரின் உருவத்திலும் சாயலிலும் புதிய மாற்றத்தை உருவாக்கிக் காட்டினார். கடந்தகால மௌனத்திடம் கேள்விகளை எழுப்பியதோடு அதற்கான பதிலையும் முன்மொழிந்தார். அந்த வகையில் தனது தனது சொந்த எழுத்தைத் தொன்மமாக மாற்றியவர் கசான்ஸ்சாகிஸ். குழப்பம் எனும் நெருப்பே அவரை வழிநடத்துகிறது. சில நேரங்களில் அந்த நெருப்பு அவரைச் சுடுகிறது. சில தருணங்களில் உலகின் இடர்களிலிருந்து அவரை மீட்கிறது.

இன்று உலகம் முழுவதும் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் நாவல்களைப் போலவே, கசான்ட்சாகிஸின் நாவல்களைப் படிப்பதும் மெய் தேடலின் வழியாகவே அறியப்படுகிறது. இருவரும் கலைக்கும் ஞானத்திற்குமான இடைவெளியை, ஊடாட்டத்தை, இணைவைப் பேசுகிறார்கள். இந்தியாவை மெய்தேடலின் தாயகமாக கருதுகிறார்கள். புத்தரைக் கொண்டாடுகிறார்கள்.

இப்படம் உணர்ச்சிப்பூர்வமாகக் கசான்ஸ்சாகிஸின் ஆளுமையைச் சித்தரிப்பதில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. வாசிப்பின் வழியாக மட்டுமே அவரது ஆழ்ந்த தேடல்களை, புரிதலை நாம் அறிந்து கொள்ள முடியும்.

0Shares
0