எமிதால் மஹ்மூத் (Emtithal Mahmoud) சூடானியக் கவிஞர். அமெரிக்காவில் வசிக்கிறார். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பின் நல்லெண்ண தூதராகச் செயல்பட்டு வரும் இவர் கென்யா, கிரீஸ் மற்றும் ஜோர்டானில் உள்ள அகதிகள் முகாம்களுக்குச் சென்று, அகதிகளின் நிலைமை குறித்து ஆராய்ந்து எழுதி வருகிறார்.
மஹ்மூத் சூடானின் டார்பூரில் பிறந்தவர், 1998 இல் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார். அங்கே பிலடெல்பியாவில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் பின்னர் அவர் யேல் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றார்
யேல் பல்கலைக்கழகத்தில் பயின்ற நாட்களில் கவிதைகள் எழுதத் துவங்கினார். இவரது முதல் கவிதைத் தொகுப்பு Sisters’ Entrance 2018ல் வெளியானது.

Sisters’ Entrance கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். மிகச்சிறந்த கவிதைகள். இளந்தலைமுறையின் புதுக்குரலைக் கவிதையில் கேட்க முடிகிறது
முதன்முறையாகக் குண்டுவெடிப்பதைக் காணும் சிறுமியின் கண்களின் வழியே தன்னைச் சுற்றிய உலகின் அதிகார வெறியை எமிதால் எழுதுகிறார்.
நான் என் அம்மாவிடம்
அவளுடைய பலத்தை எனக்குக் கொடுக்கச் சொன்னேன்.
அவள் ஒரு முழுக் கிரகத்தையும் தூக்க ஆரம்பித்தாள்
தன் முதுகிலிருந்து.
என ஒரு கவிதையைத் துவங்குகிறார். எல்லாப் பெண்களும் தன் தாயிடமிருந்து அவரது பலத்தையே யாசிக்கிறார்கள். ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணிற்குப் பலத்தைத் தர இயலுகிறது. இந்தப் பலம் உடல் ரீதியானதில்லை. மனரீதியானது. நெருக்கடிகளை எதிர்கொண்டு வாழுவதற்கும், எல்லாக் கஷ்டங்களையும் தாண்டி வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளவும் தேவையான பலமது. அதைப் பெண்கள் எப்படியோ பெற்றுவிடுகிறார்கள். எமிதாலின் குரலில் ஒலிப்பது நம் வீட்டுப் பெண்ணின் அகமே.
கடவுள் ஒரு கவிஞர்.
அவர் வானத்தைத் திறந்து,
தன்னுடைய வார்த்தைகளைக் கொட்டினார் நம்
தோலின் மீது
என்று ஒரு கவிதையில் சொல்கிறார். அதன்படி கறுப்பின பெண் என்ற அடையாளம் கடவுளின் சொல்லிலிருந்து உருவானதாகக் குறிப்பிடுகிறார்.

நம்பிக்கை என்பது
மாற்றத்தக்கதல்ல
ஆனால், குற்ற உணர்வைப் போலல்லாமல்,
அது பிரகாசமாக எரிகிறது
இணைந்திருத்தல் மூலம்
என்றொரு கவிதையை எழுதியிருக்கிறார்.
ஒன்றிணைவதன் வழியே தான் நம்பிக்கை ஒளிர ஆரம்பிக்கிறது. நம்பிக்கை பிரகாசமாக எரிகிறது என்பது அழகான வரி.
நம் மூதாதையர்கள் மண்ணிலிருந்தே
இந்த உடலை உருவாக்கினார்கள்
என் வீட்டு ஆண்களுக்கு அல்ல
அந்த எலும்புகளிலுள்ள
களிமண்ணிற்கே நான் விசுவாசமாகயிருப்பேன்
என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார்
இவரது கவிதைகளில் ஆப்பிரிக்கப் பெண் என்ற அடையாளம் குறித்த பொதுப்புத்தியைக் கேள்விகேட்கிறார். கேலிப்பேச்சுகளில் பெண்ணைப் பசுவாகக் கருதும் பழக்கம் உலகம் முழுவதும் வழக்கம் ஏன் அனுமதிக்கப்படுகிறது என்று கோபம் கொள்கிறார்.
குண்டுவெடிப்பு. துர்மரணம். குருதிக்கறை படிந்த நிலம். வன்முறையின் உச்சமான தினப்பொழுதுகள் என நீளும் வாழ்க்கைக்குள்ளிருந்து ஒரு பெண்ணின் தவிப்பை, நினைவுகளை, கோபத்தை, தனித்துவமான உணர்வுகளை மிக அழகாகக் கவிதையில் எழுதியிருக்கிறார் எமிதால்.
இந்தக் கவிதைகளை வாசிக்கையில் மிக நெருக்கமாக உணர்ந்தேன்.
என் இருகைகளில் ஒன்றைத் தருகிறேன்
எடுத்துக் கொள்
எனது குரலைத் தருகிறேன்
உன் வழிகாட்டியாக்கிக் கொள்
என்று ஒரு கவிதையில் தாய் தன் மகளுக்குச் சொல்கிறாள்.
எமிதாலின் கவிதைகளின் வழியே அவரது வாழ்க்கையை மட்டுமில்லை சூடானியப் பெண்களின் தலைமுறை கடந்த கோபத்தையும், ஏக்கத்தையும், அன்பையும் அறியமுடிகிறது என்பதே இந்தத் தொகுப்பின் தனிச்சிறப்பு.
••